என் மலர்
கடலூர்
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக ஆறுமுகம் (வயது 38) உள்ளார்.
இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி அன்று பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார். இதன் காரணமாக இக்கோவிலுக்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில், ஆறு முகத்தின் வீட்டில் சமையல்காரராக வேலை பார்த்து வந்த சந்திரன் என்பவர் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், தன்னை பூசாரி ஆறுமுகம் ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கைதான கோவில் பூசாரி ஆறுமுகம் நரபலி சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் ஆறுமுகத்தின் வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.
மேலும், கோவில் வளாகத்திலும் சோதனை நடந்தது. நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் ஏதேனும் உள்ளதா? என விசாரணை நடத்தினர்.
அப்போது, ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த 50 சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்தவர் ஸ்வீட்லின் (வயது 29). இவர் மீது கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், தொழுதூர், ராமநத்தம் ஆகிய பகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளி மேடுபேட்டை பகுதியிலும் கொலை வழக்கு உள்ளது.
மேலும் விருத்தாசலம், ராமநத்தம், பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கும் உள்ளது.
இவர் கூலிப்படையில் சேர்ந்து பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கொலை மற்றும் நகை பறிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ஸ்வீட்லினை தேடிவந்தனர்.
விருத்தாசலம் பை-பாஸ் ரோட்டில் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்த ஸ்வீட்லினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டி இருந்தாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் அருகே காராமணிக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சேகரன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 26). மெக்கானிக். இவர் கடந்த 8–11–2012 அன்று நாகை மாவட்டம் சீர்காழி மெயின்ரோடான அ.புத்தூர் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கோரி வெங்கடேஷ் தந்தை சேகரன், தாய் சாந்தி ஆகிய 2 பேரும் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இறந்த வெங்கடேஷ் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.10 லட்சத்து 48 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் மீண்டும் அவர்கள் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து அரசு போக்குவரத்து கழகம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 314 வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காரைக்காலில் இருந்து சென்னை செல்வதற்காக கடலூர் பஸ் நிலையம் வந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
கடலோர பகுதிகளில் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கட லூரில் இன்றும் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்தன. கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுகிறது.
எனவே கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டிணம், தாழங்குடா, சித்திரைபேட்டை, பரங்கிப்பேட்டை, ராசாபேட்டை உள்பட 50-க்கும் மேற்பட்ட கடலோர கிராம மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.
படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் பெய்த கனமழையால் புதுவை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் தண்ணீர் தேங்கியதால் காய்கறி வாங்க வந்திருந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ் சிதம்பரம் புறவழிச் சாலையில் வந்த போது எதிரே கண்டெய்னர் லாரி வந்தது.
அப்போது ரோட்டின் குறுக்கே மாடு வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி டிரைவர் பிரேக் போட்டார். இருப்பினும் லாரி அவரது கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மாடு மீது மோதியது.
தொடர்ந்து அந்த லாரி எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 33 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக 5 பேர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி.நகரை சேர்ந்தவர் சையத் உசேன். இவர் பஸ் நிலையம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வருகிறார்.
இந்த வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க விருத்தாசலம் அருகேயுள்ள கண்டியாங்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க, உதவி மின்பொறியாளர் இளங்கோவன் ரூ.23 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார். இதுபற்றி சையத்உசேன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி சையத்உசேன், ரசாயன பவுடர் தடவிய பணத்தை கடந்த 26-ந் தேதி கண்டியாங்குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த உதவி மின்பொறியாளர் இளங்கோவனிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், இளங்கோவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இளங்கோவனை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது.
பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்க ரூ.52 கோடி தேவைப்படும்.
பொதுவாக சம்பளத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் மாத கடைசி நாளில் செலுத்துவார்கள். ஆனால் இதுவரை வங்கி கணக்கில் அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
நிதி நெருக்கடி காரணமாக சம்பளத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வழங்குவதாக பல்கலை கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று பொதுக் குழுகூட்டம் நடந்தது. அவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஊழியர்கள் அனைவரும் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சந்திரசேகரனை அவரது அலுவலகத்தில் வைத்து முற்றுகையிட்டனர்.
ஊழியர்களிடம் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து பல்கலைக் கழக அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆசிரியர்கள், ஊழியர்கள் அண்ணாமலை நகர் பூமா கோவில் அருகே திரண்டனர். அவர்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக அரசு, மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சம்பளம் வழங்காததை கண்டித்து இன்று காலை மீண்டும் போராட்டம் நடைபெறும் என அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பசலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது. அதன்பிறகு மழை இல்லை.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலதாமதமாக நேற்று தொடங்கியது. கடலூரில் நேற்று இரவு முதல் மழை பெய்தது.
