என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) ,விவசாயி. இவரது மகள் பவித்ரா (24). கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் - திருச்சி நெடுஞ்சாலையில் தனது வீட்டின்முன்பு நடந்து சென்றுகொண்டிருந்தபோது கார் மோதியதில் பவித்ரா கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து சண்முகம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி, மகன் ஆகியோருடன் மகள் பவித்ராவை அழைத்துக் கொண்டு கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இதனால் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டனர். இந்நிலையில் சண்முகத்தின் மகன் சதீஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது சாமி அறைக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.






