என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள மனவாளநல்லூரை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி யோகமணி (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு யோகமணி வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் இன்று அதிகாலை யோகமணி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் அருகில் இருந்த ராமர் என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம்கேட்டு கண்விழித்த ராமர் மர்மநபர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

    கொள்ளையர்கள் தப்பி செல்லும்போது யோகமணி வீட்டில் கொள்ளையடித்த பொருட்களில் மணிபர்ஸ் தவறி விழுந்தது. இதை அந்தவழியாக சென்ற ஒருவர் எடுத்து பார்த்தபோது அதில் யோகமனியின் அடையாள அட்டை இருந்தது. உடனே அந்த மணிபர்சை யோகமனியின் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    அதை பார்த்து அந்த உறவினர் யோகமணியின் வீட்டுக்கு விரைந்துசென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே யோகமணிக்கும், விருத்தாசலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    5 நாட்களில் ரூ.51 கோடி டெபாசிட் செய்த விவகாரம் தொடர்பாக கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 8 மணி நேரம் சோதனை நடத்தினர்.
    கடலூர்:

    ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

    இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

    இது குறித்து சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவுத்துறை அதிகாரிகள் வங்கிகள் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் சேலத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக கடலூர் வங்கியிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

    கடலூர் பீச்ரோட்டில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜிசேகர் மற்றும் லோமேஷ், ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் என மொத்தம் 3 பேர் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். வங்கியில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கடந்த மாதம் 8-ந் தேதிக்கு பின்னர் அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை சரிபார்த்தனர். மத்திய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ஜெயசங்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வங்கிகளில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். 8 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

    தொடர்ந்து அவர்கள் தங்கள் சோதனையை முடித்து விட்டு இரவு 8 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றனர். சோதனை முடிந்தபின் வங்கியில் இருந்து எந்த ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த சோதனை குறித்து கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ஜெயசங்கர் கூறியதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 5 நாட்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் தனிநபர் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக பட்சமாக எத்தனை பேர் டெபாசிட் செய்துள்ளனர் என்ற விவரங்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.

    அதேபோல் ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்கில் எத்தனை பேர் டெபாசிட் செய்துள்ளனர். அதில் அதிக பட்ச தொகை எவ்வளவு என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த நவம்பர் 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ரூ.51 கோடி வசூலானது.

    அந்த தொகையை ரிசர்வ் வங்கியிடம் செலுத்தி விட்டோம். இது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    மேலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்ததில், சந்தேகமான முறையில் இருந்த 13 பேரை மட்டும் நேரில் அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்களை காட்டினர். இதையடுத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அதிகாரிகள் அனுப்பி விட்டனர்.

    இவ்வாறு உதவி பொது மேலாளர் ஜெயசங்கர் கூறினார்.
    பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 15). நெய்வேலி 10-வது பிளாக்கில் உள்ள என்.எல்.சி. பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் உள்ள கடைக்கு ஜெயப்பிரகாஷ் சென்றான். கடையின் உரிமையாளர் பழனியப்பனுக்கும், ஜெயப்பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஜெயப்பிரகாசை பழனியப்பன் கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஜெயப்பிரகாஷ் படுகாயம் அடைந்தான். உடனே பழனியப்பன் அங்கிருந்து ஓடி விட்டார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கீழே விழுந்தான். அவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் மீட்டு நெய்வேலி என்.எல்.சி. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தான்.

    கொலை குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ஜெயப்பிரகாஷ் எதற்காக கொலை செய்யப்பட்டான்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த கொலை தொடர்பாக கடை உரிமையாளர் பழனியப்பனை தேடிவந்தனர்.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பழனியப்பன் சிகிச்சை பெற வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் பழனியப்பன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.



    இந்த நிலையில் மாணவர் கொலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் முன்னாள் மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் கூறும்போது, கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து இருக்கிறோம். விரைவில் கைது செய்வோம் என்றார்.

