என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே எண்ணெய் நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம்நகரை சேர்ந்தவர் விக்டர். இவர் உணவு பொருட்களுக்கான  எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரது வீட்டின் அருகேயே  எண்ணெய் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு அவரது நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இன்று மதியம் வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது. விக்டரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. சோதனை முடிந்த பிறகுதான் அதற்கான காரணம் தெரியவரும்.
    அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தில் அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தில் அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் உணவுகளை சாப்பிட்டு பார்த்து பரிசோதித்தார்.

    அப்போது மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும், சாம்பார் சாதத்தில் காய்கறிகளை கூடுதலாக சேர்க்க வேண்டுமென சமையலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்ட போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மண்சாலைகளை மாற்றி சிமெண்டு சாலை அமைத்து தரவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கொறடா தெரிவித்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் வாந்தி, மயக்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள குணமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு ஹார்லிக்ஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

    ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் செந்தில், கல்லங்குறிச்சி பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் செயலை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் செயலை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கச் சென்ற  ம.தி.மு.க. பொதுச் செயலாளர்  வைகோவை பார்க்க விடாமல் தடுத்து கல்வீசிய தாக்கிய சம்பவம் நடைபெற்றது.

    இது குறித்து  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆனால் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள்   எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர்  அந்த செயலை  வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அவரது செயலை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை  அருகே ம.தி.மு.க. மாவட்ட  செயலாளர்  வக்கீல் கு.சின்னப்பா  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர்  புகழேந்தி, மாவட்ட துணைசெயலாளர் செல்லப்பா, வாரணவாசி ராஜேந்திரன், கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்  தங்கவேல்,  பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், பழனிவேல், நகரசெயலாளர் மனோகரன். மாவட்ட அணி பொறுப்பாளர் கஜேந்திரன், தமிழ்மாறன்,  சங்கர்,  அரியலூர்  ஒன்றிய  செயலாளர் ராமநாதன், காமராஜ், திருமானூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசு,  ராமகிருஷ்ணன்,  தா.பழுர்   ஒன்றிய செயலாளர் எழிலரசன், கொளஞ்சியப்பன், ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட அனைத்து  பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
    புறநகர் பேருந்துகளில் 58 வயது ஆனவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பென்சனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் கிளை அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் தினவிழா ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு வட்ட தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். வட்ட பொருளாளர் ஸ்டாலின், ராயர், ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சிதம்பரம் தீர்மானங்களை விளக்கி பேசினார். விழாவில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் 80 வயது முடிந்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார்.

    வட்ட செயலாளர் ராம மூர்த்தி அறிக்கை வாசித்தார். துணைசெயலாளர் பீட்டர், செயலாளர் ராமசாமி, துணை செயலர் பாஷ்யம், துணைத்தலைவர் ராமையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மருந்துகள் மற்றும் மருத்துவக் கட்டணம் விலை ஏற்றத்தால் நிரந்தர மாத மருத்துவப்படி ரூ.2500-க்கு குறையாமல் வழங்கவேண்டும். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் காப்பீட்டு கழகம் அனுமதித்ததுக்கு கூடுதலாக தொகை வசூலிப்பதை நிறுத்தவேண்டும்.

    மத்திய அரசைபோல் 20 ஆண்டு பணிக்கு முழு பென்சனும், குறைந்தபட்ச பென்சன் தொகையாக ரூ.3500 வழங்கவேண்டும். கேரள மாநிலத்தைப் போல் மாத கடைசி நாளுக்கு பதிலாக முதல்நாளே பென்சன் வழங்கவேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும், புறநகர் பேருந்துகளில் 58 வயது ஆனவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்க வேண்டும்.

    சமுதாயத்தை சீர்திருத்தும் வகையில் மது, புகையிலை, மசாலாபாக்கு ஆகியவற்றை அகற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும். ஜெயங்கொண்டத்தில் திருச்சிரோடு, பஸ்ஸ்டாண்டு ரோடு ஆகியவற்றை ஒருவழி சாலையாக மாற்றவேண்டும். நான்குரோட்டில் ரவுண்டானாவும், பேருந்து நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்திற்கு மேற்கூரை அமைத்து தரவேண்டும். நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும்.

