என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறவுள்ளது
    • மாவட்ட அளவிலான போட்டிகளில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயிர் விளைச்சல் போட்டியானது நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்த விவசாயிகளுக்கு மாநில அளவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கூடுதல் விளைச்சல் பெறும் விவசாயி ஒருவருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி நுழைவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது சாகுபடி நில விவரங்கள் சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும்.

    மேலும், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறவுள்ளது. மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி உரிய ஆவணங்களுடன் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.

    செங்கல்பட்டு மாவட்ட அளவில் மணிலா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகெண்டு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ரூ.50 நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்திடுமாறும், இந்த போட்டியில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    மேற்கண்ட மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பயன் பெறுங்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
    • வெடிகுண்டு பரிசோதனை போலீஸ் குழுவினர் அமைத்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தற்போது வெளி நாட்டு செஸ் வீரர்கள் சென்னை வரத்துவங்கி விட்டனர்.

    இவர்கள் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் ஓய்வெடுத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று போலந்து, கஜகஸ்தான், உகாண்டா, கேமன்தீவு, கோஸ்டாரிகா, புல்கர்யா, சர்பியா, எஸ்டோனியா, ஐஸ்லாந்து, கோமோரோஸ் தீவு, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

    வருகிற 28-ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தொடக்க விழாவில் வீரர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பூஞ்சேரி 'போர் பாய்ண்ட்ஸ்' அரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள இரண்டு விளையாட்டு அரங்கத்திற்கும் வீரர்களை அழைத்து வரும் பஸ் வசதி, செல்லும் இடத்தை காட்டும் கருவி, குளிர் அளவு, முதலுதவி பெட்டி, ஆங்கிலம் பேசத்தெரிந்த டிரைவர்கள் நியமனம், அதன் வேகம், பாதுகாப்பு, நிறுத்தும் இடம், இறங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை போக்குவரத்து உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மேலும் விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு வரும் வீரர்களை தொடாமல் பரிசோதனைகளை மேற்கொள்ள 20 டிஜிட்டல் ஸ்கேனர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இதனை வெடிகுண்டு பரிசோதனை போலீஸ் குழுவினர் அமைத்து வருகிறார்கள்.

    மேலும் வெளிநாட்டு வீரர்களை அழைத்து வரும் பஸ்சை அரங்கத்தின் பரிசோதனை நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடம் முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

    • முதல் நாள் 3 கூண்டுகள் வைக்கப்பட்டதில் ஒரு கூண்டில் எந்த குரங்கும் சிக்கவில்லை.
    • குரங்குகள் குடும்பமாக வாழும். அவை எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும்.

    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பேரூராட்சிக்கும், வனத்துறைக்கும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து பேரூராட்சி நிர்வாகமும், அச்சரப்பாக்கம் கோட்ட வனத்துறையும் இணைந்து பேரூராட்சிக்கு வெங்கடேசபுரம் காந்தி நகர், நேரு நகர், கஸ்தூரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கூண்டுகள் அமைத்து குரங்குகளை பிடித்தனர்.

    முதல் நாள் 3 கூண்டுகள் வைக்கப்பட்டதில் ஒரு கூண்டில் எந்த குரங்கும் சிக்கவில்லை. 2-வது கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 3-வது கூண்டில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளும் அடைபட்டன. 2-வது நாள் 26 குரங்குகள் பிடிபட்டன.

    இந்தநிலையில் ஒரே கூண்டில் 70-க்கும் அதிகமான குரங்குகளை வனத்துறையினர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

    ஆனால் இதற்கு வனத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. 3 கூண்டுகள் வைத்தும் ஒரு கூண்டில் எந்த குரங்குகளும் சிக்காததும், ஒரே கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கி உள்ளதே? என்று வனத்துறையினரிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:-

    குரங்குகள் குடும்பமாக வாழும். அவை எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும். 70 குரங்குகள் வரை ஒரே குடும்பாக வசிக்கும். நாங்கள் வைத்த கூண்டில் ஒரே குடும்பத்திலுள்ள குரங்குகள் குழுவாக கூண்டுக்குள் செல்லும்போது இவ்வாறு சிக்குவது உண்டு. அப்படிதான் சிக்கி இருந்தது. சித்ரவதை செய்யவில்லை. ஒரே கூண்டில் பிடிபிட்ட குரங்குகளை தனியாக பிரித்து மற்றொரு கூண்டுகளில் அடைத்து அனைத்தையும் வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து நின்ற 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது.
    • இதில் அருகில் நின்ற சாம்ப லால், உண்ணாமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் சாம்ப லால் (வயது40). வட மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    வாயலூர் கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை(52). இன்று காலை இவர்கள் இருவரும் தேவநேரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வேலைக்கு செல்ல ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தனர்.

