search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு
    X

    ஜெயங்கொண்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு

    ஜெயங்கொண்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூருக்கு அடுத்து ஜெயங்கொண்டம் ஒரு முக்கியமான நகரமாகும். இங்கு உடையார்பாளையம் வட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இப்பகுதி 92 வருவாய் கிராமங்களைக்கொண்டது. ஜெயங்கொண்டம் நகரத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர். ஏற்கனவே தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற ஊர்களுக்கெல்லாம் செல்லும் பஸ்கள், லாரிகள் அணைக்கரை வழியாக சென்று வந்தன.

    இடைப்பட்ட காலங்களில் போக்குவரத்து அதிகம் ஏற்பட்டதால் ஜெயங்கொண்டத்தை அடுத்த மதனத்தூரில் புதிதாக பாலம் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. அதன்பின் கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஜெயங்கொண்டம் வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் இப்பகுதி தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும், அதிக வாகனங்கள் செல்வதாலும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெருத்த இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஜெயங்கொண்டத்தை சுற்றி புறவழிச்சாலை அமைக்கக்கோரி பொதுமக்களும், வியாபாரிகளும், தன்னார்வலர்களும் பல்வேறு வகையில் கோரிக்கைகள் வைத்து பார்த்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    நேற்று காலை ஜெயங்கொண்டம் – தா.பழூர் சாலை சார்பு நீதிமன்றம் அருகே உள்ள வளைவில் உத்தரபிரதேசத்தில் இருந்து, நாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்பார்மர் ஏற்றிவந்த 58 டயர்கொண்ட கனரக வாகனம் வளைவில் திருப்ப முடியாமல் அருகில் உள்ள வீட்டின் சுவற்றில் உரசியவாறு முன்னேறி செல்லமுடியாமல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இங்கு அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கு காரணம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி பகுதியில் உள்ள மணல் குவாரியில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு மணல் லாரிகள் இந்த வழியாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதுடன், 108 போன்ற ஆம்புலன்சுகள் செல்வதற்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இப்போக்குவரத்து இடையூறுகளை சரிசெய்ய விரைவில் ஜெயங்கொண்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×