என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூரில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    திருமானூரில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    திருமானூரில், மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடியை கண்டித்தும், அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கமலை, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உறுப்பினர் செல்லத்துரை, விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் பிச்சைப்பிள்ளை, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மேம்பாட்டிற்கு வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, கரும்பு விவசாய சங்க தலைவர் ஜெயபால், சாமிநாதன், ராஜதுரை, மணியன், மலர்க்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×