    அப்போது ஒன்றன்பின் ஒன்றாக 2 ஆட்டோக்கள் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றன. அதில் இருந்த டிரைவர்களிடம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அந்த நேரத்தில் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து நின்ற 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் அருகில் நின்ற சாம்ப லால், உண்ணாமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஆட்டோக்களில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    சொகுசு காரில் 3 பேர் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயிற்சி போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்
    • செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று பிரமாண்ட பயிற்சி ஆட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இந்தப் போட்டியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் சென்னையில் தொடங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரமாண்டமாக இருக்கும்.

    இன்று நடைபெறும் பயிற்சி போட்டி நோபல் ரெக்கார்டாக கருதப்படுகிறது. இந்த பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகை தர இருக்கிறார்.

    இந்த பயிற்சி போட்டியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் வந்து இருக்கிறார்கள். இந்த போட்டி இரவு 8 மணி வரை தொடர்ந்து போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டி மூலம் இந்தியாவின் நீண்ட நாள் கனவு இன்று இந்த மண்ணில் நிறைவேற்றி இருக்கிறது என்று செஸ் நடுவர்கள் தெரிவித்தனர். இதற்காக அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள குக்கிராமம் வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் பற்றிய செய்தி சென்று சேர்ந்துள்ளது.

    இந்த சாதனை எல்லாம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தான் சாரும். இதற்காக செஸ் வீரர், வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் முதல் முறையாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய இடங்களில் ஜோதி கொண்டுவரப்பட்டு இறுதியில் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு வந்தடையும்.

    இந்த போட்டியையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி தலைமை தாங்கினார்.
    • தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி ஐயஞ்சேரி வி.பி.கே. நகரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆராமுதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அமைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற செயலர் கருணாகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது.
    • மகளிர் சுய உதவிக்கள் மூலம் சதுரங்கம் குறித்து வரையப்பட்டிருந்த கோலங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார்.

    செங்கல்பட்டு:

    மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதையொட்டி செங்கல்பட்டில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்கள் மூலம் சதுரங்கம் குறித்து வரையப்பட்டிருந்த கோலங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார்.

    ஆட்சியர் ராகுல் நாத், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது.
    • செஸ் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் சென்னை வரத் தொடங்கினார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர், நடுவர்கள், செஸ் கூட்டமைப்பினர் என 3 ஆயிரம் பேர் வருகிறார்கள். அவர்கள் இன்று முதல் வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

    இந்த நிலையில் ரஷ்ய செஸ் கூட்டமைப்பினர் மற்றும் அவர்களுடன் வேறு சில நாட்டவர்களும் 'செஸ் ஒலிம்பியாட்' நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இவர்கள் வெளிநாட்டு வீரர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் போர்டு, இணையதள வசதி, அரங்கத்தின் குளிர் அளவு, மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு, பயணம் செய்யும் வாகனம், நிறுத்தும் இடங்கள், சி.சி.டி.வி கேமரா பகுதிகள், உலக நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரம் அமைப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் குறித்து இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் செஸ் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் சென்னை வரத் தொடங்கினார்கள். இன்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து 4 வீரர்களும், அங்கேரியில் இருந்து 2 வீரர்களும் என 6 பேர் சென்னை வந்தனர்.துபாய் விமானத்தில் அவர்கள் சென்னை வந்திறங்கினார்கள்.

    இன்று சென்னை விமான நிலையம் வந்த வெளிநாட்டு வீரர்கள் முதலில் பாதுகாப்பாக அவர்கள் தங்கும் விடுதிக்கு செல்கிறார்கள். பின்னர் 28-ந் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு அதற்கு தயாராக உள்ளனர்.

