என் மலர்
செய்திகள்

பள்ளி வகுப்பறையில் வாந்தி எடுத்த மாணவன் சாவு: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். துணை ராணுவ வீரர். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் முத்து கருப்பு (வயது 8) . இவன் திருமானூர் அருகே கீழப்பழுவூரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வகுப்பறையில் பாடத்தை கவனித்து கொண்டிருந்த போது முத்துகருப்பு திடீரென அடுத்தடுத்து 3 முறை வாந்தி எடுத்தான்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் முத்து கருப்புவை சிகிச்சைக்காக கீழப் பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முத்துகருப்புவை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கீழப்பழுவூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே முத்துகருப்புவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கீழப்பழுவூர் போலீசில் கவிதா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்நலக்குறைவு காரணமாக முத்துகருப்பு இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அந்த தனியார் பள்ளி வழக்கம் போல திறக்கப்பட்டது. மாணவன் முத்து கருப்பு இறந்து போனதற்கு பள்ளி நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவிக்காமல் பள்ளியை நடத்துகிறார்களே? என கண்டனம் தெரிவித்த முத்து கருப்புவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு திரண்டு சென்றனர். பின்னர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று பள்ளியை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்அடிப்டையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






