என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலைகடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளிகள் மேலும் 4 பேர் கைது
    X

    சிலைகடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளிகள் மேலும் 4 பேர் கைது

    சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 4 முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கடலூர்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து கடலூர் வழியாக கடந்த மாதம் 23-ந் தேதி புதுவைக்கு சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையொட்டி சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கடலூரில் போலீசார் சந்தேகப்படும் படியாக வந்த காரை வழிமடக்கி அந்த காரில் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள ஐம்பொன் விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர்.

    சிலையை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த ராஜா உள்பட 5 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிலை கடத்தலில் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது அவர்களுக்கும் இந்த சிலை கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது.

    போலீஸ் விசாரணையை திசை திருப்புவதற்காக மாணவர்களின் பெயரை கடத்தல் கும்பல் கூறியது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் போலீசார் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த நாமக்கல் மாவட்டம் கண்ணியக்குறிச்சியை சேர்ந்த சீனிவாசன்(32), பாடாச்சநல்லூர் கார்த்திக்(38), சேலம் மாவட்டம் புல்லான் கவுண்டன்பட்டி நாகராஜன்(27) கார்த்திக்குமார்(32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மயிலாடுதுறையில் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை நாமக்கல் மாவட்டம் ஓடப்பள்ளி கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டதாகும்.

    ஓடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2014-ம் ஆண்டு இந்த ஐம்பொன் சிலையை திருடி மயிலாடுதுறையில் பதுக்கி வைத்திருந்தனர்.

    சிலையை விற்பனை செய்வதற்காக மயிலாடு துறையை சேர்ந்த ராஜா உள்பட 5 பேரிடம் கொடுத்து அனுப்பினர். அப்போது அவர்களை கடலூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    ஓடப்பள்ளி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஐம்பொன் சிலையும், அதை திருடிய கும்பலும் போலீசில் சிக்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்தது.

    சிலைகடத்தல் கும்பலை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

    சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியான அல்லிமுத்து மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் கைதான சீனிவாசன் உள்பட 4 பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×