என் மலர்
கடலூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட கடலூர் மண்டலத்தில் 11 பணிமனைகள் உள்ளன.
அங்கிருந்து 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.3 மற்றும் ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
நேற்று இந்த குறைந்தபட்ச கட்டணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. கிராம பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கண்டக்டர்களிடம் பயணிகள் கேட்டபோது அதிகாரிகள் கூறியதால் குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கிறோம். மற்ற விவரங்கள் வேண்டுமானால் அதிகாரிகளிடம் கேளுங்கள் என்று தெரிவித்தனர்.
இதனால் அவர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பாதிவழியிலேயே பயணிகளை கண்டக்டர்கள் இறக்கி விட்டு சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சாதாரண கட்டண பஸ்கள் அதிகமான இயங்கின. இந்த பஸ்கள் எக்ஸ்பிரஸ் மற்றும் பைபாஸ் ரைடர் என்று தற்போது தரம் பிரிக்கப்பட்டுள்ளது.
பஸ்களில் அதற்கான போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் குறிப்பிட்ட இடங்களில்தான் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அந்த பஸ்களில் பயணிகளிடம் ரூ.2 முதல் ரூ.3 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
இவ்வாறு பஸ்களில் திடீரென்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.3 மற்றும் 4 ரூபாய் முன்பு வசூலிக்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு குறைந்த அளவு காசே நாங்கள் எடுத்து வருவோம்.
ஆனால் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ஏற்கனவே இருந்த குறைந்த பட்ச கட்டணத்தை ரத்து செய்து விட்டு குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாய் என்று திடீரென்று வசூலிக்கிறார்கள்.
சாதாரண பஸ்களையும் பைபாஸ் ரைடர் மற்றும் எக்ஸ்பிரஸ் என்று பிரித்து அந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த கட்டணம் உயர்வு குறித்து முன்கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. மறைமுகமாக பஸ்களில் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
இதுகுறித்து காரணம் கேட்டால் பஸ் கண்டக்டர்கள் சரியான பதில் கூற மறுக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததையொட்டி அரசு பஸ்களில் மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதற்கு சரியான பதில் தரப்படவில்லை.
கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஏராளமாக ஓடுகின்றன. அவைகளால் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி த.மா.கா. கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள கார் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், நெடுஞ்செழியன், நகர தலைவர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் அலமு.தங்கவேல் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணை தலைவர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி, உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், குறிப்பாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து கடலூர் வழியாக கடந்த மாதம் 23-ந் தேதி புதுவைக்கு சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கடலூரில் போலீசார் சந்தேகப்படும் படியாக வந்த காரை வழிமடக்கி அந்த காரில் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள ஐம்பொன் விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர்.
சிலையை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த ராஜா உள்பட 5 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிலை கடத்தலில் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது அவர்களுக்கும் இந்த சிலை கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையை திசை திருப்புவதற்காக மாணவர்களின் பெயரை கடத்தல் கும்பல் கூறியது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போலீசார் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த நாமக்கல் மாவட்டம் கண்ணியக்குறிச்சியை சேர்ந்த சீனிவாசன்(32), பாடாச்சநல்லூர் கார்த்திக்(38), சேலம் மாவட்டம் புல்லான் கவுண்டன்பட்டி நாகராஜன்(27) கார்த்திக்குமார்(32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மயிலாடுதுறையில் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை நாமக்கல் மாவட்டம் ஓடப்பள்ளி கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டதாகும்.
ஓடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2014-ம் ஆண்டு இந்த ஐம்பொன் சிலையை திருடி மயிலாடுதுறையில் பதுக்கி வைத்திருந்தனர்.
சிலையை விற்பனை செய்வதற்காக மயிலாடு துறையை சேர்ந்த ராஜா உள்பட 5 பேரிடம் கொடுத்து அனுப்பினர். அப்போது அவர்களை கடலூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஓடப்பள்ளி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஐம்பொன் சிலையும், அதை திருடிய கும்பலும் போலீசில் சிக்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்தது.
சிலைகடத்தல் கும்பலை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.
சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியான அல்லிமுத்து மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் கைதான சீனிவாசன் உள்பட 4 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இவரது அண்ணன் கணபதிக்கும் இடையே வீட்டு மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சதீஷ் குமார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு குடிபோதையில் கணபதியின் வீட்டு கதவை தட்டினார். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த கணபதியும் அவரது மனைவி ராணியும் வெளியே வந்தனர்.
சதீஷ்குமார் அங்கு நிற்பதை கண்டு எதற்காக இந்த நேரத்தில் கதவை தட்டுகிறாய் என்று கேட்டனர். குடிபோதையில் இருந்த சதீஷ்குமார் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அண்ணன்-தம்பி 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் சரோஜா (50) என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவர் சதீஷ் குமாரை பார்த்து எதற்காக அதிகாலையிலேயே அண்ணனுடன் தகராறு செய்கிறாய்? சண்டை போடாதே என்று சமாதானம் செய்தார்.
இதில் சதீஷ்குமார் ஆத்திரமடைந்து வீட்டிற்கு வெளியே கிடந்த அரிவாள் மனையை எடுத்து சரோஜாவின் தலையில் சரமாரியாக வெட்டினார். நிலை தடுமாறிய அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் சரோஜா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அங்கிருந்து சதீஷ் குமார் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தை அறிந்த அந்தபகுதி பொதுமக்கள் சரோஜா வீட்டுமுன்பு திரண்டனர்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய சதீஷ் குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
சோழத்தரம் அருகே கொண்டசமுத்திரம் நொச்சிக்காடு பகுதி சுடுகாடு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை விளை நிலங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரியும், அந்த பகுதியில் உள்ள லிங்கப்பன் ஏரியை தூர்வாரக்கோரியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.
