என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டியில் விவசாயை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் உள்ள பெரிய இலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த வாகிசன்(வயது 39). விவசாயி. இவருக்கும் எஸ். எரிபாளையத்தை சேர்ந்த வசந்த் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வாகிசன் அவரது மனைவி அனுசுயாவுடன் சென்றபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வசந்த் கையில் வைத்திருந்த கத்தியால் வாகிசன் கழுத்து மற்றும் முதுகில் குத்தி காயப்படுத்தினார்.

    இதனை தடுக்க சென்ற அவரது மனைவி அனுசுயாவையும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் அனுசுயா அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேர்தல் விதிமுறைகள் மீறி செயல்பட்டதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.

    சிதம்பரம்:

    கடந்த 2011–ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காலை 10.30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆஜரானார். நீதிபதி வாசுதேவன் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18–ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    பண்ருட்டி அருகே தேர்தல் தொடர்பான முன்விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த அவியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் (வயது 30). அ.தி.மு.க. பிரமுகர். அதே ஊரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஊராட்சி செயலாளராக பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று பலராமன், அவரது வயல்வெளியில் நடந்து சென்றார். அப்போது சரவணன், அவரது உறவினர்கள் 4 பேர் அங்கு வந்து பலராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றி சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பல ராமனை தாக்கினர். இதில் பலராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பலராமனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பலராமனை ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மர்ம நபர்கள் நீ ஆஸ்பத்திரியில் இருக்கக்கூடாது. ஊருக்குள்ளும் வரக்கூடாது. மீறி வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த பலராமன், அவரது மனைவி பிரியா ஆகியோர் குடும்பத்தோடு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது பிரியா போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் புகார் மனு கொடுத்தார்.

    அதில், எங்களை அவியனூர் ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 
    கடலூரில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா வரும் 27-ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கடலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 27.7.2016(புதன் கிழமை) மாலை 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்வு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    விழாவில் நுகர்வோர் தன்னார்வ அமைப்பாளர்கள் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே வட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    பின்னர் மாலை 4.30 மணி அளவில் 2016-ம் ஆண்டிற்கான நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டமும் நடைபெற உள்ளது. அனைத்து நுகர்வோர் தன்னார்வ அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) விஜயா கேட்டுக்கொண்டுள்ளார்.
    கடலூர் மத்திய சிறைச்சாலையில் இன்று சிறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கைதி ஒருவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மத்திய சிறைச்சாலையில் இன்று சிறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது சிறை அறையில் கைதி ஒருவர் மறைமுகமாக நின்று செல்போனில் பேசினார். இதைப்பார்த்த சிறை அலுவலர் வாசுதேவன் உடனே அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தார்.

    செல்போன் பயன்படுத்தியவர் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா வேளப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்ற விஜி(வயது 27) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் வினோத்துக்கு எப்படி செல்போன் வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து தொடர்ந்து செல்போன் சிக்குவது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் பயிற்சி முகாமை கலெக்டர் விஜயா தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரின் அறிவுரைப்படி ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் எண், செல் நம்பர் இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்கும் பயிற்சி முகாம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொறுப்பு) விஜயா தலைமையில் இன்று நடந்தது.

    இதில் கூட்டுறவு துறை, வருவாய்துறை, நுகர்வோர் வாணிப அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர் சாமுவேல்ராஜ் பயிற்சி அளித்தார்.

    குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆதார் எண், செல் நம்பர் ஆகியவற்றை இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

    மேலும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ஒவ்வொரு நியாய விலை கடைக்கும் அனுப்பும் போது அதன் விவரம் குறுந்தகவல் மூலம் விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும்.

    அதே மாதிரி கடையில் உள்ள இருப்பு விவரத்தையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி இன்னும் எவ்வளவு அரிசி, மண்எண்ணெய் வாங்கலாம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    விற்பனை செய்யப்படும் பொருட்களின் விவரம் கம்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதனால் ரேசன் கடையில் இருப்பு குறைவு, போலி பட்டியல் தயார் செய்வது தடுக்கப்படுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் (பொறுப்பு) சக்தி சரவணன், துணைபதிவாளர் சங்கர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பூவேந்திரன் மாவட்ட வழங்கல் அலுவலர் நுகர்வோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் பெண் காயம் அடைந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி ஜெயம்(35). மழைபெய்து கொண்டிருந்தபோது ஜெயம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது இடித்தாக்கியதில் அவர் உடல் கருகியது.

    வீட்டில் இருந்தவர்கள் ஜெயத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சூறைக்காற்று காரணமாக பண்ருட்டி அண்ணா கிராம பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

    அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்ப்பயிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின.

    பண்ருட்டி லட்சுமிநகரில் உள்ள பெரிய மரம் கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்தது.

    பண்ருட்டியில் தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் பண்ருட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு குடிபோதையில் ரவுடிகளுடன் கும்மாளமிடுவது போன்ற காட்சி வாட்ஸ்-அப்பில் வீடியோவாக பரவி பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    காவல் துறையில் தனிப்பிரிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவர்கள் கொடுக்கும் தகவல்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பிரிவு போலீசார் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

    ஆனால் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு குடிபோதையில் ரவுடிகளுடன் கும்மாளமிடுவது போன்ற காட்சி வாட்ஸ்-அப்பில் வீடியோவாக பரவி பெரும்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் செல்வபாண்டியன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடிகளுடன் சேர்ந்து குடித்ததாக தெரிகிறது.

