என் மலர்
கடலூர்
கடந்த 8-ந் தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளையிட்டு, சென்னை ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 6 கோடி ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் சூப்பிரண்டுகள் நாகஜோதி, ராஜேஸ்வரி, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தலைமையிலான போலீசார், தனிப்படைகள் அமைத்து துப்பு துலக்கி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் சென்னையில் நடந்ததா? அல்லது சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு வரும் வழியில் நடந்ததா? இந்த கொள்ளை சம்பவத்திற்கு ரெயில்வே ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று தீவிர விசாரணையில் மேற்கொண்டுள்ளனர்.
இதையொட்டி விருத்தாசலத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு 9 மணி அளவில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
அங்குள்ள ரெயில்வே பார்சல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவம் நடந்த அன்று அவர்கள் எங்கு பணியில் இருந்தார்கள் என்று விசாரித்தனர்.
மேலும் ரெயில்வே மெக்கானிக்கல் பிரிவு, பராமரிப்புத்துறை பிரிவு, துணை மேலாளர் பிரிவு, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.
அவர்களது செல்போன் எண்களை போலீசார் பெற்று தொடர் விசாரணை மேற்கொண்டனர். விடிய விடிய இந்த விசாரணை நடைபெற்றது.
இன்று 2-வது நாளாகவும் விசாரணை நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது தீட்சிதர்களின் செயலாளர் பட்டு ரத்தின தீட்சிதர் தலைமையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் நடராஜர் சபையிலிருந்து தேசியக் கொடியை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கீழ ரதவீதி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தமிழக கோவில்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் தான் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருத்தாசலம்:
சேலத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி இரவு சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளைபோட்டு 6 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழும்பூர் யார்டில் ரெயில் பெட்டி நிறுத்தப்பட்டிருந்தபோது கொள்ளை நடந்ததா? அல்லது சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு ரெயில் மெதுவாக வரும் வழியில் நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
அதில் எழும்பூர் யார்டில் ரெயில்பெட்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கொள்ளை நடந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.
ஆனாலும் கொள்ளை சம்பவத்துக்கான முன்னேற்பாடு பணிகளில் கொள்ளையர்கள் சேலம், சின்னசேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
எனவே கொள்ளையர்கள் இந்த பகுதிகளிலிருந்து சென்னையில் உள்ள நபர்களுடன் செல்போனில் பேசி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே கொள்ளையர்களின் மொபைல்போன் உரையாடலை கண்டறியும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர்.
இதையொட்டி சென்னை சைபர்கிரைம் இன்ஸ்பெக் டர் மாணிக்கவேல் தலை மையில் 6 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விழுப்புரம் வந்தனர். ரெயில் நிலையத்தில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். கடந்த 8-ந் தேதி இரவு விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்போனில் யார் யார்? பேசினார்கள் என்றும், சென்னையில் இருந்து விருத்தாசலத்துக்கு யாருடைய செல்போனுக்கு அழைப்புகள் வந்தது என்றும் விசாரணை நடத்தினர்.
மேலும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம்:
சேலத்திலிருந்து கடந்த 8-ந் தேதி விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் மேல்பகுதியில் துளைபோட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நேற்று முன்தினம் முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நேற்று காலை சின்னசேலம் பகுதியில் ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததா? என்று கேட்டனர்.
அதற்கு அவர்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என்று கூறினர். பின்னர் ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி குடியிருப்பு பகுதிக்கு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரித்தனர்.
பொதுமக்களிடம் தண்டவாளத்தின் அருகே உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்று கேட்டறிந்தனர்.
விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு கடலூர் சி.பி.சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை வந்தனர். கொள்ளை நடந்த சம்பவம் குறித்து ரெயில் நிலைய அதிகாரி (ஸ்டேசன் மாஸ்டர்) ஜெகதீசனிடம் விசாரணை நடத்தினர்.
ரெயில் நின்று சென்ற நேரம், அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். கொள்ளை நடந்த நாளில் பணியில் இருந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். 3 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது.
சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில்வே சுரங்கப்பாதை பணியும், தண்டவாளம் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
அந்த வழியாக ரெயில்கள் மெதுவாக சென்று வருகின்றன. மேலும் அந்த பகுதி ரெயில் தண்டவாளம் அருகே காட்டுப்பகுதியும் உள்ளது. இந்த பகுதியை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு உதவி ஆணையர் விணுதேவ்சச்சின் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூரில் இருந்து விருத்தாசலம் ஜங்சன் வரையிலுள்ள தண்டவாளப்பகுதியில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். அரசு பஸ் கண்டக்டர். இவரது மகள் ஹரினி(வயது 13) பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பள்ளியில் ராஜீவ்காந்தி என்பவர் ஆசிரியராக உள்ளார். இவர் ஹரினியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற ஆசிரியர் ராஜீவ் காந்தியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவியின் தாயார் வனிதா ராஜீவ்காந்தியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ராஜீவ்காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியிடம் எனது மகளை உன் அண்ணன் எங்கு கடத்தி சென்றார் எனக் கேட்டார்.
அதற்கு சஞ்சய் காந்தி தகாத வார்த்தைகளால் பேசியதோடு வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வனிதா அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சய் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் மந்தாரக்குப்பத்தை சேர்ந்த உமா பாரதி பணியாற்றி வருகிறார்.
கடை ஊழியர் உமாபாரதி நேற்று காலை கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த அனைத்து தங்க நகைகளும், வெள்ளி நகைகளும் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையின் பின்புறம் ஒரு ஆள் கடைக்குள் வந்து செல்லும் வகையில் குழி தோண்டி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த கடையின் பின்புறத்தில் உள்ள பள்ளி மைதானத்துக்கும், நகைக் கடைக்கும் இடையில் ஒரு சிறிய சந்து உள்ளது. நள்ளிரவில் மர்ம நபர்கள் பள்ளி மைதானத்தின் வழியாக வந்து, சுற்றுச்சுவரில் ஏறி குதித்து அந்த கடையின் பின்புறத்தில் சுமார் 2 அடி ஆழத்திற்கு குழி தோண்டி சுரங்கப்பாதை அமைத்துள்ளனர்.
பின்னர் அதன் வழியாக கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த லாக்கர் பூட்டை சிறிய ரம்பத்தால் அறுத்து எடுத்து அதில் இருந்த 1½ கிலோ தங்க நகைகளையும், கடையில் அடுக்கி வைத்திருந்த 25 கிலோ வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
கொள்ளை நடந்த நகைக் கடையில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நள்ளிரவில் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஒரு கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்துள்ளனர்.
மற்றொரு கண்காணிப்பு கேமராவை துணியால் மூடியதுடன் லாக்கர் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை செயல் இழக்க செய்துவிட்டு தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இருந்தபோதிலும் அந்த கண்காணிப்பு கேமராக்களையும், அதில் பதிவாகிய காட்சிகளை சேமித்து வைக்கும் கருவியையும் கைப்பற்றி போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மந்தாரக்குப்பத்தில் நேற்று கொள்ளை நடந்த அதே கடையில் கடந்த 2005-ம் ஆண்டும் கொள்ளை நடந்துள்ளது. அப்போது அந்த கடை வேறு பெயரில் இருந்தது. அந்த கடையின் பின்புறத்தில் இருந்து கடைக்குள் சுரங்கம் அமைத்து 2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த கடையை சுரேஷ் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அதே பாணியில் கொள்ளை நடந்துள்ளது.
