என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே காமரசவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் ரமேஷ் (வயது 30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடிப்பதற்காக பணம் கேட்டு மனைவி ராஜவள்ளியிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
கடந்த மாதம் 13-ம் தேதி ராஜவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்து வெளியில் சென்றவர் மீண்டும் தனது வீட்டிற்கு வந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது ராஜவள்ளி கணவர் ரமேஷிடம் கேட்டபோது விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.
உடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து ராஜவள்ளி தூத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2804 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் கூறியதாவது: -
இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதியாக கீழ்க் குறிப்பிட்ட ஏதாவது ஒரு கல்வித்தகுதியை பெற்றிருப்பதுடன் அக்கல்வித் தகுதி தமிழக அரசின் மருத்துவப்பணிகள் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மல்ட்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் அல்லது மிட்வைப்ரி டிப்ளமோ அல்லது ஹெல்த் விசிட்டர்ஸ் அல்லது ஏ.என்.எம் டிப்ளமோ தகுதி பெற்று தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும். வயது வரம்பு 01.07.2016 அன்று அனைத்து பிரிவினருக்கும் 57 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
இப்பணிக்காலியிடத்திற்கு மாநில அளவு பதிவு மூப்பில் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளதால் தகுதியுள்ள அரியலூர் மாவட்ட பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் 07.01.2017-க்குள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35), சுகாதார அலுவலர். இவர் பெரியகுறிச்சியில் உள்ள தனது மாமனார் சின்னதுரை வீட்டுக்கு குடும்பதுடன் 3 நாட்கள் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ளவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை வெங்கடாசலத்துக்கு தெரிவித்தனர்.
விரைந்து வந்த வெங்கடாசலம் வீட்டின் உள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.
பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து தங்க நகை திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சுகாதார அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கொளப்படி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது42). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போது ஜெயலட்சுமி கணவருடன் கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார்.
கடந்த 30-ந்தேதி தகராறு ஏற்பட்ட போது, ஜெயலட்சுமி வீட்டை விட்டு சென்று விட்டார். இதையடுத்து சண்முகம் மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது சண்முகத்தின் சித்தப்பா வீட்டிற்கு ஜெயலட்சுமி சென்றிருந்தது தெரியவந்தது.
இதனிடையே இன்று காலை ஆண்டிமடம் பகுதியில் உள்ள வயலில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது ஜெயலட்சுமி என தெரியவந்தது. அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜெயலட்சுமியின் சேலையில் மோட்டார் சைக்கிள் சாவி ஒன்றும், அவர் இறந்து கிடந்த இடம் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தின் தடயங்களும் இருந்தது.
இதனால் மர்மநபர் யாரோ ஜெயலட்சுமியை வயல் பகுதிக்கு கடத்தி வந்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் பாலமுருகன். (வயது 28) துபாயில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இவருக்கும் தா.பழூர் கீழத்தெருவைச் சேர்ந்த பிரியா (24) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடை பெற்றது. இதையடுத்து மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வதற்காக பாலமுருகன் முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் சிங்கப்பூர் செல்வதற்கான பணிகளை செய்து வந்தார். இது குறித்து மனைவி பிரியாவிற்கு தெரிய வந்தது. திருமணமாகி ஒரு மாதங்களிலேயே தன்னை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு பாலமுருகன் தனக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும், எனவே வெளிநாட்டிற்கு வேலை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்த விக்ரமங்கலம் போலீசார் விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறு தகராறு பிரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியாவிற்கு திருமணமாகி 29 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. திருமணமாகி 29 நாட்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் குழந்தைவேலு. இவர் தனது வீட்டின் முன்பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி (டிரைவிங் ஸ்கூல்) வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (வயது 27).
