என் மலர்tooltip icon

    அரியலூர்

    வாட்ஸ்அப்பில் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பிய தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்களில் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    அரியலூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி இறந்தார். அவரது மறைவிற்கு அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அரியலூர் பகுதி வாட்ஸ்அப்பில் ஜெயலலிதா பற்றி பலரது செல்போன்களுக்கு அவதூறான வார்த்தைகள் பரப்பப்பட்டது. அதில் உங்களை அடிமையாக நடத்திய முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார்.

    எனவே இனி வரும் காலங்களிலாவது... என்று கூறி தொடர்ந்து வார்த்தைகள் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து அரியலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் அரியலூர் போலீசில் புகார் செய்தார். வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அரியலூர் வீணைக்கைகாட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் (வயது 39) என்பது தெரியவந்தது. தி.மு.க. ஒன்றிய குழு பொறுப்புக்குழு உறுப்பினரான செல்வேந்திரன் ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.

    அவரை கைது செய்த போலீசார் நேற்று இரவு அரியலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மகாலெட்சுமி செல்வேந்திரனை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    ஜெயங்கொண்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் தொழிற் சங்க பேரவையின் சார்பாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மணி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் விஸ்வ கர்ம அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் அண்ணாசிலையில் தொடங்கி திருச்சிரோடு, நான்குரோடு, தா.பழுர் ரோடு, பேருந்துநிலையம் வழியாக மீண்டும் அண்ணாசிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 5 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞரணி தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.


    விக்கிரமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    விக்கிரமங்கலம் அருகேயுள்ள நாகமங்கலம் கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சரத்குமார் (23). இவர் நேற்று அவரது தம்பி அருண்பாண்டியன் (17) என்பவரை பைக்கின் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு சந்திரபாளையம் பிரிவு ரோடு அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக்கின் மீது மோதியதில் பின்னால் உட்கார்ந்து வந்த அருண்பாண்டியன் மீது பஸ்சின் முன்பக்க டயர் ஏரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து சரத்குமார் விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்கு பதிந்து பஸ்சை ஓட்டிவந்த நரியங்குழி கிராமம் வடக்குத் தெருவைச்சேர்ந்த முருகையன் மகன் உலக நாதன் (35) என்பவரை விசாரித்து வருகின்றார்.

    செந்துறை அருகே உள்ள மாத்தூர் தண்டவாளம் மாற்றுப் பணியால் வைகை எக்ஸ்பிரஸ் தாமதாக சென்றது.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள மாத்தூர் தண்டவாளம் மாற்றுப் பணியால் வைகை எக்ஸ்பிரஸ் தாமதாக சென்றது.

    வாளாடி முதல் ஆர்.எஸ் மாத்தூர் வரை இருவழிப்பாதைகள் பணிகள் முடிந்ததால் ரயில்கள் இருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருத்தாசலம் முதல் அரியலூர் வரையிலான பாதையில் தண்டவாளம் மாற்றி புது தண்டவாளம் அமைக்கு பணி இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று மாலை ஆர்.எஸ் மாத்தூர் செந்துறை இடையே இப்பணி நடைபெற்றதால் நேற்று மாலை 5 மணிக்கு ஆர்.எஸ் மாத்தூர் வந்தடைந்த சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் கழிந்து 6.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    இதனால் ரயில் பயணிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும் 5.45 மணிக்கு வர வேண்டிய திருச்சி-கடலூர் பயணிகள் ரயிலும் 45 நிமிடங்கள் தாமதாக வந்தது.
    ஜெயங்கொண்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூருக்கு அடுத்து ஜெயங்கொண்டம் ஒரு முக்கியமான நகரமாகும். இங்கு உடையார்பாளையம் வட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இப்பகுதி 92 வருவாய் கிராமங்களைக்கொண்டது. ஜெயங்கொண்டம் நகரத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர். ஏற்கனவே தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற ஊர்களுக்கெல்லாம் செல்லும் பஸ்கள், லாரிகள் அணைக்கரை வழியாக சென்று வந்தன.

