என் மலர்
அரியலூர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர்கள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2மாணவியர்கள் ஆக மொத்தம் 10 மாணவ – மாணவியரைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் மாணவ –மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந் தபட்சமாக ஆண்டொண்டிற்கு ரூ.28,000–க்கு மிகாமல் இரண்டாண்டிற்கு ரூ.56,000– நிதியுதவி வழங்கப்படுகிறது.
கல்வி கட்டணம் ரூ.8,000, பராமரிப்புக் கட்டணம் ரூ.3650, விடுதிக்கட்டணம் ரூ.15,000 (விடுதியல் சேர்ந்து பயில்பவருக்கு மட்டும்), சிறப்புப் பயிற்சிக் கட்டணம் ரூ.1,500, ஆகமொத்தம் ரூ.28,150 அல்லது ரூ.28,000 (ஓராண்டிற்கு) மட்டும் வழங்கப்படும்.
தகுதியுடைய மாணவ –மாணவியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). இவர் தனது பைக்கில் குறுக்குரோடு சென்றுவிட்டு மீன்சுருட்டிக்கு திரும்பி சென்றார்.
அப்போது எதிரில் வந்த மினி லாரி மோதியது. இதில் குணசேகரன் படுகாயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மீன்சுருட்டி எஸ்.ஐ. நமச்சிவாயம் வழக்குபதிவு செய்து மினி லாரியை ஓட்டி வந்த சுண்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார்(34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள புளியங்குழி மேலத்தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் பிரபு (வயது22). இவர்கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகள் ரஞ்சிதாவை திருமணம் செய்துக்கொண்டு அதே ஊரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் புளியங்குழியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது அவரது தாய் பூங்கோதை குடும்பத்தின் மூத்த மகனான நீ பொறுப்பு இல்லாமல் மாமனார் வீட்டோடு போய்விட்டாயே என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரபு வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
விக்கிரமங்கலம் அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் தமயந்தி ( வயது 17). அருகிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகரின் மனைவி பவுனம்மாள் தன் உறவினர்களை அழைத்துக்கொண்டு பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் தனசேகர் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து தமயந்தி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுதா (வயது 40). அர்ச்சனாபுரம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வழக்கம் போல் சுதா பள்ளிக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது அவர் வாலாஜாநகரம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று சுதாவின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுதா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அடிக்கடி இந்த சாலையில் இதுபோன்ற விபத்துக்கள் நடை பெறுவதாகவும், வேகத்தடை இல்லாததே விபத்துகளுக்கு காரணம் என்றும் கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அரியலூர் தாசில்தார் அமுதா, டி. எஸ்.பி. முத்துக்கருப்பன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜ வேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தருவதாக கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விபத்தில் பலியான சுதாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
பள்ளி திறந்த 2–வது நாளிலேயே ஆசிரியை விபத்தில் பலியான சம்பவம் அவரது வீட்டிலும், பள்ளியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் ராம்குமார் ( வயது 19). இவர் ஜெயங்கொண்டம் முத்துநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ராம்குமார், அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (67), ஜோதிமகன் தினேஷ்(18), சுப்ரமணியன் மகன் சூர்யா (19) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் எஸ்.ஐ. செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் தீபா (20). இவர் சமீபத்தில் 12–ம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்று மேல்படிப்பு படிக்க இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தீபாவை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் திலகம் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குபதிவு செய்து தீபாவை தேடி வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. அவரது மனைவி பவுலாஜெசின் (வயது 59).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி (65) குடும்பத்தாருக்கும் இடப்பிரச்சிணை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் கடந்த 28–ம் தேதி அந்தோணிசாமி அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன்கள் கிருஷ்ணவதேவராஜ் (40), வின்செண்ட்பவுல் (36), ஜெனிட்டாமேரி (34).ஆகியோருடன் சென்று வீட்டில் தனியாக இருந்த பவுலாஜெசினியிடம் தகராறு செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பவுலாஜெசின் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து அந்தோணிசாமி, வின்செண்ட்பவுல், ஜெனிட்டாமேரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 50). விவசாயி. இவரது முருங்கை தோப்பில் அதே ஊரைச்சேர்ந்த முருகேசன் (35) என்பவரது மாடுகள் மேய்ந்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை முருகேசன், அவரது மனைவி அஞ்சலை, அவரது சகோதரர் தர்மராஜ் (35), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை, வெள்ளச்சாமி மகன் பாண்டியன் (35), தங்கராசு மகன் பிச்சைமுத்து, முருவன் மகன் முத்து, ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் கணேசன் (50) ஆகியோருடன் சண்முகசுந்தரம் வீட்டின் முன் நின்றுகொண்டு அவதூறாக திட்டியுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட சண்முகசுந்தரத்தை முருகேசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சண்முகசுந்தரம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து,முருகேசன், தர்மராஜ், பாண்டியன், கணேசன் ஆகியோரை கைது செய்தார்.தப்பி ஓடிய மற்ற 4 பேரை தேடி வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
ஆண்டிமடம் அருகேயுள்ள வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் மணிகண்டன் (25). விவசாயி. இவருக்கு சத்யா (23) என்ற மனைவியும், தாரணி (3) என்ற மகளும் உள்ளனர்.
மணிகண்டன் நேற்று மாலை கடைவீதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினார். பின்னர் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, ஜெயங்கொண்டத்திலிருந்து ஆண்டிமடம் நோக்கி சென்ற மினி வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த ஆண்டிமடம் விளந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (60) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 48). இவர் தனது 2 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு பின்புறத்தில் கட்டியிருந்தார். நேற்று காலை எழுந்து சென்று பார்த்த போது 2 ஆடுகளையும் காணவில்லை.
இதையடுத்து ஆடுகளை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஜெ.குறுக்கு ரோடு வாரச்சந்தையில் 2 பேர் தனது ஆடுகளை இருசக்கர வாகனத்தில் கட்டி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் கலியபெருமாளை கண்டதும் ஆடுகளை திருடிய நபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் கலியபெருமாள் மடக்கி பிடித்தார்.
பின்னர் உடையார்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் ஆடுகளை திருடியவர்கள் உடையார்பாளையம் சேர்ந்த பழனிவேல் மகன் வினோத் (20), வடிவேல் மகன் சின்னராஜா என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட செயலாளரும், தமிழக அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அரியலூர் காமராஜர் திடலில் இருந்து திறந்த வாகனத்தில் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக திருச்சி ரோடு, சத்திரம் வழியாக வந்து வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அரியலூர் பஸ்நிலையம் அருகேயுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், நகர செயலாளர் கண்ணன் உள்ளிட்ட அனைத்து அணி பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
திருமானூர் பகுதியில்...இதே போல் திருமானூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து ஒன்றிய கழக செயலாளர் குமரவேல் தலைமையில் தொகுதி கழக செயலாளர் சேட்டு ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ தொண்டர்களுடன் திருமானூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து தாமரை ராஜேந்திரன் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் எதிர்த்து நின்றாலும், தனித்து நின்று மக்களோடு கூட்டணி வைத்து தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது.
மேலும் அரியலூர் தொகுதி மேம்பாட்டிற்காக நான் கடுமையாக உழைப்பேன். எனக்கு வாக்களித்து அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு சாமிநாதன், திருவாசகமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சரவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர்ஷெரிப், மாவட்ட பிரதிநிதி தங்க.தென்னரசு, ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரை.அலெக்சாண்டர், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை, ஊராட்சி மற்றும் அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