    சிதம்பரம், அரியலூர், கும்பகோணம், விருத்தாசலம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரயில்பாதை அமைக்க வேண்டும். டாஸ்மாக்கை அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீராசாமி, சிவகுருநாதன், மணிமேகலை மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக துணைத்தலைவர் ராமசாமி வரவேற்றார். முடிவில் வட்ட பொருளாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.
    அரியலூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 20.12.2016 செவ்வாய்கிழமை காலை 11.00 மணியளவில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
    அரியலூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம், சார்பாக நாளை 20.12.2016 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் "மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூர் ராஜாஜி நகர் - காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    எனவே இக்கோட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறி யாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாறு அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    திருமானூர் அருகே கடைகளில் வைத்திருந்த புகையிலை-காலாவதியான பொருட்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் படி திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைஉரிமையாளர் களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டீக்கடைகளில் தரமான டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் பாதுகாப்புடன் வைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், கடைகளில் புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி , 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் கொடுக்கப்பட மாட்டாது என விளம்பர போர்டுகள் வைக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பஞ்சர் கடைகளில் உள்ள பழைய டயர்களை அப்புறப்படுத்தி அதில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட்டன. இந்த ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம், சுகாதார ஆய்வாளர் அருள், குமார், ராஜேஸ்வரி மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே மகனை தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருக்கு மருதமுத்து, கோவிந்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மருதமுத்துவின் மனைவி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துள்ளார். இதனை பார்த்த ஆண்டியப்பன் மற்றும் அவரது மகன் கோவிந்தன் இருவரும் மருத முத்துவின் மனைவியை சத்தம் போட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மருதமுத்து தனது மனைவியை ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆண்டியப்பன், கோவிந்தன் இருவரும் மருதமுத்துவை தகாத வார்த் தைகளால் திட்டி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் வழக்கு பதிவு செய்து ஆண்டியப்பனை கைது செய்தனர். தப்பி ஓடிய கோவிந்தனை தேடி வருகின்றனர்.

    ஆண்டிமடம் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன்மூலம் அழகாபுரம் வடக்கு தெரு, நாயுடு தெரு, திராவிடநல்லூர் செல்லும் தெரு ஆகிய தெருக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் நீர் இல்லாமல் பழுதடைந்ததால் கடந்த 6 மாதமாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற இயலவில்லை. இதனால் மற்றொரு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்தனர். தற்போது அங்குள்ள மோட்டாரும் பழுதடைந்ததால் குடிநீர் வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க கோரி நேற்று காலி குடங்களுடன் அழகாபுரம் சிலம்பூர்-ஆண்டிமடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே, ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகர், செந்தில்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும். அதுவரையில், இன்னொரு நீர்த்தேக்க தொட்டியின் பழுதடைந்த மோட்டாரை சரிசெய்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது.
    மீன்சுருட்டி:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை பிரகதீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதையடுத்து திருப்பனந்தாள் காசி மடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, அதன்பின் பக்தர்கள் குருக்கள் தெரு, கணக்கவிநாயகர் கோவில் வழியாக கிரிவலம் சென்று மீண்டும் கோவிலின் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    பின்னர் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த கிரிவலத்தில், ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கிரிவலத்துக்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    தா.பழூர் அருகே கோவில் பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த அணைக்குடம் கடைவீதியில் வீரானார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த சூலம், மணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தம் கேட்டு கோவில் பூசாரி ஆசைத்தம்பி எழுந்து வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஆசைத்தம்பி புகார் கொடுத்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தா.பழூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழமாதேவி கிராமத்தில் கண்டமங்கலத்தை சேர்ந்த வீராசாமி (வயது 36), சிலம்பரசன் (22), பாலசங்கர் (31) ஆகியோர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் பொருட்களை திருடிய வீராசாமி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கோவிலில் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் 3 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களில் 31 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    செந்துறை:

    அரியலூர்  மாவட்டம் செந்துறை  அருகே  உள்ள  எலந்தங்குழி  கிராமத்தை சேர்ந்தவர் ராதா (வயது 38). இவரது வீட்டிற்குள் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்தனர். அங்குள்ள தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் பரணம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவரது  வீட்டில் புகுந்து கொள்ளையர்கள் 10 பவுன் நகை ரூ.30 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.
    மேலும் ஆனந்தவாடி கிராமத்தில் நடந்து சென்ற அமுதா என்பவரின் 6 பவுன் தாலிச்செயினை  அறுத்து கொண்டு கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர். இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளையில்  31  பவுன்  நகை மற்றும் 1 லட்சம் பணத்தை விவசாயிகள்        பறிகொடுத்து உள்ளனர். போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.
    மீன்சுருட்டி அருகே பதுக்கிவைத்து மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    மீன்சுருட்டி போலீசார் நேற்று இரவு ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அறந்தாங்கி பஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்ததில் காடுவெட்டி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மாசிலாமணி (வயது33) என்பதும், இவர் பதுக்கிவைத்து வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்துகொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காடுவெட்டி பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள 8 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மாசிலாமணி, மணிகண்டன் இருவரையும் மீன்சுருட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×