என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே தந்தை மோட்டார்சைக்கிளில் அழைத்து செல்லாததால் 4-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
    X

    அரியலூர் அருகே தந்தை மோட்டார்சைக்கிளில் அழைத்து செல்லாததால் 4-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை

    அரியலூர் அருகே 4-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விக்கிரமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3-வது மகன் வசந்த் (வயது 10). அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் காலை கருணாநிதி, தனது மூத்த மகன்கள் 2 பேரையும் நாகலேரியில் உள்ள பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    அப்போது வசந்த், தானும் வருவதாக கூறினான். கருணாநிதி, அண்ணன்களை பள்ளியில் விட்டு விட்டு வந்த பிறகு உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டார். தந்தை தன்னை அழைத்து செல்லாததால் மிகவும் மனமுடைந்தான்.

    பின்னர் வீட்டின் சமையல் அறைக்கு சென்ற வசந்த், அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி, தீவைத்து கொண்டான். உடலில் தீப்பற்றிய நிலையில் அலறிய அவன், குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றி அணைக்க முயன்றுள்ளான். ஆனால் அவனால் முடியவில்லை.

    இதையடுத்து அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் வசந்த் மீது பற்றிய தீயை அணைத்து சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வசந்த் பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து உமா, விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லாததால் 4-ம்வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×