சுரங்கப்பாதை அமைத்து நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக, கொள்ளையர்கள் கடப்பாறை கம்பி, உளி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். பின்னர் தாங்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்களை நகைக்கடை அருகில் தபால் நிலையத்தின் புன்புறத்தில் உள்ள முட்புதரில் வீசிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம். கடலூர் மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் எதிரே நகைக்கடை உள்ளது. நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் கடையின் பின்பக்கத்தில் இருந்து மண்ணுக்குள் குழி தோண்டி சுரங்கம் அமைத்து கடையினுள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை கதவை திறந்து சுரேஷ் உள்ளே சென்றார். அப்போது சுரங்கம் அமைத்து மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த சுரேஷ் நகைகளை சரிபார்க்கும் போது 1½ கிலோ தங்க நகைகள், 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசுக்கு புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி வந்தது. போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் குறிஞ்சிப்பாடியில் உள்ள என்.எல்.சி.ஊழியர் வீட்டில் 33 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடித்தனர்.
இப்போது நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.
விருத்தாசலம்:
சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளைபோனது.
எந்த இடத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதில் குழப்பமான நிலை நிலவி வருகிறது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமலைசாமி தலைமையில் போலீசார் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை இடையே உள்ள தண்ட வாள பகுதியில் இன்று நடந்து சென்று தடயங்கள் ஏதும் சிக்குகிறதா? என்று ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் சேதுபதி, தமிழ்மாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, குமார், காமினாபானு, புஷ்பராஜ் மற்றும் போலீசார் 2 கி.மீ தூரத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்று கண்காணிப்பு பணியை தொடங்கினர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 1-வது வட்டம் மாற்றுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 85).
சம்பவத்தன்று வீட்டின் அருகில் உள்ள சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது வடலூரில் இருந்து பண்ருட்டிக்கு வேன் வந்தது.
அந்த வேன் எதிர் பாராத விதமாக வெங்டாசலபதி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலபதியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக வெங்கடாசலபதி இறந்தார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:
பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் புறப்பட்டது.
காலை 9 மணிக்கு இந்த பஸ் நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்வது வழக்கம். இதையொட்டி பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்பட பலர் அந்த பஸ்சுக்காக காத்திருந்தனர்.
ஆனால் பஸ்சில் ஏற்கனவே அதிகம் கூட்டம் இருந்ததால் டிரைவர் பஸ்சை அங்கு நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார்.
பஸ்சை நிறுத்தும்படி அங்கே நின்றவர்கள் சத்தம் போட்டனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் பஸ்சின் பின்பகுதியில் சரமாரியாக கல்வீசி தாக்கினர்.
இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு வேகமாக கீழே இறங்கி வந்தார். உடனே பஸ் மீது கல்வீசியர்கள் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டனர்.
பஸ் மீது கல்வீசப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்கள் வேறொரு பஸ்சில் ஏற்றி கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தசம்பவம் தொடர் பாக நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்பேரில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனால் சில நாட்கள் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் மீண்டும் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளன.
நெல்லிக்குப்பத்தில் சமீபத்தில் பள்ளி மாணவியை கத்தியால் குத்தி நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பம் நாயுடு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியர் வெங்கடாசலம் வீட்டில் நேற்று முன்தினம் ஜன்னல் கம்பியை வளைத்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ் பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னதம்பி, செந்தாமரை ஆகியோர் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதிக்கு போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை நடந்த இடத்தில் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையொட்டி கொள்ளையர்களை பிடிக்க டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஒரு தனிப்படையும், இன்ஸ் பெக்டர் கண்ணன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.
டெல்டா பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படையினர் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், வடலூர், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
வடலூர் பஸ் நிலையம் அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.
என்.எல்.சி.ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள நல்லூர் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசந் திரன்(வயது 42). விவசாயி.
இவருக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் கரும்பு தோட்டம் இருந்தது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் கரும்பு தோட்டத்துக்கு மேலே சென்ற மின்கம்பிகள் உரசியதால் தீப்பொறிகள் பறந்தது.
இந்த தீப்பொறிகள் விழுந்து கரும்பு தோட்டத்தில் தீ பற்றியது. சிவசந்திரனின் கரும்பு தோட்டத்துக்கு அருகில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் கரும்பு தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்திற்கும் தீ பரவியது. இதில் கரும்புகள் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் செந்தில் குமார் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர்.






