என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே நடந்த சாலை விபத்தில் திருமணமான 10 நாளில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 65). இவரது மனைவி சுரேந்திரா (55). இவர்களது மகன் சுமன் (33), பக்ரைன் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே நாட்டில் தன்னுடன் வேலை பார்த்து வந்த பிந்து (21) என்பவருடன் சுமனுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு சுமன் பிந்துவை திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் சென்னை வந்த புதுமண தம்பதியினர் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக குடும்பத்தாருடன் சென்னையிலிருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டனர். காரை சுமன் ஓட்டி வந்தார். அருகில் அவரது மனைவி பிந்து அமர்ந்திருந்தார்.

    அந்த கார் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தென்னவநல்லூர் பகுதியில் அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக சாலையில் ஓடியது. பின்னர் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில் மோதியது. இதில் பஸ் நிறுத்த மேற்கூரை இடிந்து காரின் மீது விழுந்தது.

    இந்த விபத்தில் சுமன், பிந்து, பாஸ்கர், சுரேந்திரா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுமன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது. ஏழை ஏளிய பெண்கள் மனு செய்த பயன் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள்- செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாண்டு, நவம்பர் -2016-ம் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட உள்ள கிராம ஊராட்சிகளான ஆண்டிப்பட்டாக்காடு, அருங்கால், இடையத் தாங்குடி, ஆதனக்குறிச்சி, அழகியமணவாளன் மற்றும் அயன்சுத்தமல்லி ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள்- செம்மறியாடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய 22.08.2016 மற்றும் 23.08.2016 ஆகிய இரண்டு தேதிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளிய பெண்கள் தவறாது சிறப்பு கிராம சபையில் மனு செய்து பயன்பெறலாம். என அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சபாநாயகர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.வினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தமிழக சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்களை ஒரு வார காலத்திற்கு இடை நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று முன்தினம் உத்திரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டம் நகரச்செயலாளர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர்கள் கார்த்திக், மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம், பஞ்சநாதன் உள்பட 24 பேரை கைது செய்தனர்.
    அரியலூர் புறவழிச்சாலையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    அரியலூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா காட்டுதேவாத்தூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 40). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர், அரியலூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு நிறுவனத்தில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றி செல்வதற்காக ஈரோட்டில் இருந்து புறப்பட்டு லாரியில் அரியலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்த போது, எதிரே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.

    சிமெண்டு மூட்டைகளுடன் வந்த லாரியை கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா எறும்பூர் போஸ்ட் நல்லதண்ணீர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதேவர் (38) ஓட்டி வந்தார். இவர், முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை முந்தி செல்ல முற்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணதேவர் ஓட்டி வந்த லாரியும், தனசேகர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அந்த 2 லாரிகளின் முன்புற பகுதிகளும் அப்பளம் போல் நொறுங்கின.

    இதில், லாரியின் இருக்கையில் அமர்ந்தபடியே டிரைவர் தனசேகர் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்றொரு லாரியின் டிரைவர் கிருஷ்ணதேவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ராஜவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள், படுகாயமடைந்த கிருஷ்ணதேவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே, லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து கிடந்த தனசேகரின் உடலை போலீசார் மீட்க முயன்றனர். லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் சிதைந்து போயிருந்ததால் எளிதில் உடலை வெளியே எடுக்க முடியவில்லை.

    இதையடுத்து அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டனர். லாக் கட்டர் உள்ளிட்ட நவீன கருவிகளின் உதவியுடன் லாரியின் இடிபாடுகளை வெட்டி எடுத்து சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனசேகரின் உடல் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து தனசேகரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே விபத்தில் சிக்கிய 2 லாரிகளின் டேங்கரில் இருந்தும் டீசல் வெளிவந்து சாலையில் சிதறி கிடந்தது. இதைக்கண்ட தீயணைப்பு படைவீரர்கள் சிதறி கிடந்த டீசல் மற்றும் லாரிகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இந்த விபத்தினால், சாலையில் கண்ணாடி துண்டுகள் மற்றும் லாரியின் பாகங்கள் உடைந்து சிதறிய நிலையில் கிடந்ததால் அவ்வழியாக போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான அந்த 2 லாரிகளையும் சாலையின் ஒதுக்குப்புறமாக அகற்றி வைத்தனர். அதனை தொடர்ந்து இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன.

    இந்த விபத்து காரணமாக அரியலூர் புறவழிச்சாலையில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணி மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் பணியினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், பணிகளை நேர்த்தியாக மேற்கொள்ளத் தேவையான ஆலோசனையை வழங்கினார்.

    அப்பொழுது அக்குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடியிருப்பினை சுற்றி சுற்றுசுவர் அமைத்துத்தர கோரினர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் எதிர்வரும் திங்கட்கிழமை பூமி பூஜையிட்டு சுற்றுசுவர் அமைக்கும் பணியினை துவங்கிட ஆலோசனை வழங்கினார்.

