என் மலர்tooltip icon

    கடலூர்

    நெல்லிக்குப்பம் அருகே பள்ளி நிர்வாகி வீட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மாருதி நகரைச் சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன்(வயது 35). தனியார் பள்ளியில் மேனேஜராக இருந்து வருகிறார்.

    நேற்று இரவு இவரது வீட்டில் மின்தடை ஏற்பட்டது. எனவே புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வசந்தகிருஷ்ணன் வீட்டைப்பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கிவிட்டனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    இன்று காலை வீட்டிற்கு வந்த வசந்தகிருஷ்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். தலைமறைவான கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளி நிர்வாகி வீட்டில் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    சேலத்திலிருந்து விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

    இந்தக்கொள்ளை சம்பவம் சேலத்தில் நடந்ததா? அல்லது சென்னையில் நடந்ததா? என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் மெதுவாக வந்த போது கொள்ளை நடந்ததா என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளை தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பழைய குற்றவாளிகளுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி சென்னை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் ரெயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர்.

    அதேபோல் விருத்தாசலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

    அங்கு பதிவாகியுள்ள கொள்ளை வழக்குகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலையத்தில் இரும்பு பொருட்கள் மற்றும் நகைகள் திருட்டு, ஓடும் ரெயிலில் பயணிகளிடம் தங்கச் சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்தனர்.

    தண்டனை பெற்று வெளியே வந்த அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று கண்காணித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று அவர்களை பிடித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளைடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டையை சேர்ந்தவர் ரகுராமன்(வயது 41). விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டைப்பூட்டி விட்டு குடும்பத்தினருடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றார். இரவு அங்கே தங்கிவிட்டார்.

    இன்று காலை ரகுராமன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசில் ரகுராமன் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக் கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ரெயிலில் ரூ. 6 கோடி கொள்ளை போனது குறித்து சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வித்யா ஜெயந்தி குல்ஹர்னி இன்று விருத்தாசலம் வந்தார். நேரடியாக ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் கொள்ளை நடந்த ரெயில் நின்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருத்தாசலம்:

    சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் மேற்கூரையில் துளைபோட்டு அதில் இருந்த ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் மற்றும் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பிரிவினர் விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலத்தில் சி.பி. சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று ரெயில் பணியில் இருந்த ரெயில் டிரைவர்கள், கார்டு, டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

    மேலும் சம்பவத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தும் சம்பவம் நடந்த அன்றிலிருந்தும் விடுப்பில் உள்ள ரெயில்வே ஊழியர்களின் தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விருத்தாசலம் ஜங்‌ஷன் செல்லும் வழியில் உள்ள கடைகளின் உரிமையாளர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னையில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படையின் குற்றப்பிரிவு போலீசார் நேற்று விருத்தாசலம் வநதனர். சம்பவம் நடந்த அன்று ரெயில் நின்ற 1-வது பிளாட்பாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல திருச்சியில் இருந்தும் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் விருத்தாசலம் வந்தனர். ரெயில் நிலைய மேலாளர், துணை மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் ரெயில்வே துறையில் உள்ள 18 பிரிவுகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் தொலை பேசி எண்கள், அவர்களின் முகவரிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வித்யா ஜெயந்தி குல்ஹர்னி இன்று காலை விருத்தாசலம் வந்தார். நேரடியாக ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் கொள்ளை நடந்த ரெயில் நின்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சம்பவத்தன்று பணியில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? என்று விசாரித்தார். கொள்ளை தொடர்பாக சேகரிக்கப்பட்ட விவரங்களை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரியிடம் கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து விருத்தாசலத்தில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு ரெயில்வே போலீஸ் அதிகாரிகள், சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

    கொள்ளை தொடர்பாக தடயங்கள் ஏதேனும் சிக்கி உள்ளதா? என்று விசாரித்தார்.

    சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் 24 பவுன் நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் குடும்பத்தினருடன் கடலூரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்து விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவில் இருந்த 24 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை வீட்டிற்கு வந்த சுரேஷ், கொள்ளை நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

    கிரானைட் முறைகேடு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி கடந்த நவம்பர் மாதமே சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டோம். தீர்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறோம் என்று சகாயம் கூறினார்.

    கடலூர்:

    கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள வள்ளலார் நகரில் கடலூர் மாவட்ட மக்கள் பாதை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மக்கள் பாதை அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- கிரானைட் முறைகேடு வழக்கு எந்த நிலையில் உள்ளது?

    பதில்:- கிரானைட் முறைகேடு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி கடந்த நவம்பர் மாதமே சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டோம். தீர்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக நல்ல பதில் வரும் என நம்புகிறோம்.

    கே:- மக்கள் பாதை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளீர்கள். அதன் நோக்கம் என்ன?

    ப:- மக்கள் பாதை அலுவலகம் இளைஞர்களுக்கான அமைப்பு. தமிழ்நாட்டில் இப்போது விவசாயம் மோசமான நிலையில் உள்ளது. விவசாயத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்.

    நிறைய இளைஞர்கள் படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுயதொழில் தொடங்க வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    ஏரி-குளங்கள், மரங்கள் போன்றவைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். இதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம்.

    கே:- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாதை அமைப்பு பங்கேற்குமா?

    ப:- மக்கள் பாதை அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் அரசியலில் பங்கேற்க மாட்டோம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூரில் அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் வண்ணார பாளையம் கே.கே. நகர் கம்பன் தெருவைச் சேர்ந்தவர் ராஜமச்சேந்திரசோழன் (வயது 62). கால்நடை பராமரிப்புத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மருமகள் கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அவரை புதுவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 19-ந் தேதி சேர்த்தனர்.

