என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே திருவிழாவில் இரு தரப்பினர் மோதலால் 144 தடை உத்தரவு
    X

    அரியலூர் அருகே திருவிழாவில் இரு தரப்பினர் மோதலால் 144 தடை உத்தரவு

    அரியலூர் அருகே இரு தரப்பினர் மோதல் விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, கோவிலை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலம்பூர் கிராமத்தில் அய்யனார், வீரனார், முனியப்பர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வழிபட்டு வந்தனர்.

    மேலும் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த நிலையில் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு ஒரு தரப்பை சேர்ந்த பக்தர்கள், அந்த கோவிலில் தனியாக சாமி சிலை அமைக்க முயற்சி செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோவிலுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற வழிபாட்டிலும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த தடை உத்தரவு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கோவில் திறக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் வழிபாடு நடத்துவதற்காக இரு தரப்பினரும் அரியலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவு வழங்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி ஒரு தரப்பை சேர்ந்த பக்தர்கள் கிடா வெட்டி, பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது அங்கு வந்திருந்த மற்றொரு தரப்பினர் தங்களது செல்போனில் கோவிலை படம் பிடித்துள்ளனர்.

    இதையறிந்த எதிர்தரப்பினர் தட்டிக்கேட்கவே, இரு தரப்பினர் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 14 பெண்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வந்ததால், உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி நேற்றிரவு முதல் 30 நாட்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் நேற்றிரவு சிலம்பூர் அய்யனார் கோவிலை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    Next Story
    ×