    இதைத்தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள செல்போன் டவரில் பண்ருட்டி ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் பிரகாஷ், பண்ருட்டி நகர பொருளாளர் இளையராஜா ஆகியோர் ஏறி கோ‌ஷமிட்டனர். அவர்கள் மாணவரை கொலை செய்த குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் இங்கிருந்து கீழே குதித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முத்தாண்டிக்குப்பத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    சிதம்பரம் அருகே போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் கவுதமன் (வயது 28). இவர் கடலூரில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். வேலை முடிந்ததும் கவுதமன் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில், வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வயலூர் போக்குவரத்து நகர் என்ற இடத்தில் சென்ற போது அதே கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் தனது மாடுகளை நடுரோட்டில் ஓட்டிச்சென்றார்.

    உடனே கவுதமன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அருணாசலத்திடம் மாடுகளை சாலையோரத்தில் ஓட்டிச் செல்லுங்கள் என கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

    இது பற்றி அருணாசலம் தனது உறவினரான தங்கராசு குடும்பத்தினரிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த தங்கராசு மகன்கள் கண்ணன் (32), சுதாகர் (29) ஆகிய 2 பேரும் கவுதமனின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட கவுதமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து கவுதமன் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், சுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    கடலூர் உழவர் சந்தையில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
    கடலூர்:

    கடலூர் ஓதியடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி(வயது 68). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் வாழைக்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சிவகாமி உழவர் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சிவகாமியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியனை கொலை செய்த விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்தகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழநெடும்பூரை சேர்ந்தவர் நெப்போலியன்(வயது 23). எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நெப்போலியன் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அங்குள்ள மின்மோட்டார் கொட்டகையில் நெப்போலியன் பிணமாக கிடந்தார்.

    இதைபார்த்த பொதுமக்கள் குமராட்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது நெப்போலியன் கொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழநெடும் பூரில் நெப்போலியன் வீட்டின் அருகே விவசாயி சண்முகவடிவேலு வசித்து வருகிறார். இவருக்கு அனுசுயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    சண்முகவடிவேலுவின் வீட்டில் மின்சாரம் பழுது ஏற்பட்டபோது அதை சீர் செய்வதற்காக நெப்போலியன் சென்றார். அப்போது அனுசுயாவுக்கும், நெப்போலியனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சண்முகவடிவேலு அதிர்ச்சி அடைந்தார்.

    நெப்போலியனையும், அனுசுயாவையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து பழகி வந்தனர்.

    இந்நிலையில் சண்முகவடிவேலு நேற்று மாலை தன் வயலில் உள்ள மின்மோட்டார் பழுதாகி விட்டது. அதை பார்க்க வேண்டும் என்று நெப்போலியனிடம் கூறினார். பின்னர் இருவரும் அங்குள்ள மோட்டார் கொட்டைகைக்கு சென்றனர்.

    இதையடுத்து சண்முக வடிவேலு அங்கிருந்து சென்று விட்டார். நெப்போலியன் மின்மோட்டார் கொட்டைகையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் நெப்போலியனை சண்முகவடிவேலு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். சண்முகவடிவேலுவை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் சண்முகவடிவேல் வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்தகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேர்தல் விதி மீறி பிரசாரம் செய்ததாக ராமதாஸ், திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இருவரும் இன்று ஆஜராக வில்லை.

    பண்ருட்டி:

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பண்ருட்டி தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர். அப்போது விதி முறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,

    நடிகர் நெப்போலியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று விசாரணை நடந்தது.

    இன்று கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடிகர் நெப்போலியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி உள்பட 50 பேர் ஆஜராகவில்லை.

    ராமதாஸ் சார்பில் திண்டிவனம் வக்கீல் ராஜாராமன், திருமாவளவன் சார்பில் வக்கீல் பூபாலன், வேல்முருகன் சார்பில் வக்கீல் செல்வராஜ், சபா.ராஜேந்திரன், நெப்போலியன் ஆகியோர் சார்பில் வக்கீல் வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளும் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற 26-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தேர்தல் விதிமுறை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ் கோர்ட்டில் ஆஜரானார்.

    விருத்தாசலம்:

    2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க.வேட்பாளராக முத்துக்குமார் போட்டியிட்டார். அவரை ஆதரித்து விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் தே.மு.தி.க.மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் பிரசாரம் செய்தார்.

