என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரண்யா
    X
    சரண்யா

    பண்ருட்டியில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுப்பெண் மர்மசாவு: உறவினர்கள் போராட்டம்

    பண்ருட்டியில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுப்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள இருளன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி(வயது 32). பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் மின்உற்பத்தி நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    இவருக்கும் வடலூர் அருகே உள்ள சேப்பளா நத்தத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரியான சரண்யாவிற்கும்(24) கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    பின்னர் சரண்யாவிடம் சிவமூர்த்தி கூடுதலாக வரதட்சணை கேட்டு அவரை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 15-ந்தேதி சேப்பளாநத்தத்தில் இருந்து இருளன்குப்பத்திற்கு சரண்யாவை அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

    நேற்று முன்தினம் சேப்பளாநத்தத்தில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் சரண்யாவும், அவரது மாமியாரும் சேப்பளாநத்தம் சென்றனர்.

    அப்போது சரண்யாவிடம் உங்கள் வீட்டுக்கு சென்று பணம் மற்றும் நகை வாங்கி வா என்று சரண்யாவை அவரது மாமியார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து சரண்யா அவரது பெற்றோர் வீட்டில் இருந்தார்.

    நேற்று இரவு சரண்யாவிடம் 6 பவுன் நகையை அவரது பெற்றோர் கொடுத்து அனுப்பினர். வடலூரில் இருந்து சிவமூர்த்தி மோட்டார் சைக்கிளில் சரண்யாவை ஏற்றிக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

    அவர் நேராக இருளன்குப்பம் செல்லாமல் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சென்றார். அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சரண்யா படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் சரண்யா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் சிவமூர்த்திக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இதைஅறிந்த சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் சரண்யாவின் தாய் சாந்தி பண்ருட்டி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் சரண்யாவின் சாவில் மர்மம் இருக்கிறது.

    விபத்தினால் சரண்யா சாகவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு திட்டமிட்டு அவளை அவரது கணவர் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    சரண்யா சாவு தொடர்பாக சிவமூர்த்தியை கைது செய்யும் வரை சரண்யாவின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×