என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்-விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு 1,273 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கடலூர்-விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு 1,273 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர்-விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,273 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கடலூர்:

    இந்துக்களின் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான தீபாவளி வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி பணியாற்றி வருபவர்களும், படித்து வருபவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர்.

    இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேற்று முதல் சிறப்பு பஸ்களை இயக்கப்படுகின்றன. தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி கடலூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 273 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 1-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) வரை இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

    இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம், கரூர், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், ஓசூர், பெங்களூரு, கள்ளக்குறிச்சி, சிதம்பரம், செஞ்சி, ஆரணி, காஞ்சீபுரம், சேத்பட் உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர பயணிகளின் வசதிக்காகவும் தேவைக்கேற்பவும் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×