என் மலர்
செய்திகள்

கடலூரில் மாசிமக ஊர்வலத்தில் மின்கம்பி அறுந்து விழந்ததால் பரபரப்பு
கடலூர்:
மாசி மகத்தை முன்னிட்டு கடலூரில் இன்று தீர்த்த வாரி நடைபெற்றது. இதையொட்டி கடலூர் மார்க்கெட் காலனியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்டது.
வண்ணாரப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மேலே செல்லும் மின் கம்பியில் சாமிகளுக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரம் உரசுவது போல் இருந்தது.
இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த மரக்குச்சியால் மின் கம்பியை தூக்கினர். அப்போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி கிளம்பியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் வெடித்து சிதறியது.
இதனால் ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக மின் கம்பிகள் பக்தர்கள் இல்லாத இடத்தில் அறுந்து விழுந்தது. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மின் கம்பி அறுந்து விழுந்த தகவல் அறிந்ததும் மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், “ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறீர்கள்? மின் வயர்கள் அறுந்து பக்தர்கள் மீது விழுந்திருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?” என்று எச்சரித்தனர்.
அதற்கு பொதுமக்கள், “நீங்கள் மின் கம்பியை நல்ல முறையில் பராமரித் திருந்தால் இதுபோன்ற நடந்திருக்காது” என்று கூறினர். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப் பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மின் கம்பி அறுந்து விழுந்ததைத் தொடர்ந்து அந்த பகுதியில் நீண்ட தூரத்துக்கு சாமிகளை எடுத்து வந்த வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.