என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் புறவழிச்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்:  டிரைவர் பலி
    X

    அரியலூர் புறவழிச்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி

    அரியலூர் புறவழிச்சாலையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    அரியலூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா காட்டுதேவாத்தூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 40). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர், அரியலூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு நிறுவனத்தில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றி செல்வதற்காக ஈரோட்டில் இருந்து புறப்பட்டு லாரியில் அரியலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்த போது, எதிரே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.

    சிமெண்டு மூட்டைகளுடன் வந்த லாரியை கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா எறும்பூர் போஸ்ட் நல்லதண்ணீர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதேவர் (38) ஓட்டி வந்தார். இவர், முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை முந்தி செல்ல முற்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணதேவர் ஓட்டி வந்த லாரியும், தனசேகர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அந்த 2 லாரிகளின் முன்புற பகுதிகளும் அப்பளம் போல் நொறுங்கின.

    இதில், லாரியின் இருக்கையில் அமர்ந்தபடியே டிரைவர் தனசேகர் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்றொரு லாரியின் டிரைவர் கிருஷ்ணதேவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ராஜவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள், படுகாயமடைந்த கிருஷ்ணதேவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே, லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து கிடந்த தனசேகரின் உடலை போலீசார் மீட்க முயன்றனர். லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் சிதைந்து போயிருந்ததால் எளிதில் உடலை வெளியே எடுக்க முடியவில்லை.

    இதையடுத்து அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டனர். லாக் கட்டர் உள்ளிட்ட நவீன கருவிகளின் உதவியுடன் லாரியின் இடிபாடுகளை வெட்டி எடுத்து சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனசேகரின் உடல் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து தனசேகரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே விபத்தில் சிக்கிய 2 லாரிகளின் டேங்கரில் இருந்தும் டீசல் வெளிவந்து சாலையில் சிதறி கிடந்தது. இதைக்கண்ட தீயணைப்பு படைவீரர்கள் சிதறி கிடந்த டீசல் மற்றும் லாரிகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இந்த விபத்தினால், சாலையில் கண்ணாடி துண்டுகள் மற்றும் லாரியின் பாகங்கள் உடைந்து சிதறிய நிலையில் கிடந்ததால் அவ்வழியாக போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான அந்த 2 லாரிகளையும் சாலையின் ஒதுக்குப்புறமாக அகற்றி வைத்தனர். அதனை தொடர்ந்து இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன.

    இந்த விபத்து காரணமாக அரியலூர் புறவழிச்சாலையில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×