    எருத்து காரன் பட்டி ஊராட்சியிலிருந்து அரியலூர் இரயில்வே நிலையத்திற்கு செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் சாலைப் பணியினை பார்வையிட்ட கலெக்டர், ஒருமாத காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். கோவிந்தபுரம் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதை பார்வையிட்ட கலெக்டர், பஞ்சாயத்து நிதியி லிருந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்டு எதிர்வரும் புதன்கிழமை பூமி பூஜையிட்டு பணிகளை துவங்குவதற்கு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது, காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி , ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட செயற்பொறியாளர் செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மினிவேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர், சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். மேலும் இவர், அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தில் நிர்வாகியாக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் இளையராஜா தனது மினி வேனை ஓட்டி வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் மினி வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.

    மேலும் இளையராஜாவை கற்கள், கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதனை தட்டி கேட்க வந்த இளையராஜாவின் நண்பர்கள் விஜய், வெற்றி ஆகியோரையும் அந்த நபர்கள் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இளையராஜா, விஜய், வெற்றி ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் நல்லநாயகபுரம் பகுதியில் வசிக்கும் இளையராஜா உள்ளிட்டோரின் உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் திரண்டனர். பின்னர், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பிறகு மறியலை கைவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
    சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுவதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. பின்னர் கலெக்டர் சரவணவேல்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு அணில்குமார் கிரி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    விழாவில் 62 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பூமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரெங்கராஜன், செந்தில்குமார், செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஊராட்சி உதவி இயக்குனர் கங்காதரணி,

    ஆர்.டி.ஓ.க்கள் அரியலூர் மோகனராஜன், உடையார் பாளையம் டினாகுமாரி, தாசில்தார்கள் அரியலூர் முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் திருமாறன், செந்துறை அமுதா, அரியலூர் டி.எஸ்.பி. அசோக்குமார், டி.எஸ்.பி.க்கள் முத்துக்கருப்பன், இனிகோ திவ்யன், சங்கரநாராயணன், சோமசேகர், எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன், அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மற்றும் அனைத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஜெயங்கொண்டம் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர்கள் நலசங்க கூட்டம் ஜெயங்கொண்டம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்டதலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ராமதாஸ், கோபால், காசிநாதன், சோமு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சில நிர்வாக குளறுபடியின் காரணமாக காவலர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள பதவி உயர்வு மற்றும் பணப்பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுதாரர் மற்றும் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு காலம் தாழ்த்தாமல் கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முருகேசன், கண்ணையன், நடராஜன், சிவசாமி, ராஜகோபால், அன்பழகன், அப்பாதுரை, வரதராஜன், புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் இறந்த ஓய்வுபெற்ற காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக துணைத்தலைவர் பெருமாள் வரவேற்றார். முடிவில் காமராஜ் நன்றி கூறினார்.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சிறப்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறவுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சிறப்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து கிராம ஊராட்சிகளில் ஜனவரி முதல் ஜூலை முடிய ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். 2016-2017ஆம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளு க்கான திட்ட அறிக்கை குறித்து விவாதித்தல்.

    சுகாதாரம் - ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மான்யம் குறித்து விவாதித்தல். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல்.திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் குறித்து விவாதித்தல். குழுக்களுக்கு கிராம நலன்கருதி ஒத்துழைப்பு குறித்து விவாதித்தல். ஒருங்கி ணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஒருங்கி ணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்துவது குறித்து விவாதித்தல். என பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் கரூர் மாவட்டத்தில் 157 கிராம ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.

    ஜெயங்கொண்டம் அருகே பாம்பு கடித்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம் :

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஒடப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் பிச்சமுத்து (வயது65). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர் அதிகாலை சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வெளியே வருவதற்காக முற்பட்டபோது அருகாலில் இருந்த பாம்பு கடித்துள்ளது.

    வலி தாங்கமுடியாமல் சத்தம்போடவே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் செல்லும்போது இறந்துவிட்டதாக பிச்சமுத்து மகன் விஜயகுமார் மீன்சுருட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றார்.

    ஜெயங்கொண்டம் அருகே அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் வீரமணி (39). இவரது தம்பி சுரேஷ் (31) வீரமணி கடந்த 4-ம் தேதியன்று தனது மனைவி கொளஞ்சியை அடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த சுரேஷ் அண்ணன் வீரமணி தட்டிகேட்டார். என் மனைவியை நான் அடிக்கிறேன் உனக்கு என்ன என்று கோபமடைந்து அருகில் இருந்த ஹாலோபிளாக் கல்லை எடுத்து சுரேஷ் தாக்கி மிரட்டியுள்ளார். இதில் காயமடைந்த வீரமணி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம்குறித்து ஆண்டிமடம் எஸ்.ஐ பரமசிவம் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

    அரியலூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சிற்றம்பலம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தமிழ்மணி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் பிச்சை, எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் துரைசாமி, துரைராஜ், ராஜேந்திரன், தனசிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொதுவினியோக முறையை பலப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பினை உருவாக்கி வேலையின்மையை போக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை விதிவிலக்கின்றி நடைமுறைப்படுத்தி, அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரத்துக்கு குறையாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்க கூட்டமைப்பினர் கையில் கொடியை பிடித்தபடியே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன், பாஸ்கரன், திருவள்ளுவர் உள்பட சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×