என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் பிரபு (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராசு மகன் பிரபு (38). இவர்கள் இருவருக்கும் கடந்த புத்தாண்டு அன்று தராறு ஏற்பட்டது. இதனால் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராசு மகன் பிரபு மற்றும் நண்பர்கள் விஜய்(21), விணோத் (26), ராஜா(46) ஆகியோர் குணசேகரன் மகன் பிரபுவை கத்தியால் குத்தி தப்பி சென்றனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பிரபுவை 108 அம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து பிரபு மனைவி பானு உடையார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்குபதிவு செய்து பிரபுவை கத்தியால் குத்திய விஜய், விணோத், ராஜா ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவான பிரபு மற்றும் சக நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அரியலூர் அருகே இளம்பெண் கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில், அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17) என்பவர் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் (26) , நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கியதும் , நந்தனி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவே, ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது கூட்டாளியான அயன் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (28), வெற்றி செல்வன் (26) , கீழமாளிகையைச் சேர்ந்த திருமுருகன் (27) ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அரியலூர் அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள பெரியாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவரது மகள் வள்ளி (வயது 14). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. வள்ளி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் பெரியாகுறிச்சி பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக வள்ளி சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரேம்மணி (23) மற்றும் சீமான் (30) இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வள்ளி தனது தாயிடம் கூறினார். சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த வள்ளியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்மணி மற்றும் சீமானை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்தார்
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை பஸ் நிலையத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அரியலூர் கிளை சார்பில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லை  ஒட்டி, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து கூறியதாவது:-

    சாலை பாதுகாப்பு வார விழா மூலம் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழி முறைகள், உத்தரவு சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள் மற்றும் தகவல் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை சாலை பாதுகாப்பு வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    "விபத்தினால் வருவது துன்பம்! பாதுகாப்பினால் வருவது இன்பம், உரிமம் வாங்க எட்டு போடு! உயிரை காக்க ஹெல்மெட் போடு, படியில் பயணம்! நொடியில் மரணம், ஓடும் பேருந்தில் ஏறாதே! உயிரை பணயம் வைக்காதே, சீட்பெல்ட் அணிந்தால் பாதுகாப்பு! இதுவே பயணத்தின் உயிர்க் காப்பு''என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் மற்றும் கையேடுகளை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்த பேரணியை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

    எனவே, அரியலுர் மாவட்டத்தை சாலை விபத்துகள் நடைபெறாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் எ.சரவண வேல்ராஜ், கூறினார்.
    அரியலூர் அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள காங்கேயன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35). விவசாயியான இவர் அவரது நிலத்தில் கத்திரிக்காய் பயிரிட்டிருந்தார்.

    இந்நிலையில் தண்ணீர் இல்லாததால் கத்திரிக்காய்கள் அனைத்தும் கருகின. இதனால் மனவேதனையில் இருந்து வந்த செல்வகுமார் இன்று காலை வயலிலேயே வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இறந்தார்.

    இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் அருகே நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இறந்து விட்டார். இவரது மகள் நந்தினி (வயது 17), கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

    இவருக்கும் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வயது (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் செல்போனில் பேசி பழகி உள்ளனர். நாளடைவில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி நந்தினி திடீரென மாயமாகி விட்டார். அவரது தாயார் ராஜகிளி நந்தினியை பல இடங்களில் தேடினார். ஆனாலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே நந்தினியை அவருடன் பழகிய மணிகண்டன் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

    இது குறித்து கடந்த மாதம் 29-ந்தேதி ராஜகிளி இரும் புலிகுறிச்சி போலீசில் கீழமாளிகை மணிகண்டன் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்

    இதைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மணிகண்டன் தனக்கும் நந்தினி மாயமானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இதனால் போலீசார் மணிகண்டனை விடுவித்தனர்.

    தொடர்ந்து நந்தினியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் 2 வாரங்கள் ஆகியும் நந்தினி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று (14-ந்தேதி) கீழமாளிகை கிராம மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடினர். அப்போது அங்கு அழகு துரைக்கு சொந்தமான கிணற்று அருகே சென்ற சிலர் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


    கிணற்றுக்குள் பார்த்த போது ஒரு பெண் உடையின்றி நிர்வாண நிலையில் கிடந்ததை பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இரும்பு லிகுறிச்சி போலீசார் மற்றும் செந்துறை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    அப்போது பிணமாக கிடந்தது காணாமல் போன நந்தினிதான் என தெரியவந்தது. அவரது உடலை தாயார் மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

    நந்தினியின் உடலை அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் மீது மீண்டும் சந்தேகம் எழுந்தது.

    இதை தொடர்ந்து மீண்டும் மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் நந்தினியை சம்பவத்தன்று அழைத்து வந்து வீட்டில் அடைத்து கற்பழித்து கொலை செய்ததாகவும், இதற்கு தனது நண்பர்கள் உதவியதாகவும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மணிகண்டனுக்கு உதவியதாக அவரது நண்பர்கள் மணிவண்ணன், மற்றொரு மணிகண்டன், ராஜதுரை, வெற்றிச் செல்வன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    முதலில் போலீசார் மணிகண்டனை மட்டும் கைது செய்தனர். ஆனால் நந்தினியின் உறவினர்கள் அவரது கொலையில் உடந்தையாக இருந்த நண்பர்களையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி அரியலூர் பஸ் நிலையம் மற்றும் தாசில்தார் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வீரவளவன் தலைமையில் சாலை மறியல் செய்தனர்.