    அந்தந்த நாடுகளில் பயண நேரத்திற்கு ஏற்ப, வரும் 27-ந் தேதிக்குள் அனைத்து நாட்டு வீரர்கள் வர உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையம், வீரர்கள் தங்கும் ஓட்டல், சென்னை நேரு விளையாட்டு அரங்கம், மாமல்லபுரம் போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நெடுஞ்சாலை பூங்காவில் செயற்கை நீரூற்று மற்றும் “வணக்கம் சென்னை” பதாகை அமைக்கும்.
    • மகாபலிபுரம் முதல் பூஞ்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் 2.4 கி.மீ. நீளசாலை ரூ.1.89 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரை 10.10 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    விமான நிலையம் எதிரே உள்ள சாலை மேம்பாலத்தில் பசுமை பூங்கா அமைத்து அழகுபடுத்தும் பணி ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    நெடுஞ்சாலை பூங்காவில் செயற்கை நீரூற்று மற்றும் "வணக்கம் சென்னை" பதாகை அமைக்கும் பணி ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 20.2 கி.மீ. நீள ராஜீவ்காந்தி சாலையில் மையத்தடுப்பானில் வண்ணம் பூச்சு பணி ரூ.85 லட்சம் செலவிலும் சாலை பாதை வரையரைக் கோடிடும் பணி ரூ.160 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றன.

    இந்த சாலையில் அமைந்துள்ள 14 சாலை பாதசாரிகள் நடைபாதைகள் ரூ.58 லட்சம் செலவில் வண்ணம் பூச்சு செய்யும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலையினை இணைக்கும் 2.4 கி.மீ. நீள சாலையில் 1 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.20கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மகாபலிபுரம் முதல் பூஞ்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் 2.4 கி.மீ. நீளசாலை ரூ.1.89 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    அக்கரை முதல் மகாபலிபுரம் வரையில் சாலை மையத்தடுப்பில் வண்ணம் பூசுதல், சாலைப்பாதை வரையரைக் கோடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அமைத்தல், 55 சோலார் எச்சரிக்கை சிக்னல் விளக்குகள் அமைத்தல் மற்றும் சாலை புருவங்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.4.99 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    சாலையில் நகரப் பகுதியில் அமைந்துள்ள மிள் விளக்குகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்கு கள் அனைத்தும் ரூ.80 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு வருகின்றது.

    பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை 5.85 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    இச்சாலையில் 10 கி.மீ நீளத்திற்கு சாலை வரையரைக் கோடு, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பெரிய தகவல் பலகைகள் அமைக்க ரூ.1 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மைய தடுப்புச் சுவருக்கு கருப்பு வெள்ளையடித்தல், பசுமை செடிகள் வளர்த்தல், சாலையோரம் உள்ள மண்குவியல்களை அகற்று தல் உள்ளிட்ட பணிகள் ரூ.48.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    கேளம்பாக்கம் முதல் திருப்போரூர் வரை ராஜீவ்காந்தி சாலையில் 4.70 கி.மீ. நீளத்திற்கு ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் சாலையை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுசேரி முதல் திருப்போரூர் வரை பழுதடைந்த உயரம் குறைந்த மைய தடுப்புச் சுவருக்கு மாற்றாக பசுமைச் செடிகள் அமைக்க மைய தடுப்பான் கள் அமைக்கும் பணி ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    திருப்போரூர் முதல் பூஞ்சேரி வரை 10 கி.மீ. நீளத்திற்கு மத்திய தடுப்புச் சுவர் பழுது பார்த்தல், வர்ணம் அடித்தல் மற்றும் மண் புருவங்களை பழுது பார்த்தல் பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    மாமல்லபுரம் நகரில் 800 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் ரூ.1.20 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதி சாலை 400 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுதுபார்த்தல் மற்றும் கிரானைட் கற்கள் அமைக்கும் பணிகள் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ.5 லட்சம் மதிப்பில் நடை பெற்று வருகிறது.

