என் மலர்tooltip icon

    கடலூர்

    கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தக்கோரி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 500 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீடு ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

    கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து 1 யூனிட் மின்சாரம் கூட வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் லாரிகளிலும், டிராக்டர்களிலும் வந்து நெய்வேலி ஆர்ச்கேட் அருகே குவிந்தனர்.

    அங்கிருந்து அவர்கள் நெய்வேலி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். மாநிலத்தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பட்டை நாமம் வரைந்த பேப்பரை சட்டையில் குத்தியிருந்தனர். மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து கோ‌ஷமிட்டபடி வந்தனர்.

    ஊர்வலம் நடைபெற்றதையொட்டி என்.எல். சி. தலைமை அலுவலகம் மற்றும் ஆர்ச்கேட் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகளை போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி முற்றுகையிட முயன்ற 500 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டத்தையொட்டி நெய்வேலியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதுதொடர்பாக மாநில தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீடு ஒழுங்குமுறை வாரியத்தை ஓரிரு வாரங்களில் அமைக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு காவிரி நீர் தரமாட்டோம் என்று கர்நாடக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் அனுப்ப கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வதங்கியுள்ளன. எனவே தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விடாவிட்டால் நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு மின்வினியோகம் செய்வதை தடுப்போம் என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
    நெய்வேலி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இருந்து மின் வினியோகம் செய்வதை நிறுத்தகோரியும், என்.எல்.சி.தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    விவசாய சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-

    தமிழக மக்களின் அடிப்படையான தொழில் விவசாயம்.

    விவசாயத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    ஆனால் பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

    அரசியல் லாபத்துக்காக இவ்வாறு செயல்படும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் அழைத்து ரெயில் மறியல் மற்றும் சாலைமறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

    நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினோம்.

    நெய்வேலியில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு காரணம் என்.எல்.சியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது. இதை மீறி இனியும் மின்சாரம் வழங்கப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து என்.எல்.சி.சுரங்க அலுவலகங்களை முற்றுகையிட்டு பூட்டுபோடும் போராட்டம் நடத்துவோம்.

    நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு 600 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் 1 யூனிட் மின்சாரம் கூட அவர்களுக்கு வழங்கக்கூடாது. கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடுத்து நிறுத்துவோம்.

    காவிரி நீர் பிரச்சனை சம்பந்தமாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து பேசமுடியவில்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பதவியை ராஜனாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    நெய்வேலியில் இன்று என்.எல்.சி. இந்தியா தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நெய்வேலி ஆர்ச்கேட் அருகே தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் காலை 10 மணிக்கு தொ.மு.ச. பேரவை துணை தலைவர் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ராசவன்னியன் தலைமையில் அங்கிருந்து 1-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி.தலைமை அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவிரி உரிமை மீட்பு தலைவர் பாண்டியன், என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வீர.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சேகர், தி.மு.க.இலக்கிய அணி செயலாளர் செயலாளர் தமிழரசன், தொ.மு.ச. ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிவேல், ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் இலக்கியா ரவி, எஸ்.எஸ்.இளஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தையொட்டி என்.எல்.சி. ஆர்ச்கேட் பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்களை பாதி வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    தடையை மீறி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டுச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    தொடர்ந்து என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
    கடலூர் ஜெயிலில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் தேவா(வயது 28). திருட்டு வழக்கில் கைதான இவர் கடலூர் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு தேவா சிறையில் உள்ள தனது அறையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்தனர். அப்போது தேவா, ஆணிகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவாவை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் ஜெயிலில் கைதிகள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று கைதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை அரசு உடனே கூட்ட வேண்டும் என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
    கடலூர்:

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட த.மா.கா.வினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், காவிரி நீர் பிரச்சனையில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க கோரியும் அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    த.மா.கா. சார்பிலும் ஏராளாமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சையில் நாளை நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். கடலூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல.

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியும் காவிரி நீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. இந்தியாவில் 125 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

    இதில் 25 கோடி மக்கள் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளனர். இதில் பெரும்பாலனாவர்கள் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவாக இருக்க வேண்டும்.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

    ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கடலூரில் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., த.மா.கா., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

    10.40 மணியளவில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக அவர்கள் அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். பாதி வழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ரெயில் மறியல் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். ஆனால் அதை மீறி அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேகமாக ரெயில் நிலையத்தை நோக்கி சென்றனர். ரெயில் நிலையம் அருகே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்தன.