இதேபோல் பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. சம்பா பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மழையில்லாமல் கவலையில் இருந்தனர். இன்று பெய்யத் தொடங்கிய மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தின் மற்ற இடங்களான கீழசெருவாய், சிதம்பரம், அண்ணாமலைநகர், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், நள்ளிரவு 12.05 மணி அளவில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் 12.07 மணிக்கு புறப்பட்டது.
வசந்தராயன்பாளையம் என்ற இடத்தை சுமார் 12.10 மணியளவில் கடந்து செல்ல முயன்றபோது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே சில மாடுகள் ஓடி வந்தன. அவற்றின் மீது மோதாமல் இருப்பதற்காக ரெயிலின் வேகத்தை டிரைவர் குறைக்க முயன்றார்.
இருப்பினும் அந்த ரெயில் அங்கு வந்த மாடுகள் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் ஒரு மாட்டின் உடல் ரெயில் என்ஜினில் சிக்கியதால் அந்த என்ஜின் பழுதானது. ரெயில் டிரைவர் கீழே இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் மோதி இதில் 5 மாடுகள் உடல் சிதறி செத்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கடலூர் முதுநகரில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து என்ஜினில் சிக்கியிருந்த மாட்டின் உடலை அப்புறப்படுத்தினர். பின்னர், அந்த என்ஜின் பழுதை சீரமைத்தனர். இதன் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.20 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.
அந்த வழியாக வரவேண்டிய ராமேஸ்வரம்-சென்னை, சென்னை-ராமேஸ்வரம், சென்னை-மன்னார்குடி, மன்னார்குடி-சென்னை, சென்னை-காரைக்கால், காரைக்கால்-சென்னை(கம்பன் எக்ஸ்பிரஸ்) ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நேற்று இரவு 8 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் பரமசிவம் ஓட்டினார். பஸ்சில் 50 பயணிகள் பயணம் செய்தனர்.
பஸ் சிறிது தூரம் சென்றதும் பஸ்சை டிரைவர் தாறுமாறாக ஓட்டினார். அவர் குடிபோதையில் பஸ்சை ஒட்டுவது தெரியவந்தது. பஸ் அந்த பகுதியில் உள்ள கட்டிடத்தின் மேல் மோதுவது போல் சென்றது. உடனே பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கூறினார்கள்.
ஆனால் அவர் 2 கி.மீட்டர் தூரத்துக்கு வேகமாக பஸ்சை ஓட்டி சென்றார். இதனால் பயணிகள் அலறினார்கள். செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் பஸ்சை தென்கோட்டை வீதியில் வழிமறித்தனர். பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கி விட்டனர். அவர்கள் வேறு பஸ் மூலம் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடிபோதையில் இருந்த பஸ் டிரைவர் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா தலமாக உள்ளது. இந்த சுற்றுலா தலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளது. இதை பார்த்து ரசிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகளும் பிச்சாவரத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி விடுமுறை என்பதாலும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும் பிச்சாவரத்துக்கு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு படகு சவாரி செய்தனர்.
சுரபுன்னை காடுகளை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது செல்போன்களில் சதுப்பு நிலக்காடுகளை படம் பிடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள குடில்களில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை குடும்பத்தினருடன் சாப்பிட்டனர். பிச்சாவரத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் பயணிகள் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 45). இவர் கடலூர் லாரன்ஸ் சாலை ரெயில்வே கேட் அருகில் நகராட்சி மருத்துவமனைக்கு எதிரே சாலையோரத்தில் தள்ளுவண்டியில் குளிர்பான கடை நடத்தி வந்தார். அவரது மனைவி வேணியும்(40) வியாபாரத்தை கவனித்து வந்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி கணவன்-மனைவி இருவரும் நாட்டு வெடிகளை கடையில் விற்பனை செய்தனர். மாலை 6 மணியளவில் திடீரென்று கடையில் இருந்த வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
பட்டாசு கடை தீ பிடித்து எரிந்தது. அப்போது தீ மளமளவென அருகில் இருந்த பாய் வியாபாரம் செய்து கொண்டிருந்த கடைகள் மீதும் பரவியது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) மகாலிங்கமூர்த்தி தலைமையில் நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஜெயபால், அவரது மனைவி வேணி, பாய்வியாபாரம் செய்து கொண்டிருந்த சுப்பிரமணி(50), ஆலப்பாக்கம் அருகே உள்ள பெத்தாங்குப்பம், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார்(22) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஜெயபால், வேணி இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவர்களின நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயபால் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி வேணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜெயபாலுவும், அவரது மனைவி வேணியும் நாட்டு வெடிகளை வியாபாரம் செய்தபோது கொசுத்தொல்லை இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்த கொசுவர்த்தியை கொளுத்தி வைத்துள்ளனர்.
இதில் இருந்த நெருப்பு பொறிகள் நாட்டு வெடிகள் மீது விழுந்து இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்தது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