    மாமல்லபுரம் கடற்கரை கோயில் சாலையில் 225 மீட்டர் நீளத்திற்கு வரை பேவர்பிளாக் அமைக்கும் பணி ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

    மாமல்லபுரம் ஐந்துரத சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுது பார்த்தல் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் பணி ரூ.15 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

    5.75 ஏக்கர் பரப்பளவில் 100 பேருந்துகள் மற்றும் 50 கார்கள் நிறுத்த இடவசதி. வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் தேங்காவண்ணம் வடிகால் வசதி. வாகன ஓட்டுனர் ஓய்வு அறை, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு சோதனை மையம். மருத்துவ அவசர சிகிச்சைக்காக மருத்துவ அறை. ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் வாகன நிறுத்துமிட பாதுகாப்பு சோதனை பகுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காவல் கட்டுப்பாட்டு மையம், கண்காணிப்பு மற்றும் உயர் அலுவலர் அறை. முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு சோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    • மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
    • மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் சவாரிக்கு பயன்படுத்த 25 குதிரை, ஒரு ஒட்டகம் உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் போலீசாரின் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்து விளையாட்டு அரங்கம் வரை செஸ் வீரர்கள் தினசரி வந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். பகுதிகளில் போலீசார் 24மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் சவாரிக்கு பயன்படுத்த 25 குதிரை, ஒரு ஒட்டகம் உள்ளது. இதனை ஓட்டுபவர்களுக்கு அடையாள அட்டையோ, சீருடையோ கிடையாது.

    இதனால் போலீசார் அவர்களை கண்காணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தினமும் குதிரைகளை ஓட்டுவதற்கு புதுப்புது நபர்கள் வருவதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் குதிரை ஓட்டிகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    எனவே மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுவோருக்கு சீருடை கொடுக்கப்பட்டு உள்ளது போன்று மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை ஓட்டுபவர்களின் விபரங்களை முறையாக சேகரித்து சீருடையும், அடையாள அட்டையும் வழங்கினால் போலீசார் எங்களை தனியாக அடையாளம் காண முடியும். எங்களுக்கும் சிரமம் இருக்காது என்று குதிரை ஓட்டிகள் கூறி உள்ளனர்.

    • சென்னையின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
    • நெடுஞ்சாலைத்துறை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடு முடிவுக்கு வந்து உள்ளது.

    சென்னையின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது, விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலும் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன.

    மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பாதை ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீட்டடர் தூரத்துக்கு அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, பல இடங்களில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    இதற்கிடையே சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க. நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன் கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா பூங்கா மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய 12 நிலையங்கள் அமைய உள்ளன.

    ஏற்கனவே கோயம்பேடு பஸ்நிலையத்தை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் 2-வது புறநகர் பஸ்நிலைய கட்டுமான பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

    இங்கிருந்து தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில்பாதை மிகவும் எதிர்பாப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே தாம்பரம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. அதே வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதையும் செல்ல இருக்கிறது. இதனால் எந்த உயரத்தில் மெட்ரோ ரெயிலின் வழித்தடம் கட்டப்பட வேண்டும்.

    மேம்பால உயரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் இடையே நீண்ட கால பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான நிலையம் -கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்து இருந்தது.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடு முடிவுக்கு வந்து உள்ளது.

    இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, விமான நிலையம்- கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பாதை தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பாதையின் உயரம் குறித்து சில இடங்களில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்படும். வரும் வாரங்களில் விரிவான திட்ட அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்படும்.

    அடுத்த ஆண்டு மத்தியில் பணிகளைத் தொடங்க திட்டமிட்டு இருந்தாலும், மாநில அரசு மற்றும் மத்திய அரசின் ஒப்புதல்கள் வழங்கப்பட்டு, விரைவில் நிதிஉதவிக்கான முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் இந்தத் திட்டம் தாமதமாகும் என்றார்.

    • சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து.
    • மாணவி நிரோஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் நிரோஷா (வயது20).

    பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை அவர் கல்லூரிக்கு செல்வதற்காக சிங்கப்பெருமாள் கோவில் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாள பகுதியில் நடந்து சென்றார். அப்போது திருமால்பூரில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற விரைவு மின்சார ரெயிலின் மீது திடீரென நிரோஷா பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். முதலில் நிரோஷா தற்கொலை செய்தாரா? அல்லது விபத்தா? என்ற சந்தேகத்தில் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர் தற்கொலை செய்து இருப்பதை ரெயில்வே போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.

    இது குறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவி நிரோஷா ரெயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தில் போய் நின்றார் என்றார்.

    மாணவி நிரோஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×