    அதன்முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ரெயில் நிலையத்தை நோக்கி வந்தவர்களிடம் இதைதாண்டி ரெயிலை மறிக்க நீங்கள் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர்.

    இதனால் போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

    போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் 4 புறமும் சிதறி ஓடினர்.

    அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தின் சட்டை கிழிந்தது. இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் குளோப் காயமடைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ.இளபுகழேந்தி, உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிதம்பரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    பண்ருட்டி அருகே தேர்தல் முன்விரோதத்தில் பஞ். தலைவர் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்தனர். வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி உள்பட பல்வேறு பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எனதிரி மங்கலம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் காசிலிங்கம் (வயது 45). அ.தி.மு.க. பிரமுகர். இவர் இன்று காலை எனதிரி மங்கலத்திலிருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். பின்னர் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்தனர். வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி உள்பட பல்வேறு பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இதையடுத்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மினி லாரியையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் காசிலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது.

    பஞ்சாயத்து தலைவர் வீட்டை சூறையாடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விருத்தாசலம் அருகே மினி லாரி திடீரென வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விருத்தாசலம்:

    கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 54), அதே பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (60). இவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    இந்த வேனை மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் (47) என்பவர் ஓட்டி சென்றார். விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நேற்று இரவு 11 மணிக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென்று வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் வேனின் முகப்பு பகுதியும், மினி லாரியும் சேதம் அடைந்தன. வேனில் பயணம் செய்த ஜேக்கப் மட்டும் காயமடைந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரும், அவருடன் வந்த மற்றொருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த விருத்தா சலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 3 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி தாலுகா மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் போலி டாக்டர்கள் இருப்பதாக சுகாதார துறைக்கு புகார் வந்தது.

    இதையடுத்து கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாதவி தலைமையிலான குழுவினர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள கிளினிக்குக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (வயது 38) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், பல் மருத்துவத்துக்கு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.

    இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜகணபதி, நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர்.

    இதேபோல் பண்ருட்டியிலும் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    பண்ருட்டி காமராஜர் நகர் போலீஸ் லைனை சேர்ந்தவர் நீலமேகம் (50). இவர் மருத்துவம் படிக்காமல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள மருந்து கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக அரசு டாக்டர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலமேகத்தை கைது செய்தனர்.
    ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூரைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி அம்சாயாள்(67). இவரும் இவரது மகள் கஸ்தூரியும் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்க் சென்றனர்.

    பின்னர் துறையூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். பஸ் பாலக்கரையில் இருந்து கடைவீதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது அம்சாயாள் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பறித்துச்சென்றனர்.

    இதுகுறித்து அம்சாயாள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    சிதம்பரத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் வேங்கான் தெருவை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 70). பொதுப்பணித்துறையில் உதவியாளராக வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் வேங்கான் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

    ராஜலட்சுமி தஞ்சாவூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். ராமானுஜம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவர் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார்.

    நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை விழித்தெழுந்த ராமானுஜம் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராமானுஜம் வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரமோற்சவம் 16-ந் தேதி நடக்கிறது.
    பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது ஹேமாம் புஜவல்லி சமேத சரநாராயண பெருமாள் கோவில்.

    இது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு ஏகதின பிரமோற்சவ உற்சவம் நாளை மறுநாள் (16-ந் தேதி) நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு விடியற்காலை 4 மணிக்கு சுப்ரபாதம், 4.30 மணிக்கு தோமாலை சேவை, 6 மணிக்கு கொடியேற்றம், 8 மணிக்கு அம்ச வாகன சேவை, 9 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 11 மணிக்கு சே‌ஷ வாகன சேவை, 12 மணிக்கு கருட வாகன சேவை, 3 மணிக்கு யானை வாகன சேவை, 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவை, 6 மணிக்கு திருத்தேர் உற்சவ சேவை, 7 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 7 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது

    இதற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் ஆலய தக்கார் ஜெயசித்ரா, செயல் அலுவலர் ராஜாசர வணகுமார், ஆலய அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார் மற்றும் விழாக்குவினர் செய்துவருகின்றனர்.

    ×