என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறுப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி அரியலூரில் ரூ.30 லட்சம் பணத்துடன் வாலிபர் ஓட்டம்
    X

    கறுப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி அரியலூரில் ரூ.30 லட்சம் பணத்துடன் வாலிபர் ஓட்டம்

    கறுப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி அரியலூரில் ரூ.30 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கறுப்பு பணம் மாற்றும் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அரியலூர்:

    கறுப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு அறிவித்தார்.

    இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே அளவுக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்

    மேலும் கறுப்பு பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும் ஆங்காங்கே கறுப்பு பணத்தை மாற்றும் முயற்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இந்த நிலையில் அரியலூர் பகுதியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதனை புதிய 2,000 ரூபாய் நோட்டாக மாற்றிக் கொடுக்கும் கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

    நேற்று தஞ்சையை சேர்ந்த ஒருவருக்கு மர்ம நபரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அந்த நபர் ரூ.30 லட்சம் வரை கறுப்பு பணத்தை கொண்டுவந்தால் உடனடியாக அதனை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அரியலூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜூக்கு வருமாறும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய அந்த நபர் தனக்கு தெரிந்த தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வசூல் செய்துள்ளார். பின்னர் அந்த பணத்துடன் அரியலூரில் உள்ள தனியார் லாட்ஜூக்கு சென்று மர்ம நபரிடம் அளித்தார். அப்போது பணத்தை மாற்றுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதுபற்றி லாட்ஜ் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த அரியலூர் போலீசார் ஒருவரை மட்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றவர்கள் பணத்துடன் தப்பி விட்டனர். பிடிபட்ட அந்த நபர் குறித்த விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கறுப்பு பணம் மாற்றும் கும்பலில் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கறுப்பு பணத்தை மாற்ற முயன்று அதனை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க தயங்கியுள்ளனர்.

    Next Story
    ×