என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் எல்லை காளியம்மன் கோவில் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி வருகிற 29-ந் தேதி செடல் திருவிழா நடக்கிறது.
    கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் அமைந்துள்ள எல்லை காளியம்மன் கோவிலில் ஆடி 2ம் வெள்ளிக்கிழமையையொட்டி வருகிற 29-ந் தேதி செடல் திருவிழா நடக்கிறது.

    இதனை முன்னிட்டு நாளை 28-ந் தேதி வேம்பு அரசு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர் அன்று காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து எல்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை, காலை 11 மணிக்கு வேம்பு அரச திருக்கல்யாண உற்சவமும், இரவு காப்பு கட்டுதல் மற்றும் எல்லை கட்டும் உற்சவமும் நடக்கிறது.

    29-ந் தேதி காலை ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலாவும், மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு 1,008 குடம் நீர் அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சாகை வார்த்தலும், அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு செடல் உற்சவமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.
    பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகேயுள்ள கொத்தட்டையைச் சேர்ந்தவர் வேல்முருகன், கொத்தட்டை ஊராட்சி அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவரது நண்பர் மேகராஜன்(வயது 63). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    கடந்த 21-ந் தேதி இருவரும் மோட்டார் சைக்கிளில் பெண்ணாடத்தில் இருந்து கொத்தட்டைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது தளவாய் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(21), வினோத் குமார் (20), முத்துவேல் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் வேல்முருகன், மேகராஜன், அஜித்குமார், வினோத்குமார் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அஜித்குமாரும், வினோத் குமாரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேல்முருகனும், மேகராஜனும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியர் மேகராஜன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    தெரு விளக்குகள் எரியாததற்கு கண்டனம் தெரிவித்து மின்கம்பத்தில் தீப்பந்தம் கட்டி கவுன்சிலர் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

    கடலூர்:

    கடலூர் நகராட்சி 10–வது வார்டு பகுதியான சுதர்சனம் தெரு, வேணுகோபாலபுரம், உப்பலவாடிமெயின்ரோடு உள்ளிட்ட சில தெருக்களில் கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரியவில்லை.

    இது குறித்து அந்த வார்டு கவுன்சிலரும், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினருமான போஸ்ராமச் சந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும், மின் விளக்குகள் சரி செய்யப்படவில்லை.

    இதனால் கவுன்சிலர் போஸ் ராமச்சந்திரன் நேற்று இரவு 7 மணி அளவில் மின் விளக்கு எரியாமல் இருந்த சுதர்சனம் தெருவில் தீப்பந்தத்தை ஏந்தி போராட்டம் நடத்தினார். பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் தீப்பந்தத்தை கட்டி வைத்தார்.

    பின்னர் இது பற்றி அவர் கூறுகையில், எனது வார்டில் 102 தெரு மின்விளக்குகள் உள்ளன. அதில் 22 தெரு மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இது பற்றி நகரசபை கூட்டத்திலும் பலமுறை வலியுறுத்தி விட்டேன். தலைவர், ஆணையாளர், பொறியாளரிடமும் பலமுறை எழுத்து பூர்வமாக கொடுத்து விட்டேன்.

    ஆனால் இது வரை மின் விளக்குகளை சரி செய்து தரவில்லை. இதனால் எனது வா ர்டில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆகவே இதை தடுக்க மின்விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என்றார்

    கடலூர் அருகே மீனவர்கள் இரண்டு படகுகளுடன் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர்கள் காயம் அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 2 பைபர் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    2 படகுகளில் ஒன்றில் பாலாஜி (வயது 23), குருசங்கர் (37), கார்த்திகேயன் (30), பாஸ்கர் (36) ஆகியோரும் மற்றொரு படகில் குமார் (25), பாலு (45), சக்திவேல் (39) ஆகியோரும் சென்றனர்.

    அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் 2 படகுகளில் இருந்த 7 மீனவர்களும் பலத்த காயம் அடைந்தனர். தூக்கி வீசப்பட்டு நடுக்கடலில் தத்தளித்தனர். இதை அந்த வழியாக விசைப்படகில் சென்ற மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் 7 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மழைபெய்தபோது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, மருங்கூர் பகுதிகளில் நள்ளிரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த கணமழையால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கடலூர் சாலை, கும்பகோணம் சாலை பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணி நேரம் மழை நீடித்தது. மழைபெய்தபோது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    இதேபோல், பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் சுதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு சுதன் வீட்டில் டேபிள்பேன் வைத்து தூங்கினான். கனமழை காரணமாக மழைநீர் வீட்டின் கூரை வழியே டேபிள்பேன் மீது விழுந்து கொண்டிருந்தது. இதனால் பேனில் மின்சாரம் பாய்ந்தது. அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சுதனின் கை எதிர்பாராத விதமாக டேபிள் பேன் மீது பட்டது.

    உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சுதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் வங்கியை முற்றுகையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கல்விக்கடன் வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த மத்திய அரசு மற்றும் ஸ்டேட் பாங்கி நிர்வாகத்தை கண்டித்தும், கல்வி கடனை முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேட் பாங்க் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் அமர்நாத் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லை. கலைந்து செல்லுங்கள் என அறிவுறுத்தினர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் அவர்கள் 20 பேர் கைது செய்தனர்.
    கடலூரில் தடையை மீறி ஊர்வலம் நடத்தியதால் கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    தமிழக வக்கீல்கள் போராட்டத்தை அரசு உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கடலூர் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நிர்வாகிகள் ஜெகத்ரட்சகன், கலிய பெருமாள், ராஜூ, சக்திவேல், ஜெயின்ராம், திருமலை மற்றும் தொண் டர்கள் கடலூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.

    அவர்கள் அங்கிருந்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை என்றனர்.

    இருப்பினும் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 150 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
    பண்ருட்டியில் கல்லூரி சென்ற மாணவர் மாயமானது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள அக்கடவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் விவசாயி. இவரது மகன் பரணி (வயது 19). கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார்.

    கடந்த 19–ந் தேதி பரணி கல்லூரிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவர் பரணியை தேடி வருகின்றனர்.

    கடலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அமைந்து உள்ளனர்.
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தாலுகா கீழ்பூவாணி குப்பத்தை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் தனது கணவர் விக்னேசுடன் இன்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நானும் காயல்பட்டு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் கடந்த 22-ந் தேதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். தற்போது நாங்கள் அன்னவெளி கிராமத்தில் வசித்து வருகிறோம். காதல் திருமணம் செய்த எங்களை கொலை செய்து விடுவோம் என எனது சித்தி மற்றும் அண்ணன் மிரட்டி வருகின்றனர். இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    தேர்தல் விதிமீறல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    பண்ருட்டி:

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடிகர் நெப்போலியன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 18-ந்தேதி டாக்டர் ராமதாஸ் ஆஜரானார். நீதிபதி சரவணபாபு வழக்கை விசாரித்தார். வருகிற 25-ந் தேதிக்கு (இன்று) வழக்கு விசாரணையை தள்ளி வைத்து அன்றைய தினம் டாக்டர் ராமதாஸ் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. டாக்டர் ராமதாஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜரானார். ராமதாஸ் ஆஜாராகாததற்கான காரணம் குறித்து அவர் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி சரவணபாபு ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
    கடலூரில் இன்று மின் கம்பம் மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர். பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை விருத்தாசலத்திற்கு அரசு பஸ் 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பஸ்சை சித்திரைச்செல்வன் ஓட்டினார். பஸ் கடலூர் முதுநகர் பச்சாங்குப்பம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே மற்றொரு அரசு பஸ் வந்தது.

    எதிரே வந்த பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக சித்திரை செல்வன் பிரேக் பிடித்து திருப்பினார். அப்போது பஸ் எதிர்பாராதவிதமாக அவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பம் மீது மோதியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த பெண் போலீஸ் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.

    மின் கம்பத்தின் மீது பஸ் மோதியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 50 பயணிகளும் உயிர் தப்பினர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூரில் 100 பவுன் நகை மோசடி செய்ததாக அடகுகடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் அபய்குமார் என்பவர் அடகுகடை நடத்தி வந்தார். இவரது கடையில் செம்மண்டலம் மற்றும் அதை சுற்றியுள்ள 250–க்கும் மேற்பட்டவர்கள் நகை அடகு வைத்தார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வட்டிக்கடை செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அபய்குமாரை திடீரென்று காணவில்லை. அடகுகடை தொடர்ந்து பூட்டிக்கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தனர்.

    அபய்குமார் நடத்திவந்த அடகுகடையில் 100 பவுனுக்குமேல் அடகு வைத் திருந்தோம். திடீரென்று அவரை காணவில்லை. அவர் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபய்குமாரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அபயக்குமாருக்கு கடையை வாடகைக்கு கொடுத்தவர் இன்று காலை அந்த கடைக்கு வந்தார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றார். இதையறிந்த செம்மண்டலத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அங்கு திரண்டு வந்தனர். அடகுக்கடையை முற்றுகையிட்டனர்.

    நகைமோசடி தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இந்தநிலையில் எப்படி கடையை திறக்கலாம் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் புதுநகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    தலைமறைவாகிவிட்ட அடகு கடைக்காரரை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    மேலும் அடகுக்கடையை திறக்க முயன்றவரிடம் நகை மோசடி தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு இருக்கும்போது கடையை திறக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத் தனர்.

    பின்னர் பொதுமக்கள் அங்கிருந்த கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×