என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி லட்சுமி வயது (38). இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர். லெட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதால் டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கடுமையாக வயிற்று வலி இருந்ததால் மனமுடைந்த லட்சுமி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். மயங்கிய நிலையில் கிடந்தவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகச்சை பெற்று வந்த லட்சுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து லட்சுமியின் அண்ணன் தமிழரசன் தூத்தூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
ஜெயங்கொண்டம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 65).இவரது மனைவி திலகவதி (55). இவர்களது மகன் பாலாஜி (35), பிசியோதெரபி டாக்டர். இன்று அதிகாலை 3 பேரும் ஒரு காரில் கும்பகோணம் கோவிலுக்கு புறப்பட்டனர். காரை பாலாஜி ஓட்டினார். முன் இருக்கையில் கோவிந்தராஜூவும், பின்னால் திலகவதியும் அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பாப்பாக்குடி கிராமம் சென்னை-கும்பகோணம் சாலையில் செல்லும் போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 3 பேரும் பலத்த காயமடைந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூழாட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலுச்சாமி (50), சேட்டு (32). மாட்டு வண்டி தொழிலாளர்களான இவர்கள் நேற்றிரவு தங்களது மாட்டு வண்டிகளில் கடலூர் மாவட்டம் கள்ளிப்பாடிக்கு மணல் ஏற்றுவதற்காக சென்றனர். ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் பகுதியில் செல்லும் போது அந்த வழியாக எதிரே சென்னையில் இருந்து டால்மியாபுரத்திற்கு உரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.
திடீரென தாறுமாறாக ஓடிய லாரி 2 மாட்டு வண்டிகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 மாட்டு வண்டிகளிலும் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு மாடுகள் இறந்தன. மேலும் பாலுச்சாமி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி உடையார்பாளையம் அருகே சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து உடையார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் லாரியை மடக்கினர். பின்னர் டிரைவரை பிடித்து விசாரிக்கும் போது, அவர் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி பேரூர் கிராமத்தை சேர்ந்த தங்கப்பழம் மகன் ஜீவா (23) என்பதும், அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் சின்னப்பட்டாகாடு பகுதியில் உள்ள தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்பு கற்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த லாரிகளால் அருங்கால் கல்லக்குடி கிராமத்தில் சாலை சேதமடைவதாகவும், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்.
இதனால் கடந்த மாதம் 28-ந்தேதி அந்த வழியே செல்லும் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் அந்த வழியே சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகள் சில நாட்களாக செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று மீண்டும் அருங்கால் கல்லக்குடி கிராமத்தின் வழியாக சுண்ணாம்புக்கல் லாரிகள் இயக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், அவ்வழியே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் 100 நாள் திட்டப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை நடுத்தெரு குட்டையில் பணிதுவங்கியது. அப்போது அங்கு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வேலைசெய்ய வேண்டும். மற்றவர்கள் இடத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டுமென சம்மந்தம் இல்லாத ஒருவர் கூறினர்.
இதனால் பொதுமக்கள் திரண்டு கல்லாத்தூர் - மீன்சுருட்டி சாலையில் அனுமார் கோயில் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். நேற்றுவரை அனைவருக்கும் வேலை வழங்கி இன்று திடீரென ஒருவர்மட்டும் வேலைசெய்ய வேண்டுமென பணிதள பொறுப்பாளர் இல்லாத ஒருவர் கூறியதை கண்டித்தும் தொழிலாளர்களை பணிதள பொறுப்பாளர் மட்டுமே பணியை கவனிக்கவேண்டும் மற்றவர்கள் அவ்விடத்தில் நின்று அதிகாரம் செய்வதும் தவறாக பேசுவதும் தவிர்க்க வேண்டும்.
வேலைக்கான சம்பளத்தை 3 மாதம் கழித்து வழங்குவதை தவிர்த்து குறிப்பிட்ட நாளில் வழங்கவேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜெயங்கொண்டம் ஒன்றிய ஆணையர் கலையரசன், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முறையாக அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் தொழிலாளர்கள் சாலை மறியலைகைவிட்டு கலைந்து சென்றனர், இதனால் கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலையில் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். துணை ராணுவ வீரர். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் முத்து கருப்பு (வயது 8) . இவன் திருமானூர் அருகே கீழப்பழுவூரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வகுப்பறையில் பாடத்தை கவனித்து கொண்டிருந்த போது முத்துகருப்பு திடீரென அடுத்தடுத்து 3 முறை வாந்தி எடுத்தான்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் முத்து கருப்புவை சிகிச்சைக்காக கீழப் பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முத்துகருப்புவை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கீழப்பழுவூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே முத்துகருப்புவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கீழப்பழுவூர் போலீசில் கவிதா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்நலக்குறைவு காரணமாக முத்துகருப்பு இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அந்த தனியார் பள்ளி வழக்கம் போல திறக்கப்பட்டது. மாணவன் முத்து கருப்பு இறந்து போனதற்கு பள்ளி நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவிக்காமல் பள்ளியை நடத்துகிறார்களே? என கண்டனம் தெரிவித்த முத்து கருப்புவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு திரண்டு சென்றனர். பின்னர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று பள்ளியை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்அடிப்டையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 15). இவர் கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 29-ந்தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, திடீரென சிவரஞ்சனி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள், சிவரஞ்சனி மீது பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவரஞ்சனி இறந்தார்.
