என் மலர்
செய்திகள்

மொபட்டில் சென்ற ஆசிரியை லாரி மோதி பலி: பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர்:
அரியலூர் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுதா (வயது 40). அர்ச்சனாபுரம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வழக்கம் போல் சுதா பள்ளிக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது அவர் வாலாஜாநகரம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று சுதாவின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுதா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை பார்த்த பொதுமக்கள் அடிக்கடி இந்த சாலையில் இதுபோன்ற விபத்துக்கள் நடை பெறுவதாகவும், வேகத்தடை இல்லாததே விபத்துகளுக்கு காரணம் என்றும் கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அரியலூர் தாசில்தார் அமுதா, டி. எஸ்.பி. முத்துக்கருப்பன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜ வேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தருவதாக கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விபத்தில் பலியான சுதாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
பள்ளி திறந்த 2–வது நாளிலேயே ஆசிரியை விபத்தில் பலியான சம்பவம் அவரது வீட்டிலும், பள்ளியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






