என் மலர்
செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் இரும்பு பொருட்கள் திருடிய 4 சிறுவர்கள் கைது
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கடற்கரையில் அந்த படகுகளை நிறுத்தி விட்டு வீடு திரும்புவார்கள். படகுகளில் மீன்பிடிக்க பயன்படுத்தும் வலைகள் மற்றும் இரும்பு பொருட்களை வைத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக படகுகளில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் வலைபின்னுவதற்கு பயன்படுத்தும் ஈயம் போன்ற பொருட்கள் திருடு போனது.
இதுகுறித்து மீனவர்கள் கடலூர் துறைமுக போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைதிரும்பியபோது 4 சிறுவர்கள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் உள்ள பொருட்களை திருடிக்கொண்டிருப்பதை பார்த்தனர்.
மீனவர்கள் வருவதை அறிந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். மீனவர்கள் 4 சிறுவர்களையும் விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
அப்போது 2 சிறுவர்கள் வைத்திருந்த சாக்குகளில் 50 கிலோ ஈயம் மற்றும் இரும்பு பொருட்கள் இருந்தன.
உடனே மீனவர்கள் கடலூர் துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனவர்களிடம் சிறுவர்களை நீங்கள் ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டனர்.
இதனால் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதனப்படுத்தினர்.
பின்னர் 4 சிறுவர்களையும் போலீசார் துறைமுக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுவர்கள் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதும் இதற்கு உறுதுணையாக மேலும் 4 பேர் செயல்படுவதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர். சிறுவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.