ஆனால், அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை மனு சம்பந்தமாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கொண்டசமுத்திரம் நான்கு முனை சாலையில் பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பொதுமக்கள் நாங்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து 9.55 மணி அளவில் போராட்டம் வாபஸ் ஆனது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
மாசி மகத்தை முன்னிட்டு கடலூரில் இன்று தீர்த்த வாரி நடைபெற்றது. இதையொட்டி கடலூர் மார்க்கெட் காலனியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்டது.
வண்ணாரப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மேலே செல்லும் மின் கம்பியில் சாமிகளுக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரம் உரசுவது போல் இருந்தது.
இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த மரக்குச்சியால் மின் கம்பியை தூக்கினர். அப்போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி கிளம்பியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் வெடித்து சிதறியது.
இதனால் ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக மின் கம்பிகள் பக்தர்கள் இல்லாத இடத்தில் அறுந்து விழுந்தது. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மின் கம்பி அறுந்து விழுந்த தகவல் அறிந்ததும் மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், “ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறீர்கள்? மின் வயர்கள் அறுந்து பக்தர்கள் மீது விழுந்திருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?” என்று எச்சரித்தனர்.
அதற்கு பொதுமக்கள், “நீங்கள் மின் கம்பியை நல்ல முறையில் பராமரித் திருந்தால் இதுபோன்ற நடந்திருக்காது” என்று கூறினர். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப் பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மின் கம்பி அறுந்து விழுந்ததைத் தொடர்ந்து அந்த பகுதியில் நீண்ட தூரத்துக்கு சாமிகளை எடுத்து வந்த வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கடற்கரையில் அந்த படகுகளை நிறுத்தி விட்டு வீடு திரும்புவார்கள். படகுகளில் மீன்பிடிக்க பயன்படுத்தும் வலைகள் மற்றும் இரும்பு பொருட்களை வைத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக படகுகளில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் வலைபின்னுவதற்கு பயன்படுத்தும் ஈயம் போன்ற பொருட்கள் திருடு போனது.
இதுகுறித்து மீனவர்கள் கடலூர் துறைமுக போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைதிரும்பியபோது 4 சிறுவர்கள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் உள்ள பொருட்களை திருடிக்கொண்டிருப்பதை பார்த்தனர்.
மீனவர்கள் வருவதை அறிந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். மீனவர்கள் 4 சிறுவர்களையும் விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
அப்போது 2 சிறுவர்கள் வைத்திருந்த சாக்குகளில் 50 கிலோ ஈயம் மற்றும் இரும்பு பொருட்கள் இருந்தன.
உடனே மீனவர்கள் கடலூர் துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனவர்களிடம் சிறுவர்களை நீங்கள் ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டனர்.
இதனால் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதனப்படுத்தினர்.
பின்னர் 4 சிறுவர்களையும் போலீசார் துறைமுக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுவர்கள் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதும் இதற்கு உறுதுணையாக மேலும் 4 பேர் செயல்படுவதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர். சிறுவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கடந்த 7-ந் தேதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக திருவிழா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர், விருத்தாம் பிகை, ஆலத்து விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
முதலில் ஆலத்து விநாயகர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. அப்போது சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத தேரோட்டம் தொடங்கியது. விருத்தாசலம் தொகுதி கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் 4 கோட்டை வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இதேபோல முருகன், விருத்தகிரீஸ்வரர், விருத் தாம்பிகை, சண்டிகேஸ்வரர் தேர்களும் அடுத்தடுத்து முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தன. இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.
நாளை (சனிக்கிழமை) மாசிமக திருவிழாவும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) சண்டிகேஸ்வரர் உபயத்துடன் விழா நிறைவடைகிறது.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஓ.பி.எஸ்.அணியினரின் உண்ணாவிரதம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ.அய்யப்பன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் கலைமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அருள், தமிழழகன், துரை.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் கங்கா, முன்னாள் எம்.பி.பு.தா.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உண்ணாவிரதத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரத பந்தலை சுற்றிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி பள்ளி மைதானத்தில் ஓ.பி.எஸ்.அணியினர் இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினர் டாக்டர்.லட்சுமணன் எம்.பி.தலைமை தாங்கினார்.
விழுப்புரம் எம்.பி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தில் கொரக்கைவாடி கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
எனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தனர்.
கொரக்கைவாடியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், வேறு இடத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டவேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைகண்டித்து சங்கு ஊதும் போராட்டம், சாலைமறியல் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினர். ஆனாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கொரக்கைவாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வயல்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க குடத்துடன் சென்ற பெண்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தி சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34-வது வணிகர் தின விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் அன்னிய ஆதிக்கத்தில் சில்லரை வணிகம் அழிந்து வருகிறது. இதற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் அன்னிய ஆதிக்கத்திற்கு துணை போகிறார்கள். இந்த ஆட்சியாளர்களையும் வழிக்கு கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உலக வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கே வைக்கப்பட்ட தீப்பந்தமாகும். இதை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். வெளிநாட்டு குளிர்பான ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
சென்னையில் நடிகர் ராதாரவி மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், லட்சிய முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன்.சண்முகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராதாரவி மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராஜேசை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.






