என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. ஊழியர் வீட்டில் ரூ.33 லட்சம் கொள்ளை: 2 வாலிபர்கள் சிக்கினர்
    X

    என்.எல்.சி. ஊழியர் வீட்டில் ரூ.33 லட்சம் கொள்ளை: 2 வாலிபர்கள் சிக்கினர்

    என்.எல்.சி. ஊழியர் வீட்டில் ரூ.33 லட்சத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதன்பேரில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனால் சில நாட்கள் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் மீண்டும் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளன.

    நெல்லிக்குப்பத்தில் சமீபத்தில் பள்ளி மாணவியை கத்தியால் குத்தி நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பம் நாயுடு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியர் வெங்கடாசலம் வீட்டில் நேற்று முன்தினம் ஜன்னல் கம்பியை வளைத்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ் பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னதம்பி, செந்தாமரை ஆகியோர் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதிக்கு போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொள்ளை நடந்த இடத்தில் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையொட்டி கொள்ளையர்களை பிடிக்க டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஒரு தனிப்படையும், இன்ஸ் பெக்டர் கண்ணன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.

    டெல்டா பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படையினர் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், வடலூர், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    வடலூர் பஸ் நிலையம் அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.

    என்.எல்.சி.ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×