என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் கார் மோதி டாக்டரின் தந்தை பலி
ஜெயங்கொண்டம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 65).இவரது மனைவி திலகவதி (55). இவர்களது மகன் பாலாஜி (35), பிசியோதெரபி டாக்டர். இன்று அதிகாலை 3 பேரும் ஒரு காரில் கும்பகோணம் கோவிலுக்கு புறப்பட்டனர். காரை பாலாஜி ஓட்டினார். முன் இருக்கையில் கோவிந்தராஜூவும், பின்னால் திலகவதியும் அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பாப்பாக்குடி கிராமம் சென்னை-கும்பகோணம் சாலையில் செல்லும் போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 3 பேரும் பலத்த காயமடைந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூழாட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலுச்சாமி (50), சேட்டு (32). மாட்டு வண்டி தொழிலாளர்களான இவர்கள் நேற்றிரவு தங்களது மாட்டு வண்டிகளில் கடலூர் மாவட்டம் கள்ளிப்பாடிக்கு மணல் ஏற்றுவதற்காக சென்றனர். ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் பகுதியில் செல்லும் போது அந்த வழியாக எதிரே சென்னையில் இருந்து டால்மியாபுரத்திற்கு உரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.
திடீரென தாறுமாறாக ஓடிய லாரி 2 மாட்டு வண்டிகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 மாட்டு வண்டிகளிலும் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு மாடுகள் இறந்தன. மேலும் பாலுச்சாமி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி உடையார்பாளையம் அருகே சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து உடையார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் லாரியை மடக்கினர். பின்னர் டிரைவரை பிடித்து விசாரிக்கும் போது, அவர் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி பேரூர் கிராமத்தை சேர்ந்த தங்கப்பழம் மகன் ஜீவா (23) என்பதும், அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது.






