search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை குறைந்தது
    X

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை குறைந்தது

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    Next Story
    ×