search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    சேலத்தில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.
    • சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை (வெண்கலம்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சேலம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அண்ணா பூங்கா வளாகத்தில் மண்டபம் கட்டுமான பணி மற்றும் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

    சுமார் 1,713 சதுரடி பரப்பில் மண்டபம் அமைக்கப்பட்டு, அங்கு 20 அடி உயரத்தில் பிரமாண்டமாக கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது கட்சியினர் மகிழ்ச்சி பொங்க, ஆரவாரத்துடன் கலைஞர் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். பிரமாண்ட கருணாநிதி சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

    கருணாநிதியையும், சேலத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திரையுலகில் உச்சம் தொடவும், அரசியல் அஸ்திவாரத்திற்கும் கருணாநிதி வாழ்வில் சேலம் முக்கிய பங்காற்றி உள்ளது. கருணாநிதிக்கு திருவாரூரை தாய் வீடு என்றால், சேலத்தை அவரது புகுந்த வீடு என்று குறிப்பிடும் அளவுக்கு சேலத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவாரூரில் வசித்தபோது நாடகத்துறையில் இருந்த அவர் திரைப்படத்துறைக்கு வந்தது சேலத்தில்தான்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் இணைந்து அவர் மந்திரி குமாரி படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு அவர் கதை வசனம் எழுத தொடக்கமாக அமைந்தது சேலம். அந்த காலத்தில் தனது தாயார் அஞ்சுகம் அம்மாளுடன் சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் கருணாநிதி ரூ.50 வாடகைக்கு குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சேலத்துக்கும் கருணாநிதிக்கும் உள்ல நெருங்கிய தொடர்பை அறியலாம். அவருக்கு சேலத்தில் பிரமாண்டமான சிலை அமைந்திருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை என்று தி.மு.க. தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    Next Story
    ×