இந்த நிலையில் குழந்தைவேலு வேலை நிமித்தமாக கோவைக்கு சென்று விட்டார். நேற்று காலை மணிமேகலை வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் மணிமேகலையிடம் சென்று வாகனம் ஓட்டுனர் பயிற்சி குறித்து விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அந்த நபர் மணிமேகலையின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். உடனே மணிமேகலை திருடன்... திருடன்... என அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அந்த நபரை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அந்த நபர் மின்னல் வேகத்தில் ஓடி சென்று மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த தனது கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து கயர்லாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், மணிமேகலையிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துழாரம்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ், விவசாயி. இவரது தாய்க்கு சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி பட்டா வாங்குவதற்காக சூரியமணல் கிராம நிர்வாக அதிகாரி வைத்தியநாதனை அணுகினார். அப்போது அஅர் நிலத்தை மாற்றி பட்டா வழங்க வேண்டுமென்றால் தனக்குரூ.2500 தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரபோஸ், இதுகுறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வைத்தியநாதனை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 22-8 -2012 அன்று ரசாயனம் தடவிய பணத்தை சந்திரபோசிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்தியநாதனை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்தநீதிபதி ரவி , இன்றுதீர்ப்பு கூறினார். அதில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி வைத்தியநாதனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை ,ரூ.25ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் பழனிச்சாமி (38), கூலித் தொழிலாளி. இவர் தனது சொந்த சகோதரியின் மகள் ஷர்மிளா என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு சத்தீஸ்வரி (12), விசால் (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் அவர்கள் 3 வயது முடிவடைந்து 4-வது வயது துவங்கும்போது அவர்களின் உடல்களில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளுக்குமே கால்கள் வளைந்து, நெஞ்சுக் கூடுகள் சுருங்கியும் காணப்பட்டன.
இதுகுறித்து மருத்துவர்களிடம் சென்று காண்பித்த போது சொந்த சகோதரியின் (ரத்த சொந்தம்) மகளை திருமணம் செய்துகொண்டதால், பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு கோளாறுகள் வரும் எனவும், இதுபோன்ற ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் மருத்துவர்களிடம் சென்று உறவு முறையில் திருமணம் செய்து கொண்டதை தெரிவித்து வயிற்றில் வளரும் குழந்தையை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

அப்போது உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டால் மட் டுமே இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும், சிகிச்சையின்றி பிறக்கும் குழந்தைகளுக்கு 4 வயதுக்கு பின்னர் டி.என். ஏ. பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும் கூறுகையில் இவ்வாறான பாதிப்புகள் லட்சத்தில் சிலருக்குத்தான் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூலித்தொழிலாளியான பழனிச்சாமி தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக பல வகையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தனது உழைப்பாலும், சிலரது உதவியாலும் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது இளைய மகன் விசாலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் தனது மகள் சக்தீஸ்வரிக்கு சிகிச்சை அளிக்க பணமின்றி தவித்து வருகிறார். எனவே, தமிழக அரசு சம்மந்தப்பட்ட துறையின் மூலம் தனது குழந்தைகளை காப்பாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் செல்வநந்தி தலைமையில் நடைபெற்றது.
மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் அன்பானந்தம், தேர்தல் பிரிவு மாநில துணை செயலாளர் தன கோடி, விவசாய அணி துணை செயலாளர் கருப்புசாமி. வேல்முருகன், மாவட்ட பொருளாளர் வேணுகோபால்பிள்ளை, தொகுதி செயலாளர் மதி, இலக்கியதாசன், செல்வமணி, மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன், அரியலூர் சுதாகரன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது, அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனவும், அரியலூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டுமெனவும், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி கல்வி கட்டணத்தை முறைபடுத்த வேண்டுமெனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனிதபாத்திமா அன்னை ஆலயத்தில் வட்டார முதன்மைகுரு கோஸ்மான்ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பாடாலூர், செட்டிகுளம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
பாடாலூரில் உள்ள பிரான்சிஸ் ஆலயத்தில் பாடாலூர் மறறும் சுற்றுப்புற கிராமஙகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு திருப்பலி நடத்தினர். அதேபோல் செட்டிகுளம் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் செட்டிகுளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒன்று கூடி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மேலும், ஒருவருககொருவர் கேக் மற்றும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிப்பாளையம் கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் போதகர் மார்ட்டின் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் கூட்டு திருப்பலியும், பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போதகர்கள் அமலநாதன், தேவஅருள், அற்புதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அன்பும், சமாதானமும் பெற்று அனைவரும் வாழ பிரார்த்தனை செய்தனர். இதில் ரெட்டிப்பாளையம், தேளூர், விளாங்குடி, ஒரத்தூர், முனியங்குறிச்சி, பெரியநாகலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஆந்திரா தெலுங்கானா மாநிலம் காண்டூரிலிருந்து நேற்று முன்தினம் கடப்பாகல் ஏற்றிக்கொண்டு ஜெயங்கொண்டம் வழியாக தஞ்சாவூர் நோக்கி டிரெய்லர் லாரி சென்றது. லாரியை வேலூர் மாவட்டம் சைதாபேட்டையை சேர்ந்த ஜெயராமன் மகன் கோதண்டராமன் (42) என்பவர் லாரியை ஓட்டிச்சென்றார்.
கும்பகோணம் ரோட்டில் வேலாயுதநகர் அருகில் செல்லும்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வலது புறம் சாலை அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. லாரி மோதியவுடன் இந்த கம்பத்திலிருந்து மின்கம்பி செல்லும் கம்பங்களும் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன. இதில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் அவ்வழியே வாகனங்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து கோதண்டராமனிடம் விசாரித்து வருகின்றனர். லாரி மோதி சாய்ந்துபோன மின்கம்பம் மற்றும் கம்பிகளின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் இருக்கும் என மின்சாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரை சேர்ந்தவர் விக்டர். இவர் அங்கு விக்டர் ஏஜென்சீஸ் என்ற பெயரில் ஆயில் மில் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து குரூடாயில் இறக்குமதி செய்து அதை மில்லில் சுத்திகரிப்பு செய்தும், பாமாயில் விற்பனையும் செய்து வருகிறார்.
அந்த நிறுவனம் மற்றும் அதே வளாகத்தில் உள்ள உரிமையாளர் விக்டர் வீட்டில் நேற்று திருச்சி மண்டல வருமான வரித்துறை துணை இயக்குனர் யாசர் அராபத் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடந்தது.
பின்னர் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள தேசியமய மற்றும் தனியார் வங்கிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்றும் விக்டருக்கு சொந்தமான ஆலை மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விக்டரின் பங்குதாரர்கள் புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனர். அங்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள விக்டர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இதனால் இன்னும் பல்வேறு ஆவணங்கள், சொத்துக்களின் பட்டியல்கள் சிக்க வாய்ப்புள்ளது. மேலும் விக்டருக்கு கைதான தமிழக காண்டிராக்டர் சேகர் ரெட்டியுடன் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது 500, 1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் பல கோடிகளுக்கு மேல் பண பரிவர்த்தனை செய்துள்ளதாக தெரிகிறது. இது போன்று இவருடன் தொடர்புடைய சில முக்கிய நபர்களான தொழிலதிபர்கள், நகைக்கடை மற்றும் துணிக்கடை அதிபர்கள் போன்றவர்களின் பழைய ரூபாய் நோட்டுக்களையும் வாங்கி மாற்றிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்டரின் ரகசிய டைரியை கொண்டும், செல்போன்கள் அழைப்பைக் கொண்டும் பல்வேறு தொழிலதிபர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.
மேலும் விக்டருக்கு பல்வேறு பகுதிகளில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பல கோடி மதிப்புள்ள கட்டிடம், ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் பல கோடி மதிப்புள்ள தோட்டம் உள்ளது. தனது நிறுவனத்தின் அருகில் ரூ.3 கோடிக்கும் மேல் மதிப்பிலான நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவும் கட்டி வருகிறார். மேலும் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் பல கோடி மதிப்பிலான இடங்கள் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.






