என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர்களிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
    X

    விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர்களிடம் போலீசார் விடிய விடிய விசாரணை

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளைபோன சம்பவத்தையடுத்து விருத்தாசலம் ரெயில்வே ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடந்த 8-ந் தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளையிட்டு, சென்னை ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 6 கோடி ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் சூப்பிரண்டுகள் நாகஜோதி, ராஜேஸ்வரி, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் தலைமையிலான போலீசார், தனிப்படைகள் அமைத்து துப்பு துலக்கி வருகின்றனர்.

    கொள்ளை சம்பவம் சென்னையில் நடந்ததா? அல்லது சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு வரும் வழியில் நடந்ததா? இந்த கொள்ளை சம்பவத்திற்கு ரெயில்வே ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று தீவிர விசாரணையில் மேற்கொண்டுள்ளனர்.

    இதையொட்டி விருத்தாசலத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு 9 மணி அளவில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

    அங்குள்ள ரெயில்வே பார்சல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவம் நடந்த அன்று அவர்கள் எங்கு பணியில் இருந்தார்கள் என்று விசாரித்தனர்.

    மேலும் ரெயில்வே மெக்கானிக்கல் பிரிவு, பராமரிப்புத்துறை பிரிவு, துணை மேலாளர் பிரிவு, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.

    அவர்களது செல்போன் எண்களை போலீசார் பெற்று தொடர் விசாரணை மேற்கொண்டனர். விடிய விடிய இந்த விசாரணை நடைபெற்றது.

    இன்று 2-வது நாளாகவும் விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×