    அப்போது தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். இதனால் அந்த பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தியதாக சுதீஷ் உள்பட 6 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையொட்டி கோர்ட்டில் சுதீஷ் ஆஜரானார்.

    கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோ‌ஷமிட்டபடி ஊர்வலம் சென்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மணிமுக்தாறு நீர் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் விருத்தாசலத்தில் இன்று ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் இன்று காலை விவசாயிகள் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கடலூர்-விருத்தாசலம் சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலத்துக்கு மணிமுக்தாறு நீர்பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ராமர் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, சிறுப்பாக்கம், நெய்வேலி, மங்கலம்பேட்டை, கம்மாபுரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டபடி சென்றனர்.
    கடலூரில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியை வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் எப்.சி.ஐ.நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். கோவையில் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி கலைவாணி (வயது 40). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    கலைவாணி கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது மகள்கள், மகனுடன் அந்த பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.

    இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் லேப்- டாப் ஆகியவைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன நகை-பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.



    இன்று காலை வீட்டுக்கு வந்த கலைவாணி முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் லேப்-டாப் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    பேராசிரியை வீட்டில் கொள்ளையடித்தது பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளைக்கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தகொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்காதல் தகராறில் போலீஸ்காரரை கொன்று உடலை எரித்த உறவினரின் வெறிச்செயல் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    புதுவையில் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்தவர் அருணகிரி (வயது 35). கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதியில் இருந்து இவரை காணவில்லை.

    இதுதொடர்பாக அவரது மனைவி நெய்ரோஜா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 8 மாதம் கடந்து விட்ட நிலையில் இன்னும் அவரை பற்றி துப்பு துலங்கவில்லை.

    இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவரது மனைவி நெய்ரோஜா மீண்டும் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி கூறினார்.

    இதன் பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் நடவடிக்கை மேற்கொண்டார். போலீஸ்காரர் அருணகிரி மாயமானது குறித்து மீண்டும் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் மேற்பார்வையில் லாஸ்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அருணகிரியின் மனைவி நெய்ரோஜா மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் உரையாடல்களை கண்காணித்தனர்.

    அப்போது நெய்ரோஜாவின் தங்கையின் கணவர் சிவானந்தம் ராபர்ட் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை பிடித்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அருணகிரியை எரித்து கொன்று விட்டதாக திடுக்கிடும் தகவல்களை சிவானந்தம் ராபர்ட் கூறினார்.

    அருணகிரியை செப்டம்பர் 10-ந் தேதி மது குடிக்க சிவானந்தம் ராபர்ட் கடலூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து சிவானந்தம் ராபர்ட்டும் மற்றும் கடலூரை சேர்ந்த கூலிப்படையினர் 4 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து உடலை எரித்ததுடன் அடையாளம் தெரியாமல் இருக்க சாம்பலை கடலில் கரைத்துள்ளார்.

    அருணகிரி சிவானந்தம் ராபர்ட்டின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாகவும், எனவே, அருணகிரியை சிவானந்தம் ராபர்ட் அடித்து கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது.

    சிதம்பரத்தில் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்ற தனியார் வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது 48). விவசாயி. இவர் கடலூரில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடனுக்கு டிராக்டர் வாங்கி இருந்தார்.

    இவர் அந்த வங்கிக்கு 3 தவணை தொகையை கட்டி விட்டார். 4-வது தவணை தொகையை கட்டவில்லை.

    இந்தநிலையில் இந்த டிராக்டரை பறிமுதல் செய்ய கவரப்பட்டுக்கு தனியார் வங்கி அதிகாரிகள் இன்று சென்றனர்.

    தகவல் அறிந்ததும் விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் தலைமையில் விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டனர். டிராக்டரை பறிமுதல் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதையடுத்து தவணைத் தொகையை பின்னர் செலுத்தும்படி விவசாயி வைத்தியநாதனிடம் வங்கி அதிகாரிகள் கூறினர்.

    அதன்பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ×