என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 26). இவர் கடந்த மே மாதம் 15-ந் தேதி விருத்தாசலத்தில் நடந்த கொலை வழக்கில் கைதானார். சிறைக்கு சென்ற அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தினமும் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்த நிலையில் விக்னேஷ்வரன் இன்று காலை விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். விருத்தாசலம் தெப்பக்குளம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் அவர் மீது மோதியது.

    நிலை தடுமாறி கீழே வழுந்த விக்னேஷ்வரனை காரில் இருந்து இறங்கிய 4 பேர் கும்பல் சுற்றிவளைத்து வெட்ட முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிய விக்னேஷ்வரன் விருத்தாசலம் புதுப்பேட்டை சாலையில் ஓடினார். எதிர்பாராத விதமாக நடுரோட்டில் நிலை தடுமாறி விழுந்தார்.

    உடனே அந்த கும்பல் விக்னேஷ்வரனின் கழுத்து, கை, கால்களில் சரமாரியாக வெட்டியது. பலத்த காயம் அடைந்த விக்னேஷ்வரன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விக்னேஷ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மே மாதம் நடந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் விக்னேஷ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    விருத்தாசலத்தில் பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    கடலூர் மத்திய சிறையில் இன்று கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இங்கு உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 24) சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

    மணிகண்டன் இன்று காலை சிறையில் உள்ள கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினான். அதிர்ச்சி அடைந்த கைதிகள் சிறைவார்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மணிகண்டன் கடந்த 2014-ம் ஆண்டு திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த ஞானாம்பாள், சாந்தா, 2015-ம் ஆண்டு கலா ஆகிய 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இந்தவழக்கு உள்பட மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மணிகண்டன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மத்திய சிறை வளாகத்தில் சிறைகைதி தூக்குபோட்டு தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மத்திய சிறையில் கடந்த 6 மாதங்களில் 5 கைதிகள் தற்கொலை செய்துள்ளனர்.

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று 105 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமண விழாவையொட்டி அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோத தொடங்கியது.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணம் நடைபெறும்

    ஹயக்ரீவர் ஜெயந்தி விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேவநாத சாமி கோவிலில் 105 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

    திருமண விழாவையொட்டி அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோத தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது.

    திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தம்பதிகளின் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்ததால் திருவந்திபுரம்-பாலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுவை, கடலூர்- விழுப்புரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து இந்த கோவிலுக்கு திருமணம் செய்து கொள்ள பொதுமக்கள் அதிகம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிதம்பரத்தில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி பாலத்தின் குறுக்கே நின்றது. இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை.

    சிதம்பரம்:

    சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு கியாஸ் டேங்கர் லாரி புறப்பட்டது. அந்த லாரி இன்று காலை 8 மணி அளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென்று லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி பாலத்தின் குறுக்கே நின்றது.இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை.

    இன்று முகூர்த்த நாளாகும். மேலும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    விபத்துகுறித்து போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வெகு நேரமாகியும் யாரும் வரவில்லை.

    சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்கு பின்னர் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பாலத்தின் குறுக்கே நின்ற கியாஸ் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.

    சிறிது நேரத்தில் லாரி அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து 12 மணி அளவில் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    கியாஸ் டேங்கர் லாரி பாலத்தின் குறுக்கே நின்றதால் சிதம்பரம்- கும்பகோணம் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    மத்திய அரசை கண்டித்து 10 தொழிற் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி. ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தியது.

    பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அவர்களை போலீசார் ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடலூர் உழவர் சந்தை அருகே இன்று காலை அனைத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த 315-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக மஞ்சக்குப்பத்தில் மறியல் செய்ய புறப்பட்டனர்.

    லாரன்ஸ் ரோடு பகுதியில் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    விருத்தாசலத்திலும் காதலிக்க மறுத்த நர்சை வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    விழுப்புரத்தில் மாணவி நவீனா ஒருதலைகாதல் விவகாரத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அந்த சோகச்சுவடுகள் நீங்கும் முன்பு விருத்தாசலத்திலும் காதலிக்க மறுத்த நர்சை வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் புஷ்பலதா (வயது 21). விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் புஷ்பலதா நர்சாக பணியாற்றி வருகிறார். தினமும் ஆஸ்பத்திரிக்கு சைக்கிளில் சென்று வருவார்.

    சம்பவத்தன்று இரவு பணியை முடித்து விட்டு சைக்கிளில் புஷ்பலதா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பூதாமூர் பழைய காலனி பகுதியில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (22) என்பவர் அங்கு வந்தார். புஷ்பலதாவை வழிமறித்த அவர் கேலி, கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த புஷ்பலதா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் புஷ்பலதாவின் உறவினர்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, தனசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பின்னர் போலீசார் பிரச்சனை குறித்து புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனசேகர், புஷ்பலதாவை ஒரு தலையாக காதலிப்பதும், புஷ்பலதா மறுத்ததால் அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து புஷ்பலதாவின் அக்கா கமலா கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனசேகர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து, கடலூர் போலீசார் தனசேகரை விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தனசேகரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
    விருத்தாசலம் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    கடலூர்:

    விருத்தாசலம் மேட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா(வயது 60). இவரது மகன் சண்முகம்(26). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமரேசனுக்கும்(25) முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 24.10.2014ல் குமரேசன் அவரது நண்பர்கள் வினாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சக்கரவர்த்தி, பாலமுருகன் ஆகியோர் சண்முகத்திடம் தகராறு செய்தனர்.

    அப்போது சண்முகத்தை குமரேசன் உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதை தடுக்க வந்த சண்முகத்தின் தாய் சகுந்தலாவும் தாக்கப்பட்டார். இதில் சகுந்தலா அதேஇடத்தில் துடிதுடித்து இறந்தார். சண்முகம் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் குமரேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    குமரேசனின் நண்பர்கள் விநாயகமூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சக்கரவர்த்தி, பாலமுருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
    பண்ருட்டியில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுப்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள இருளன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி(வயது 32). பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் மின்உற்பத்தி நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    இவருக்கும் வடலூர் அருகே உள்ள சேப்பளா நத்தத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரியான சரண்யாவிற்கும்(24) கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    பின்னர் சரண்யாவிடம் சிவமூர்த்தி கூடுதலாக வரதட்சணை கேட்டு அவரை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 15-ந்தேதி சேப்பளாநத்தத்தில் இருந்து இருளன்குப்பத்திற்கு சரண்யாவை அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

    நேற்று முன்தினம் சேப்பளாநத்தத்தில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் சரண்யாவும், அவரது மாமியாரும் சேப்பளாநத்தம் சென்றனர்.

    அப்போது சரண்யாவிடம் உங்கள் வீட்டுக்கு சென்று பணம் மற்றும் நகை வாங்கி வா என்று சரண்யாவை அவரது மாமியார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து சரண்யா அவரது பெற்றோர் வீட்டில் இருந்தார்.

    நேற்று இரவு சரண்யாவிடம் 6 பவுன் நகையை அவரது பெற்றோர் கொடுத்து அனுப்பினர். வடலூரில் இருந்து சிவமூர்த்தி மோட்டார் சைக்கிளில் சரண்யாவை ஏற்றிக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

    அவர் நேராக இருளன்குப்பம் செல்லாமல் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சென்றார். அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சரண்யா படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் சரண்யா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் சிவமூர்த்திக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இதைஅறிந்த சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் சரண்யாவின் தாய் சாந்தி பண்ருட்டி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் சரண்யாவின் சாவில் மர்மம் இருக்கிறது.

    விபத்தினால் சரண்யா சாகவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு திட்டமிட்டு அவளை அவரது கணவர் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    சரண்யா சாவு தொடர்பாக சிவமூர்த்தியை கைது செய்யும் வரை சரண்யாவின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை காலத்துக்கு பிறகும் வெயிலின் அளவு சதத்தை தாண்டியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் தொடங்கிய பலத்த மழை 2 மணிநேரம் கொட்டி தீர்த்தது. வழக்கம்போல் நேற்று காலை வெயில் அடிக்க தொடங்கியது. மதியம் 3 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டியது.

    கடலூர் மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், கோண்டூர், கூத்தப் பாக்கம், பாதிரிக்குப்பம், துறைமுகம், சிப்காட், ரெட்டிச்சாவடி, திருவந்தி புரம், வெள்ளகேட், காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருகி ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக வெப்பம் தனிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இடி தாக்கியதில் மாணவி காயம் அடைந்தார்.
    கடலூர்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. காதை செவிடாக்கும் சத்தத்துடன் பலத்த இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தென்னை மரத்தின் அருகே வீட்டில் படித்துக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி பராசக்தி(வயது 13)க்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுக்றிது

    கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பண்ருட்டியில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக திருப்பாதிரி புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று பிரதோச விழாவுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

    விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை 3 மணிவரை பெய்து கொண்டே இருந்தது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, வானூர், மரக்காணம் உள்பட பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது.
    பெண்ணாடம் அருகே மேம்பால தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் டாக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெண்ணாடம்:

    திருச்சியை அடுத்த ராஜராஜசோழபுரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 27). டாக்டர்.

    இவர் சென்னையை அடுத்த திருவள்ளூரில் தங்கி மேற்படிப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு நவீன் தனது காரில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார்.

    நள்ளிரவு 1.30 மணி அளவில் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதனால் நவீன் மிகவும் சிரமப்பட்டு காரை ஓட்டினார். திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    விபத்து குறித்த தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாட்டிற்குள் சிக்கி பலியான டாக்டர் நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி என்.எல்.சி. யில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. யில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த, இன்கோசர்வ் மற்றும் ஹவுசிகோஸ் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை நெய்வேலி ஸ்கியு பாலத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    போராட்டத்திற்கு ஒப்பந்த சி.ஐ.டி.யூ. தலைவர் மாதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சுகுமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தனியாக போராடாமல், நிரந்தர தொழிலாளர்களுடன் இணைந்து போராட வேண்டுகிறேன். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தொமுச, சி.ஐ.டி.யூ. உறுதுணையாக இருந்து முன்னெடுத்துச் செல்வோம் என இத்தருணத்தில் உறுதி அளிக்கிறேன் என்றார்.

    இதில் ஒப்பந்த சங்க நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ. சீனிவாசன், தொ.மு.ச. பழனிவேல், ஸ்டாலின், செந்தில்குமார், பழனிவேல், ஐ.என்.டி.யூ.சி. சுகுமார், ஜானகிராமன், அ.தொ.ச. ராஜபாண்டியன், பாட்டாளி சங்க குப்புசாமி, முருகவேல், காமராஜ், எல்.எல்.எப். சவுந்தர், வாழ்வுரிமை சங்க அன்பழகன், தேவராஜ், திருநாவுக்கரசு, பி.எம்.எஸ். விக்னேஸ்வரன், ஐ.டி.யூ. சங்க பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×