என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்திய தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் சாலையக்குறிச்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியை புனிதவதி பள்ளிக்கு தாமதமாக வருவதோடு, மாணவர்களுக்கு சரியான கல்வி கற்று தருவதில்லை என்று பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது

    மேலும் பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ-மாணவிகள் மூலம் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று பள்ளிக்கு வந்த தலைமையாசிரியை பள்ளியில் உள்ள கழிவறையையும், வகுப்பறைகளையும் சுத்தம் செய்யுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தினாராம்.

    இதுகுறித்த தகவல் அறிந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் இருந்த மாணவர்களை அழைத்து கொண்டு பள்ளியின் வகுப்பறையை பூட்டினர். மேலும் தலைமையாசிரியை புனிதவதியை இடமாற்றம் செய்து புதிதாக தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தலைமையாசிரியை புனிதவதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இதுவரை உதவி தலைமையாசிரிராக இருந்த திரிநிஷாபால் தலைமையாசிரியராக தற்காலிகமாக பொறுப்பேற்பார் என உறுதியளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் விட்டு சென்றனர். மேலும் தலைமையாசிரியை புனிதவதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    ஈச்சங்காடு நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செந்துறை:

    ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்மாத்தூர், துளார், ஆதனக்குறிச்சி, முதுக்குளம், குவாகம், கொடுகூர், இடையக் குறிச்சி, வல்லம், முள்ளுக் குறிச்சி, தாமரைப் பூண்டி, ஆலத்தியூர், இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், கோட்டைக்காடு, மற்றும் பதுப்பாளையம். ஆகிய பகுதிகளுக்கு.

    நாளை 9-ந்தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மாண கழகம் செந்துறை உதவி செயற்பொறியாளர் மு.கணேசன் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் அருகே தமிழர் நீதிக்கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள கா.அம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). தமிழர் நீதிக்கட்சியின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த அவர், வி.கைகாட்டியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார்.

    நேற்றிரவு பணி முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தேளூர் பிரிவு சாலையில் பாப்பாத்தி அம்மன் கோவி ல் அருகே செல்லும் போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென முருகேசனை வழி மறித்தனர்.

    கையில் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் முருகேசனை வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினார். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் முருகேசனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொலையை நேரில் பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார் கிரி, டி.எஸ்.பி. முத்துக்கருப்பன், கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. கள்ளத் தொடர்பு விவகாரத்தில் முருகேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட முருகேசனுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகன், 4 மகள்களும் உள்ளனர்.

    அரியலூர் அருகே வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா (வயது 35). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக வெங்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சசிகலாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். மேலும் தொடர்ந்து கள்ளச் சந்தையில் மதுபாட்டில்களை விற்று வந்தார்.

    எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார்கிரி, மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ்க்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் சசிகலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விசாரணை கைதி தப்பி ஓடியதால் சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அண்ணங்காரகுப்பம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி, தர்மகர்த்தா, நாட்டாமைகள் அனைவரும் கோவிலின் ஒரு பகுதியில் ஆலோசணை கூட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

    அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் சாமி கும்பிடுவது போல் கோவிலுக்குள் சென்று திரெளபதியம்மனின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துள்ளார்.

    இதை கவனித்த பூசாரி முருகன் சத்தம் போடவே, அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற டிப்டாப் ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் திருவள்ளுர் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த யுவராஜ் (30) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் யுவராஜை ஆண்டிமடம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பூசாரி முருகன் புகார் அளித்ததின் பேரில் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் வழக்கு பதிவு செய்து யுவராஜை கைது செய்தார்.

    இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த யுவராஜ், திடீரென போலீசாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணை கைதி தப்பியோடியதை தொடர்ந்து பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியனை , அரியலூர் எஸ்.பி. அருண்குமார் கிரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
    காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை திரும்ப நடத்த வலியுறுத்தி இந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் அங்கனூரில் இன்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    அரியலூர் பகுதியில் சிமெண்ட் ஆலை லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளி நேரங்களில் டிப்பர் லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும்.

    காட்டுமன்னார்கோவில் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை திரும்ப நடத்த வலியுறுத்தி இந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேர்தல் சட்டதிருத்தத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியும்.