    அதன் பிறகு நண்பர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அரியலூர்:

    குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது -

    தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட குறைவாக அளவு பெய்த காரணத்தால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக அரியலூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் குறைவாகவே பெறப்படுகிறது. எனவே இந்நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    மேலும் குடிநீர் இணைப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுபவர்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    மேலும் மின்மோட்டார் வைத்து சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்களின் விபரம், குடிநீர் கசிவு மற்றும் குடிநீர் தேவை ஆகிய விபரங்களுககு 04329 220988 என்ற நகராட்சியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    அரியலூரில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வக்கில் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூரில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வக்கில் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவசங்கர் முன்னிலையில், மாவட்ட துணை செயலாளர் தனபால் வரவேற்று பேசினார்.

    மாநில இளைஞரணி இணைச்செயலாளர் சுபாசந்திரசேகர், கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருணாமூர்த்தி, தில்லை காந்தி, ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் லதா, மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், சந்திரசேகர், செல்வராஜ், கென்னடி, அசோகசக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன், மணிமாறன், ரங்காமுருகன், கண்ணன், நகரசெயலாளர் முருகேசன், கருணாநிதி, கோபாலகிருஷ்ணன், வக்கில் பிரிவு சின்னதம்பி, பொறியாளர் பிரிவு தங்கைஎழில்மாறன், இளைஞரணி தெய்வ இளையராஜா, மகளிரணி காந்திமதி உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்,

    இக்கூட்டத்தில்அரியலூர் மாவட்டத்தின் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்தினை தடுக்க சாலைகளின் நடுவே பிரிவு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகத்தை செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சுபாசந்திரசேகரரை மாநில இளைஞரணி இணைச்செயலாளராக நியமனம் செய்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க செயல் தலைவர் முக.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்ட முடிவில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தர்மதுரை நன்றி கூறினார்.

    திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி லட்சிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி லட்சிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் மணியன், மக்கள் சேவை இயக்க மாவட்ட விவசாய அணி செயலாளர் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி மண்டல இணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கீழகாவட்டாங்குறிச்சி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் மது அருந்துபவர்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.

    மேலும் மது இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதுடன் மனித உயிர்களை பறிக்கிறது. எனவே, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் லட்சிய தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). இவர் நேற்று ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள ஒரு கடையில் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது, அங்கு வந்து ஒருவர் மீது இடித்துவிடவே, அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சின்னதுரை ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து கடைவீதியில் சுற்றித்திரிந்த அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை, மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சேகர் (33) என்பது தெரியவந்தது. கடந்த 2001-ம் ஆண்டு நிலப்பிரச்சினை சம்பந்தமாக சேகர், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, அண்ணன் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கணேசன் என்பவரை வெட்டி கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் சேகர் உள்பட 3 பேருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சேகர் கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சேகரை கைது செய்தனர்.
    அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீடு சூறையாடப்பட்டது. குடிநீர் குழாயை உடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெற்குப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் -மின்னல்கொடி தம்பதியினரின் மகள் ராமப்ரியா(வயது 24). இவரும் அதே ஊரை சேர்ந்த குருநாதன் மகன் ராஜேஷ்(27) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ராமபிரியா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த ராமப்பிரியாவின் சகோதரர் தனது நண்பர்களுடன் சென்று ராஜேஷ் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார். மேலும் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த ஆழ்குழாய் கிணற்றின் இணைப்பையும் அடித்து உடைத்தனர். இதன் காரணமாக குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த பொதுமக்கள் , குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செந்துறை -ஜெயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு செந்துறை போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக ராமப்பிரியாவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்கு பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் பொருளாதார சீர்குலைவை கண்டித்து நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம்:

    500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவித்த மத்தியஅரசின் பொருளாதார சீர்குலைவை கண்டித்து நகர காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரத்திற்கு ஜெயங்கொண்டம் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் செங்கமுத்து தலைமை வகித்தார். ஐ.என்.டி.யூ.சி. அரியலூர் மாவட்ட தலைவர் தமிழ்மணி, மாவ ட்ட பொது செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் உத்தி ராபதி, மாவட்ட இளைஞ ரணி தலைவர் வில்சன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்டதலைவர் சீனிபாலகிருஷ்ணன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். பிரச்சாரத்தில் வேல்முருகன், தனஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக ஐஎன்டியூசி மாவட்ட துணைத்தலைவர் பாக்கியராஜ் வரவேற்றார்.

    இறுதியில் ஜெயங்கொண்டம் நகர பொது செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    ஆண்டிமடம் கடைவீதியில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் பாலு, ஜெயங்கொண்டம் தொகுதி தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கோ‌ஷம் எழுப்பினர். இதில் வக்கீல் பிரிவு தலைவர் வேல்முருகன், இளைஞரணி தலைவர் ராஜகோபால் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பெருந்திறளாக கலந்து கொண்டனர்.

    ×