என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே திருமணமான 10 நாளில் என்ஜினீயர் விபத்தில் பலி
    X

    ஜெயங்கொண்டம் அருகே திருமணமான 10 நாளில் என்ஜினீயர் விபத்தில் பலி

    ஜெயங்கொண்டம் அருகே நடந்த சாலை விபத்தில் திருமணமான 10 நாளில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 65). இவரது மனைவி சுரேந்திரா (55). இவர்களது மகன் சுமன் (33), பக்ரைன் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே நாட்டில் தன்னுடன் வேலை பார்த்து வந்த பிந்து (21) என்பவருடன் சுமனுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு சுமன் பிந்துவை திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் சென்னை வந்த புதுமண தம்பதியினர் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக குடும்பத்தாருடன் சென்னையிலிருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டனர். காரை சுமன் ஓட்டி வந்தார். அருகில் அவரது மனைவி பிந்து அமர்ந்திருந்தார்.

    அந்த கார் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தென்னவநல்லூர் பகுதியில் அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக சாலையில் ஓடியது. பின்னர் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில் மோதியது. இதில் பஸ் நிறுத்த மேற்கூரை இடிந்து காரின் மீது விழுந்தது.

    இந்த விபத்தில் சுமன், பிந்து, பாஸ்கர், சுரேந்திரா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுமன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×