இது குறித்து ஆண்டிமடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து சிவரஞ்சனி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவரஞ்சனிக்கு படிப்பு சரியாக வரவில்லை. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பொய்யாமொழி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமாறுதல் கலந்தாய்வில் கடந்த ஆண்டில் பதவி உயர்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலந்து கொள்ளத்தக்க வகையில் 1–6–2015–க்கு முன்னர் என்ற விதியை ரத்து செய்து கடந்த ஆண்டுகளை போல் மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் சின்னதுரை நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் துரைசாமி என்பவருக்கு ஊனமுற்றோர் உதவித் தொகைக்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் சவுதி அரேபியா நாட்டிற்கு வேலைக்கு சென்று இறந்து போன அழகாபுரம் ரவி, முத்து சேர்வாமடம் அருண்குமார் முத்துசாமி ஆகியோர்களின் குடும்பத்திற்கு ரூ.4,58,090 மதிப்பில் இழப்பீட்டு தொகைக்கான காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.4500 வீதம் ரூ.67 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும் என மொத்தம் 18 நபர்களுக்கு ரூ.5 இலட்சத்து 52 ஆயிரத்து 90 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பூமி, துணை ஆட்சியர் (சமூக நல பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லம்மாள். இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவருடைய மாடுகள் அப்பகுதியில் உள்ள வயல்களில் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அப்பகுதியில் விவசாய மோட்டாருக்கு செல்லும் மின்கம்பி ஒன்று காற்றில் அறுந்து விழுந்து கிடந்தது.
இதில் ஒரு சினை மாடு சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, தா.பழூர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 39). இவர் கோட்டியால் பாண்டி பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையான ரூ.90 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு, திருமுருகன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது புனிதவனத்து சின்னப்பர் கோவில் பிரிவு பாதை அருகே 5 பேர் கொண்ட ஒரு கும்பல் தன்னை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, தன்னிடம் இருந்த பணப்பை, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதாக கூறினார்.
இதுகுறித்து திருமுருகன் தா.பழூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, திருமுருகனிடம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருமுருகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரே பணத்தை மறைத்து வைத்து கொள்ளை போனதாக நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து திருமுருகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலம்பூர் கிராமத்தில் அய்யனார், வீரனார், முனியப்பர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வழிபட்டு வந்தனர்.
மேலும் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த நிலையில் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் இருந்து வந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு தரப்பை சேர்ந்த பக்தர்கள், அந்த கோவிலில் தனியாக சாமி சிலை அமைக்க முயற்சி செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோவிலுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற வழிபாட்டிலும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த தடை உத்தரவு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கோவில் திறக்கப்பட வில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் வழிபாடு நடத்துவதற்காக இரு தரப்பினரும் அரியலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவு வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி ஒரு தரப்பை சேர்ந்த பக்தர்கள் கிடா வெட்டி, பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது அங்கு வந்திருந்த மற்றொரு தரப்பினர் தங்களது செல்போனில் கோவிலை படம் பிடித்துள்ளனர்.
இதையறிந்த எதிர்தரப்பினர் தட்டிக்கேட்கவே, இரு தரப்பினர் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 14 பெண்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வந்ததால், உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி நேற்றிரவு முதல் 30 நாட்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் நேற்றிரவு சிலம்பூர் அய்யனார் கோவிலை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜெயங்கொண்டம் :
ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கோவில் வாழ்க்கை கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் அரியலூர் கண்ணன், பெரம்பலூர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய துணைச்செயலாளர் சின்னதுரை துவக்கி வைத்தார். தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர்கள் ராமநாதன், ராமச்சந்திரன், தங்கராசு, நக்கீரன், ஜெயங்கொண்டம் சுந்தரமூர்த்தி, கொளஞ்சி, மற்றும் நிர்வாகிகள் கோகுல், செந்தில், ராமசாமி, ராசு, பவுல்ராஜ், குணசேகரன் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட 200– க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் கிளை செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.






