என் மலர்
கடலூர்
திட்டக்குடியில் இருந்து சிதம்பரத்திற்கு 50 பயணிகளுடன் தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. அந்த பஸ் பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது எதிர்பாராதவிதமாக தனியார் பஸ் மோதியது. இதில் அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நிற்காமல் சென்ற தனியார் பஸ்சை அந்த பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.
விபத்து பற்றி தகவல் அறிந்த துறையூர் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு துறையூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் ராஜா சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், துறையூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க உடனடியாக வேகத்தடை, தடுப்புவேலி உடனடியாக அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆர்.டி.ஓ.வும் சம்பவ இடத்திற்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களின் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான தீபாவளி வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி பணியாற்றி வருபவர்களும், படித்து வருபவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேற்று முதல் சிறப்பு பஸ்களை இயக்கப்படுகின்றன. தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி கடலூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 273 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 1-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) வரை இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம், கரூர், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், ஓசூர், பெங்களூரு, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், செஞ்சி, ஆரணி, காஞ்சீபுரம், சேத்பட் உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர பயணிகளின் வசதிக்காகவும் தேவைக்கேற்பவும் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி.நகரை சேர்ந்தவர் சையத் உசேன் (வயது 27). இவர் பஸ் நிலையம் அருகே உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வருகிறார்.
இந்த வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க விருத்தாசலம் அருகே கண்டியாங்குப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
பின்னர் சையத் உசேன், மின்வாரிய அலுவலக உதவி மின் பொறியாளர் இளங்கோவனை சந்தித்தார். அப்போது மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் ஒரு கடைக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று இளங்கோவன் கூறியதாக தெரிகிறது.
இதைக்கேட்ட சையத் உசேன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறினார். ஆனால் ரூ.23 ஆயிரம் தந்தால்தால் மின் இணைப்பு தர முடியும் என்று இளங்கோவன் கண்டிப்பாக கூறிவிட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சையத்உசேன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின்பேரில், ரசாயன பவுடர் தடவிய பணத்தை மின்வாரிய என்ஜினீயர் இளங்கோவனிடம் சையத்உசேன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இளங்கோவனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் பெருமாள் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று இரவு நடைபெற்றது.
தீவலூர் பகுதியை சேர்ந்த சூரியபிரகாசும்(வயது 18), அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் தாழநல்லூர் பெருமாள் கோவில் அருகே வந்தனர். அப்போது அவர்கள் கூச்சலிட்டபடி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி(40) கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் சூரியபிரகாசும், அவரது நண்பரும் கோபத்தில் அங்கிருந்து தீவலூர் சென்றனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தாழநல்லூர் வந்தனர். கோவிலில் இருந்தவர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக தீவலூரை சேர்ந்த சூரியபிரகாஷ், கார்த்திக்ராஜ், மேகராஜன், விஜயகாந்த், விஜயசங்கர், விஜயராஜ், ஹரிகிருஷ்ணன், தினேஷ் குமார், விக்னேஸ்வரன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் சூரிய பிரகாஷ் ஐ.டி.ஐ யும், விக்னேஷ்வரன் 10-ம் வகுப் பும் படித்து வருகிறார்கள்.
நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அந்த கடையின் பின்பக்கம் சுரங்கம் அமைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த 1½ கிலோ தங்க நகை மற்றும் 22 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இவைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அதில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ், டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக பழைய குற்றவாளிகள் மற்றும் சுவரில் துளைபோட்டு கடைகளில் கொள்ளையடித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடத்தினர். கடந்த 2 மாதத்தில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, நகைக்கடையில் நடந்த கொள்ளையில் துப்பு துலங்கியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். நகைகளை மீட்போம் என்றார்.
ஸ்ரீமுஷ்ணம்:
சோழத்தரம் அருகே வடக்குபாளையங்கோட்டை கிராமத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சோழத்தரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வடக்குபாளையங்கோட்டை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த பக்கிரிநாதன் (வயது 45) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பக்கிரிநாதனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 56). வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் சுந்தர பாண்டியன் தனது மனைவி ரேவதி (48), மகன் சக்திவேல் (16), மகள் கீர்த்தீஸ்வரி (15), சகோதரி சாந்தா (65) ஆகியோருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆன்மீக சுற்றுலா புறப்பட்டார்.
ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் பல்வேறு கோவில்களுக்கு சென்ற அவர்கள் நேற்று மாலை காரில் ஊருக்கு புறப்பட்டனர். சுந்தரபாண்டியன் காரை ஓட்டி வந்தார்.
கார் நள்ளிரவு 12½ மணி அளவில் கடலூர் மாவட்டம் ராமநத்தம்- திட்டக்குடி சாலையில் ராமநத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.
இடிபாடுகளுக்குள் சிக் கிய சுந்தரபாண்டியனின் மனைவி ரேவதி, சகோதரி சாந்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
மற்ற 3 பேரும் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து திட்டக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கீர்தீஸ்வரி, சுந்தரபாண்டியன் ஆகியோர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து காரணாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த 3 பேர் விபத்தில் பலியானது பெண்ணாடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடற்கரையில் நேற்று முன்தினம் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர் துறைமுகத்திலும் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூரில் நேற்று கடல் மிக சீற்றத்துடன் காணப்பட்டது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன. கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. இன்றும் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
எனவே மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டினம், நல்லவாடு, ராசாபேட்டை, கிள்ளை, பரங்கிபேட்டை, அக்கரகோரி ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடற்கரை ஓரத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை ஓரங்களில் 6 ஆயிரம் படகுகள் ஓய்வெடுக்கின்றன. கடலூரில் குளத்து மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. அதிக விலைக்கு இந்த மீன்கள் விற்கப்பட்டன.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42). இவர் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
தினமும் பழனிவேல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை பூட்டினார். மது விற்பனை செய்த பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இதை அறிந்த 2 வாலிபர்கள் பழனிவேலை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
புதுப்பாளையம் பகுதியில் பழனிவேல் சென்று கொண்டிருந்தார். பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பழனிவேல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து உன்னிடம் உள்ள பணத்தை கொடு என்று மிரட்டினர். பழனிவேல் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் உருட்டுகட்டையால் பழனிவேலை சரமாரியாக தாக்கினர். பழனிவேல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.
அதற்குள் மர்ம நபர்கள் பழனிவேல் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். உருட்டுகட்டையால் தாக்கியதில் தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த பழனிவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பழனிவேல் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்- இன்ஸ்பெக்டர் வனஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் இளமாறன் (வயது 46). இன்று அதிகாலை கடலூர் வில்வநகரில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பகவதி அம்மன்கோவில் தெருவில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
சந்தேகமடைந்த இளமாறன் அந்த வாலிபரிடம் ஏன் வெகுநேரமாக இங்கு நிற்கிறாய் என்று கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர் கீழே கிடந்த கல்லால் இளமாறனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடினார். உடனே இளமாறன் ஓடி சென்று அவரை பிடிக்க முயன்றார் ஆனால் முடியவில்லை.
இதுகுறித்து இளமாறன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். அப்போது கல்லால் தாக்கியவர் வில்வநகர் பகவதியம்மன்கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (23) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கார்மாங்குடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று காலை கார்மாங்குடி, வல்லியம், மேலப்பாளையூர், மருங்கூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்தனர்.
வங்கி செயலாளர் செல்வராஜிடம் விவசாய கடன் மற்றும் பயிர் கடன் கேட்டனர். அதற்கு அவர் விவசாயிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விவசாயிகள் கூட்டுறவு வங்கியை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளால் திட்டிய வங்கி செயலாளரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
விவசாய கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்துக்கு தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராசவன்னியன் தலைமை தாங்கினார்.
பின்னர் கூட்டுறவு வங்கியின் முன்பக்க கதவை விவசாயிகள் இழுத்து பூட்டினார்கள். தொடர்ந்து அதிகாரியை கண்டித்து வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தபோராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம் அருகே உள்ளது திருமலை அகரம். இந்த பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
இவர்கள் தாளநல்லூரில் இருந்து பெண்ணாடம் வழியாக விருத்தாசலம் செல்லும் அரசு பஸ்களில் செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் திருமலை அகரம் கிராமத்தில் நின்று பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றிச் செல்லவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் இன்று காலை 8.15 மணிக்கு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் திருமலை அகரம் கிராமத்தில் பஸ்சை நிறுத்தி மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 8.45 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது. அந்த பஸ்சிலேயே மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு சென்றனர்.






