search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அருகே நடுக்கடலில் படகுகள் மோதல்: காயமடைந்த மீனவர்கள் மீட்பு
    X

    கடலூர் அருகே நடுக்கடலில் படகுகள் மோதல்: காயமடைந்த மீனவர்கள் மீட்பு

    கடலூர் அருகே மீனவர்கள் இரண்டு படகுகளுடன் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர்கள் காயம் அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 2 பைபர் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    2 படகுகளில் ஒன்றில் பாலாஜி (வயது 23), குருசங்கர் (37), கார்த்திகேயன் (30), பாஸ்கர் (36) ஆகியோரும் மற்றொரு படகில் குமார் (25), பாலு (45), சக்திவேல் (39) ஆகியோரும் சென்றனர்.

    அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் 2 படகுகளில் இருந்த 7 மீனவர்களும் பலத்த காயம் அடைந்தனர். தூக்கி வீசப்பட்டு நடுக்கடலில் தத்தளித்தனர். இதை அந்த வழியாக விசைப்படகில் சென்ற மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் 7 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×