    அப்போது அவர் மயங்கி விழுந்தார். தற்போது அந்த காட்சிகள் வீடியோவில் வாட்ஸ்-அப் தகவல்களாக வெளிவருகின்றன. இது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாட்ஸ்-அப் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தனிப்பிரிவு ஏட்டு செல்வபாண்டியனை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கம்மாபுரம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர்.

    இந்தநிலையில் சிதம்பரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி கடந்த 16-ந்தேதி இரவு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எஸ்.பி.கோவில் தெரு, சிதம்பரம்- சீர்காழி சாலை, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து கீழ வீதிக்கு வந்த போது, அவர்களை செல்லவிடாமல் சிதம்பரம் நகர போலீசார் தடுத்தனர்.

    மேலும் 16 கால் மண்டப தெரு வழியாக செல்லுமாறு போலீசார் கூறினர். இதற்கு தேர்பவனியில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தடையை மீறி தேர்பவனி கீழவீதி வழியாக சென்று, மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது.

    இதையடுத்து, போக்குவரத்து இடையூறு செய்ததாக பங்குதந்தை சூசை, செயலாளர் ஆரோக்கியசாமி, துணை செயலாளர் மோகன் ஆகிய 3 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த விவகாரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு முன்கூட்டியே சரியான தகவலை சிதம்பரம் நகர போலீஸ் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து சிதம்பரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.

    இந்த இருசம்பவங்களும் கடலூர் மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம் அருகே தனியார் கரும்பு ஆலை அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் தனியார் கரும்பு ஆலை அலுவலகம் உள்ளது.

    இந்த கரும்பு ஆலைக்கு கருவேப்பிலங்குறிச்சி, கார்மாங்குடி, நேமம், பேரலையூர், கீரனூர், வல்லம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கரும்புகளை வெட்டி அனுப்புகின்றனர். அவர்களுக்கு இதுவரை கரும்புக்கான உரிய தொகை வழங்கப்பட வில்லை என தெரிகிறது.

    கரும்பு வழங்கியதற்கான நிலுவை தொகையை உடனே வழங்கக்கோரி 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு ஆலை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அலுவலக வாசல் கதவை மூடி பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாமினாபாஷா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது உயர் அதிகாரிகளுடன் பேசி கரும்பு நிலுவை தொகையை பெற்று தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இருப்பினும் கரும்பு விவசாயிகள், நிலுவை தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் தருவது பற்றி எழுத்து மூலமாக உறுதிப்பட எழுதி தர வேண்டும் எனக்கூறி மீண்டும் அலுவலக வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ‘2014-15–ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை இந்தமாத இறுதிக்குள் தரப்படும். 2015-16–ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகை வருகிற செப்டம்பர் இறுதிக்குள் வழங்கப்படும் என உதவி மேலாளர் ஜானகிராமன் எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கினார். இதையடுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பண்ருட்டியில் தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை செய்யப்படுவது குறித்து கருணாநிதி தெரிவித்துள்ள விமர்சனம் கண்டிக்கத்தக்கது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கோவில்களில் சிலை திருட்டு நடந்துள்ளது. இதற்கு இந்து சமய அறநிலைத்துறை பொறுப்பேற்று காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்து திரும்ப அந்தந்த கோவில்களில் ஒப்படைக்க வேண்டும்.

    தபால் நிலையங்களில் கங்கைநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்த கருணாநிதியின் விமர்சனம் கண்டிக்கத்தக்கது.

    சுவாதி கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் இருக்கும் போது, திருமாவளவன் கூறி வரும் கருத்து வழக்கை திசை திருப்பும் விதமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் நேர்மையானவர்களால் அரசியலில் நீடிக்க முடியாது என்று தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் கல்வி வளாக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். பணம் படைத்தவர்களுக்கு போதும் என்ற மனம் கிடையாது. இன்னும் பணம் வேண்டும் என்ற மனம்தான் இருக்கும். தற்போது தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்கு கல்வி தகுதி தேவையில்லை. பணம் இருந்தாலே போதும் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராஜர் இல்லையென்றால் நாடு நிச்சயமாக முன்னேறி இருக்காது. கிராம பகுதி மக்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற முடியும் என்ற நிலையை மாற்றி ஏழை-எளியவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவர் காமராஜர்.

    தமிழகத்தில் 9 ஆண்டுகள் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தார். சுதந்திரத்துக்காக போராடி 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். தியாகம் செய்தார். நாடு சுதந்திரம் அடைந்ததும் இந்தியாவில் பசி பட்டினி ஏற்பட்டு மக்களிடையே சண்டை ஏற்படும் என்று உலக நாடுகள் நினைத்தது. ஆனால் காமராஜர், நேரு, இந்திரா காந்தி ஆகியோரால் உலக அரங்கில் இந்தியா முன்னேறி உள்ளது.

    எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருப்பதில் மரியாதை இல்லை. காமராஜர் போன்று கல்வி தந்தையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

    அரசியல் காரணமாக கடந்த சில நாட்களாக மவுன விரதம் இருந்தேன். முதன் முதலாக பங்கு பெறும் நிகழ்ச்சியாக ராஜீவ்காந்தி பெயருடைய பள்ளியில், காமராஜர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். எனக்கு அரசியல் வேண்டாம். நேர்மையானவர்களால் அரசியலில் நீடிக்க முடியாது. இந்த கிராம மக்களுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தொண்டனாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×