    இடைப்பட்ட காலங்களில் போக்குவரத்து அதிகம் ஏற்பட்டதால் ஜெயங்கொண்டத்தை அடுத்த மதனத்தூரில் புதிதாக பாலம் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. அதன்பின் கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஜெயங்கொண்டம் வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் இப்பகுதி தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும், அதிக வாகனங்கள் செல்வதாலும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெருத்த இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஜெயங்கொண்டத்தை சுற்றி புறவழிச்சாலை அமைக்கக்கோரி பொதுமக்களும், வியாபாரிகளும், தன்னார்வலர்களும் பல்வேறு வகையில் கோரிக்கைகள் வைத்து பார்த்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    நேற்று காலை ஜெயங்கொண்டம் – தா.பழூர் சாலை சார்பு நீதிமன்றம் அருகே உள்ள வளைவில் உத்தரபிரதேசத்தில் இருந்து, நாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்பார்மர் ஏற்றிவந்த 58 டயர்கொண்ட கனரக வாகனம் வளைவில் திருப்ப முடியாமல் அருகில் உள்ள வீட்டின் சுவற்றில் உரசியவாறு முன்னேறி செல்லமுடியாமல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இங்கு அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கு காரணம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி பகுதியில் உள்ள மணல் குவாரியில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு மணல் லாரிகள் இந்த வழியாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதுடன், 108 போன்ற ஆம்புலன்சுகள் செல்வதற்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இப்போக்குவரத்து இடையூறுகளை சரிசெய்ய விரைவில் ஜெயங்கொண்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    அரியலூர் லாட்ஜில் கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய நோட்டுகளை முறைப்படி வங்கி, அஞ்சல் அலுவலகத்தில் கொடுத்து மாற்றி வருகின்றனர். ஆனால் அதிகளவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்பவர்களின் பட்டியலையும் மத்திய அரசு தயாரித்து, தீவிரமாக கண்காணித்து வருகிறது. பணபரிவர்த்தனைகளின் போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கி மேலாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்தநிலையில் தஞ்சாவூரை சேர்ந்த கதிரவன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சிலர், அரியலூர் மேல அக்ரகாரம் பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் கடந்த 27-ந்தேதி அறை எடுத்து தங்கினர். பின்னர் தஞ்சாவூரிலுள்ள சில முக்கிய பிரமுகர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கதிரவன் கூறினார். அதன்பேரில் தஞ்சையை சேர்ந்த பல்வேறு நபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கதிரவன் மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர்.

    மேலும் கும்பகோணத்தில் இருந்து ரூ.34 லட்சத்திற்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உள்பட செல்லுபடியாகும் நோட்டுகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு பேரம் பேசுவதற்காக அரியலூர் லாட்ஜூக்கு மற்றொரு கும்பல் வந்தது. தஞ்சாவூரை சேர்ந்த கதிரவன் கும்பலுக்கும், கும்பகோணத்தை சேர்ந்த கும்பலுக்கும் இடையே கருப்பு பணத்தை மாற்றுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேரம் நடந்தது.

    அப்போது அந்த 2 கும்பலுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் நடந்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து அரியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள், கும்பகோணத்தை சேர்ந்த கும்பலிடமிருந்து ரூ.34 லட்சத்தை பறித்துக்கொண்டு கதிரவன் உள்ளிட்டோர் தப்பி ஓடிவிட்டனர்.

    கருப்பு பண விவகாரம் என்பதால் பணத்தை பறிகொடுத்த நபர்களும் வெளியே சொல்ல முடியாமல் தலைமறைவாகிவிட்டனர். லாட்ஜில் சோதனை நடத்தி விசாரித்த போதுதான் மேற்கண்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடி யோவை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கும்பகோணத்தில் துணிக்கடை நடத்தி வரும் அபு அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மோசடியில் ஈடுபட்டதாக அரியலூரை சேர்ந்த வினோத், தஞ்சாவூரை சேர்ந்த கதிரவன், அருண்குமார் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதில் வினோத் என்பவரை போலீசார் இன்று கைது செய்து, கருப்பு பணம் மாற்றம் தொடர்பாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விசாரணை முடிவில் பல் வேறு விவரங்கள் தெரிய வரும். வினோத்தின் தந்தை சேகர் செந்துறை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருமானூரில், மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடியை கண்டித்தும், அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கமலை, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உறுப்பினர் செல்லத்துரை, விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் பிச்சைப்பிள்ளை, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மேம்பாட்டிற்கு வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, கரும்பு விவசாய சங்க தலைவர் ஜெயபால், சாமிநாதன், ராஜதுரை, மணியன், மலர்க்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) ,விவசாயி. இவரது மகள் பவித்ரா (24). கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் - திருச்சி நெடுஞ்சாலையில் தனது வீட்டின்முன்பு நடந்து சென்றுகொண்டிருந்தபோது கார் மோதியதில் பவித்ரா கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.

    இதையடுத்து சண்முகம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி, மகன் ஆகியோருடன் மகள் பவித்ராவை அழைத்துக் கொண்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இதனால் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டனர். இந்நிலையில் சண்முகத்தின் மகன் சதீஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது சாமி அறைக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    கறுப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி அரியலூரில் ரூ.30 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கறுப்பு பணம் மாற்றும் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அரியலூர்:

    கறுப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு அறிவித்தார்.

    இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே அளவுக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்

    மேலும் கறுப்பு பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும் ஆங்காங்கே கறுப்பு பணத்தை மாற்றும் முயற்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இந்த நிலையில் அரியலூர் பகுதியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதனை புதிய 2,000 ரூபாய் நோட்டாக மாற்றிக் கொடுக்கும் கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

    நேற்று தஞ்சையை சேர்ந்த ஒருவருக்கு மர்ம நபரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அந்த நபர் ரூ.30 லட்சம் வரை கறுப்பு பணத்தை கொண்டுவந்தால் உடனடியாக அதனை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அரியலூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜூக்கு வருமாறும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய அந்த நபர் தனக்கு தெரிந்த தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வசூல் செய்துள்ளார். பின்னர் அந்த பணத்துடன் அரியலூரில் உள்ள தனியார் லாட்ஜூக்கு சென்று மர்ம நபரிடம் அளித்தார். அப்போது பணத்தை மாற்றுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதுபற்றி லாட்ஜ் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த அரியலூர் போலீசார் ஒருவரை மட்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றவர்கள் பணத்துடன் தப்பி விட்டனர். பிடிபட்ட அந்த நபர் குறித்த விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கறுப்பு பணம் மாற்றும் கும்பலில் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கறுப்பு பணத்தை மாற்ற முயன்று அதனை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க தயங்கியுள்ளனர்.

    அரியலூர் நகராட்சி நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அரியலூர்

    அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தே.மு.தி.க. சார்பில் அரியலூர் செட்டிஏரி பூங்காவை பொதுமக்களுக்கு கட்டணமில்லாத பூங்காவாக மாற்ற கோரியும், அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச பொது கழிவறை கட்டிடம் கட்டவும், அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கவும், அரியலூர் நகராட்சியில் 18வார்டுகளில் முறையாக கொசு மருந்து அடிக்காமலும், சாலை வசதி செய்து கொடுக்காமலும், பாதுகாப்பான குடிநீர் வசதி செய்து கொடுக்காமலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பூட்டி கிடப்பதை கண்டித்தும்,

    அரியலூர் நகரில் ஆமை வேகத்தில் நகர்த்தப்படும் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறுவதை கண்டித்தும், சாலை வசதி செய்து கொடுக்காமல் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தையும் நெடுஞ்சாலை துறை நிர்வாகத்தையும் கண்டித்து அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டத்தில் லாரியை மர்ம நபர்கள் கடத்தி சென்றதால் இது குறித்து லாரி டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன், லாரி டிரைவர். இவர் ராங்கியம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் கடந்த ஒரு மாதமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று, இவர் லாரியில்  சென்னையில் இருந்து அரிசிலோடு ஏற்றி வந்து, ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கடையில் இறக்கிவிட்டு, கடைவீதியில் லாரியை நிறுத்தினால் பொதுமக்களுக்கு   இடையூறாக இருக்கும் என்பதால், லாரியை விருத்தாசலம் சாலையில் உள்ள வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு, வசூல் செய்த வாடகை பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு திரும்பி லாரியை எடுப்பதற்காக சென்றார், அப்போது அவர் நிறுத்திய இடத்தில் லாரியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் அருகில் உள்ளவர்கள் மற்றும் கடைகளில்  விசாரித்தும்,  எந்த தகவலும் கிடைக்காததால், அவர் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார்.

    இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து  அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.  இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு, மாயமான லாரியை தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பொன்னாற்று பாசன டெல்ட்டா பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து, ஏக்கர் ஒன்றுக்கு ரு.25 ஆயிரம் இழப்பீடுதொகை கேட்டு பொன்னாற்றுப் பாசன டெல்ட்டா கடை மடை விவசாயிகள் கோடாலி கருப்பூர் கிராமத்தில் உண்ணா விரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தில் டெல்ட்டா கடைமடை விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தா.பழூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

    மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமதுரை, கோடாலிகருப்பூர் சேகர், குப்புசாமி, தியாகராஜன், பன்னீர்செல்வம், அழகேசன், வில்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் உலகநாதன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர் இளஞ்செழியன், ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    தா.பழூர் பொன்னாற்று பாசன டெல்ட்டா பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடுதொகை கேட்டும், கொள்ளிடத்தின் குறுக்கே பொன்னாற்று பாசனத்திற்காக 476-7 என்ற இடத்தில் குறுவாடியில் தடுப்பணை அமைக்கவும், சித்தேறி மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை தூர்வாரித்தரவும், தடையில்லா மும்முனை மின் சாரம் விவசாயத்திற்கு அளித்திடவும், விவசாய மின்மோட்டாருக்கு வழங்கப்படும் மின் அளவை கூடுதலாய் வழங்கிடவும், விவசாயத்தையும், மக் களின் குடிநீர் ஆதாரத் தையும் பாதுகாத்திட வாழைக்குறிச்சியில் உள்ள அரசு மணல் குவாரியை உடனே தடைசெய்திடவும், கொள்ளிடத்தின் கரையை வலுப்படுத்தி தார்சாலை அமைத்து தரவும், கோடாலி கருப்பூர் ஏழுகண் மதகின் பாலத்தை நிரந்தர பாலமாக அமைத்திடவும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்று வருகிறது.

    இதில் ராமு, ரெங்கநாதன், கண்ணன், மோகன், மனோகரன், இராஜேந்திரன், இளங்குமரன், ஓய்வு காவலர் பாலகிருஷ்ணன், முருகவேல், அருள், சின்னசாமி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×