    தமிழக அரசியலில் தி.மு.க.-அ.தி.மு.க. இணக்கமான நாகரீகமான மாற்றம் ஏற்பட எங்களது கூட்டணி முக்கிய காரணமாகும். அவர்கள் நட்புறவாக இயங்குவதை வரவேற்கிறோம்.

    உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவையற்றது. எங்கள் கூட்டணி தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் 3 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பொக்லைன் எந்திர டிரைவரை கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெற்றியார்வெட்டு காலனி தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்தோஷ் (வயது 16). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் (17), வினோத் (18). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை சந்தோஷ் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    இது குறித்து சந்தோஷ் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குப்பதிவு செய்து, மீன்சுருட்டி அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்த பொக்லைன் எந்திர  டிரைவர் காளிமுத்துவை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    அரியலூர் அருகே தனியார் சிமெண்டு ஆலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் கிராமத்தைச் சுற்றிலும் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளது. மிகவும் ஆழமாக தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கற்களை வெட்டி எடுப்பதால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆலத்தியூர் கிராம மக்கள் இன்று தனியார் சிமெண்டு ஆலைக்கு எதிராக திடீர் பேராட்டத்தில் ஈடுபட்டனர். சுண்ணாம்புக் கற்கள் ஏற்ற வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்த அவர்கள், சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    சிமெண்டு ஆலை நிர்வாகம் 150 அடி ஆழத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதாகவும் அவர்கள் கூறினர். அவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.

    அரியலூர்:

    அரியலூர் வனக்கோட்டம் மத்திய நாற்றங்காலில் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் 2016–17–ம் ஆண்டு உற்பத்தி செய்த 1,11,880 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது உற்பத்தி செய்யப்பட்ட 50,000 புங்கன், 15,000 தேக்கு, 10,000 புளியங்கன்று, 8,700தூங்குவாகை, 6,000 வேம்பு, 3,000 ஆவி,2,000 நாவல், 1000 ஈட்டி, 1000 நெல்லி, 1,600 நீர்மருது, 4650 மந்தாரை, 1000 டெலானக்ஸ், 760 சிகப்பு சந்தனம், 670 தான்றி, 500 பாதாம் என 1,11,880 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் விவரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார்.

    மேலும் கூடுதலாக இரண்டு நாற்றங்களை உருவாக்கிட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அரியலூர் சமூக காடுகள் சரகத்தின் மூலம் 1,990 முதல் நாற்றங்கால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு மரங்களை பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    இந்த மரக்கன்றுகள் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட பணியாளர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட வன அலுவலர் சந்திரன், வனச்சரக அலுவலர் கணேசன், வட்டாட்சியர் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    விக்கிரமங்கலம் அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் தமயந்தி ( வயது 17). அருகிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகரின் மனைவி பவுனம்மாள் தன் உறவினர்களை அழைத்துக் கொண்டு பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் தனசேகர் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்குபதிவு செய்து தமயந்தி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக 06.06.2016 முதல் 30.06.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்டத்தில் நடக்கிறது.

    அரியலூர்:

    ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக 06.06.2016 முதல் 30.06.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆண்டிமடம் ஃ தா.பழூர் ஜெயங்கொண்டம் திருமானூர், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

    மேலும், ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் அதிகாலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்பதால் ஆதார் எண் பெறாத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து ஆதார் புகைப்படம் எடுத்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் அருகே 4-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விக்கிரமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3-வது மகன் வசந்த் (வயது 10). அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் காலை கருணாநிதி, தனது மூத்த மகன்கள் 2 பேரையும் நாகலேரியில் உள்ள பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    அப்போது வசந்த், தானும் வருவதாக கூறினான். கருணாநிதி, அண்ணன்களை பள்ளியில் விட்டு விட்டு வந்த பிறகு உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டார். தந்தை தன்னை அழைத்து செல்லாததால் மிகவும் மனமுடைந்தான்.

    பின்னர் வீட்டின் சமையல் அறைக்கு சென்ற வசந்த், அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி, தீவைத்து கொண்டான். உடலில் தீப்பற்றிய நிலையில் அலறிய அவன், குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றி அணைக்க முயன்றுள்ளான். ஆனால் அவனால் முடியவில்லை.

    இதையடுத்து அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் வசந்த் மீது பற்றிய தீயை அணைத்து சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வசந்த் பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து உமா, விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லாததால் 4-ம்வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×