    இதனால் ராஜமச்சேந்திரசோழன் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு புதுவைக்கு சென்றிருந்தனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் 4 பீரோக்கள் இருந்தன. அந்த பீரோக்களை உடைத்தனர்.

    அதில் இருந்த 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் லேப்-டாப், ஐபோன், கேமரா, ஏ.டி.எம்.கார்டு ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    இன்று காலை ராஜமச்சேந்திரசோழன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தேவனாம்பட்டிணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளை நடந்த இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு தேவனாம்பட்டிணத்தை நோக்கி ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்தில் தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
    பெண்ணாடம்:

    திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சீனிவாசராகவன் (வயது 37). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது தாயார் உச்சிவனம் (60) உடல் நலம் பாதிக்கப்பட்டது. தாயாரை பார்ப்பதற்காக சீனிவாச ராகவன் ஸ்ரீரங்கம் வந்தார்.

    பின்னர் தனது தாயார் உச்சிவனம் மற்றும் அக்காள் விஜயலட்சுமி (45) யுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத் திரிக்கு காரில் சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து 3 பேரும் நேற்று மாலை ஸ்ரீரங்கத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை சீனிவாசராகவன் ஓட்டிவந்தார்.

    நள்ளிரவு 1 மணி அளவில் கார் ராமநத்தத்தை அடுத்த அதர்நத்தம் கைகாட்டி பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அந்த சமயத்தில் காருக்கு முன்னால் லாரி சென்று கொண்டிருந்தது. லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் உச்சிவனம், விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் இறந்தனர். சீனிவாச ராகவன் சீட்பெல்ட் அணிந் திருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேப்பூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு காருக்குள் சிக்கி உயிரிழந்த தாய்-மகள் உடல்களை மீட்டனர்.

    காயமடைந்த சீனிவாச ராகவனை போலீசார் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உச்சிவனம், விஜயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விருத்தாசலம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த் 3 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எடைசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் வெற்றிவேல்(வயது 10). இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி(10), குமரவேல்(10) ஆகியோரும் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று காலை 3 பேரும் பள்ளிக்கு சென்றனர். பள்ளி முடிந்ததும் மாலையில் வீடு திரும்பினர். பின்னர் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு 3 பேரும் புறப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் கோவில் விழாவுக்கு செல்லவில்லை. அங்குள்ள ஏரிக்கு சென்றனர். ஏரியில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.

    அந்த சமயத்தில் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் சகதியில் சிக்கினர். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற யாரும் வரவில்லை.

    வெற்றிவேல், கார்த்தி, குமரவேல் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் அவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

    மாணவர்கள் 3 பேரும் இரவு வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அவர்களை தேடினர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அங்குள்ள ஏரியில் வெற்றிவேல், கார்த்தி, குமரவேல் ஆகிய 3 பேரின் பிணங்களும் மிதந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மங்கலம் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கி பலியான 3 மாணவர்களின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. ஒரே கிராமத்தில் 3 மாணவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவில் விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    விருத்தாசலத்தை அடுத்த டி.வி புத்தூரை சேர்ந்த குணசேகரன் மற்றும் இவரது உறவினர்கள் ராஜா, மருதமுத்து, மல்லிகா, தமிழ்ச்செல்வன், தனலட்சுமி ஆகியோர் இதே பகுதியிலுள்ள படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொங்கலிட்டனர். அப்போது இதே பகுதியை சேர்ந்த உதயகுமார் அவரது தந்தை பழமலை, உதயகுமாரின் மனைவி தீபா, மற்றும் உறவினர்கள் மணிமாறன், பாபு ஆகியோரும் கோயிலில் பொங்கலிட்டனர். இரு தரப்பினரிடையே ஏற்கனவே மனைத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கோவில் விழாவில் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும ஒருவரையொருவர் கட்டையாலும் தாக்கி கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

    இது குறித்து குணசேகரன் கொடுத்த புகாரின்பேரிலும், மற்றொரு தரப்பில் உதயகுமாரின் மனைவி தீபா, தான் அணிந்திருந்த 1 பவுன் தாலிசங்கிலியை பறித்துக்கொண்டு தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் இருதரப்பை சேர்ந்த ராஜா, மருதமுத்து, உதயகுமார், பழம ஆகிய 4 பேரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அன்பழகன் கைது செய்தார்.
    பண்ருட்டி அருகே ஆசிரியர் அடித்ததால் வி‌ஷம் குடித்த 9-ம் வகுப்பு மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவரது மகன் விக்னேஷ் (வயது 14). சேந்தநாடு பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். வீட்டில் யாரிடமும் பேசாமல் கவலையுடன் இருந்தான்.

    இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விக்னேசை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து விக்னேசின் தந்தை ராதா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நேற்று பள்ளியில் விக்னேசிடம் வகுப்பு ஆசிரியர் தேர்வு கட்டணம் கேட்டுள்ளார். இதற்கு விக்னேஷ் நாளை தருவதாக கூறியுள்ளான்.

    இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் விக்னேசை அடித்துள்ளார். இதில் மனம் உடைந்த விக்னேஷ் வி‌ஷம் குடித்து விட்டான். எனவே ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.எல்.சி. தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து நெய்வேலி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் மணிநாதன் (வயது 34). இவர் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்தார்.

    இவர் நேற்று மாலை நெய்வேலி மத்திய பஸ் நிறுத்தத்தின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×