என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுமி நந்தினி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச்சிறுமியின் குடும்பத்தினரை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அச்சிறுமியின் வீட்டில் தரையில் அமர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் உணவு சாப்பிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுமி நந்தினி கொலையில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்கவும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிடவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த சிறுமி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை ஒரு கட்சி சார்ந்தது அல்ல. இது தமிழகத்தின் 7½ கோடி மக்கள் சார்ந்த பிரச்சினை ஆகும். இதில் உரிய முடிவெடுக்க கவர்னருக்கு போதிய அவகாசம் தேவைப்படுகின்றது. கவர்னர் நேர்மையானவர். அவர் எடுக்கும் முடிவு நடுநிலையான நல்ல முடிவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 27). இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த 11-9-2016 அன்று அங்குள்ள குளத்திற்கு குளிக்க வந்த 16 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராம்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர் பஸ் நிலையம் முன்பு கடந்த 8-ந்தேதி தீபா ஆதரவாளர்களுக்கும், சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் உருட்டு கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதில் தீபா ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் கைத்துப்பாக்கியை காட்டி தங்களை மிரட்டியதாகவும், அவரது ஆதரவாளர்களான செந்தில், ராஜா, மோகன், கண்ணன், ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் விறகு கட்டையால் தாக்கியதாகவும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், அவரது ஆதரவாளர்கள் செந்தில், ராஜா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தீபா அணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பிரேம், செந்தில், புரட்சி சிவா, சுரேஷ், தமிழ்செல்வன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் கூறுகையில், “கடந்த 8-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் எனது தலைமையில் சிலர் ஊர்வலமாக சென்று அரியலூர் பஸ் நிலையம் முன்பு சசிகலா கொடும்பாவியை எரித்தோம். அப்போது அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் அ.தி.மு.க. அணியை சேர்ந்த செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கையில் உருட்டு கட்டைகளுடன் வந்து எங்களை கண்மூடித்தனமாக தாக்கினர். எனது அணியினரை காப்பாற்றவும், பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கவும் அரசு அனுமதியுடன் நான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காட்டியதும் தான் எதிரிகள் பின்வாங்கினர். இதனால் தான் நாங்கள் உயிர்பிழைத்தோம். இதனால் மிகப்பெரிய கலவரம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்று மதியம் விஜய் தனது மனைவி மற்றும் வெற்றி, அனுஷ்கா ஆகியோரை மொபட்டில் அழைத்து கொண்டு ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். ஜெயங்கொண்டம் கருவாட்டு ஓடை பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றோரு வாகனம் வந்ததால் விஜய், மொபட்டை ஓரமாக நிறுத்தினார். அப்போது உஷாவும், அவரது குழந்தைகளும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக விஜயின் மொபட் மீது மோதியது. இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் லாரி மோதியதில் உஷாவும், குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அப்போது தனது கணவரது உடலை பார்த்து உஷா கதறி துடித்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கருவாட்டு ஓடை பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்திற்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்து விஜயின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் வர்கூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(35) என்பவரை கைது செய்தனர்.
அரியலூர்:
தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என சசிகலா மீது செய்தியாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரியலூர் ராஜராஜ நகர் அருகே உள்ள ஜெ.தீபா பேரவை மாவட்ட அலுவலகத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கையில் சசி கலா உருவ பொம்மையுடன் அரியலூர் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு அவர்கள் வைத்திருந்த சசிகலாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இது குறித்து அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்டோர்கள் கையில் உருட்டு கட்டையுடன் வந்தனர். பின்னர் அவர்கள் ஜெ. தீபா பேரவையை சேர்ந்தவர்களை பலமாக தாக்கினர்.
இதில் முன்னாள் எம். எல்.ஏ. இளவழகன், தாய் ராஜா, மணிசந்திரன், வெங்கடேஷன் உள்பட பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. அந்த இடமே சிறிது நேரம் போர்க்களமாக மாறியது. சம்பவம் குறித்து அறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக அரியலூர் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் கண்கானித்து வருகின்றனர்.
பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான “பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்” அரியலூர் மாவட்டத்தில் 11.02.2017 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
அரியலூர் வட்டத்தில் பொட்டவெளி கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் ஓலையூர் கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் ஆனந்தவாடி கிராமத்திலும் நடைபெறவுள்ளது.
அரியலூர் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், உடையார்பாளையம் வட்டத்திற்கு அரியலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும், செந்துறை வட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரும், மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
பெரம்பலூரைச் சேர்ந்தவர் பெனட் (வயது 45). இவர் ஜெயங்கொண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகின்றார். அதே கோர்ட்டில் கீழ மாளிகை கிராமத்தை சேர்ந்த மோகன்(32) என்பவர் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் ஒரு வழக்கு தொடர்பாக தினசரி காலை, மாலை இருவேளையும் கையெழுத்திட்டு வருகின்றார்.
இந்நிலையில் நேற்று காலை கையெழுத்திட வந்த போது தன்னுடன் மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(52) என்பவரையும் அழைத்து வந்தார். இருவரும் குடிபோதையில் அலுவலக வளாகத்திற்கு நுழைந்து பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக தலைமை எழுத்தர் பெனட் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து எஸ்.ஐ செல்வம் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 220 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் நேரடியாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
திருமானூரை அடுத்த கீழக்கொளத்தூர் கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், கீழக்கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தைப்பூச தினமான வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) கீழக்கொளத்தூரில் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட காவல் துறை, வருவாய் துறை, கால்நடை துறை அதிகாரிகளிடம் முறைப்படி மனு அளித்துள்ளோம். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதனால் எங்கள் ஊர் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். எனவே மாவட்ட கலெக்டர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து ஒருவருக்கு பெட்டிக்கடை வைக்க ரூ.20 ஆயிரம், ஒருவருக்கு கறவை மாடு வாங்க ரூ.20 ஆயிரம், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 69 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.1 கோடியே 96 லட்சத்து 12 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரெங்கராஜன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு தி்ட்டம்) மங்கலம், புதுவாழ்வு திட்ட மேலாளர் முத்துவேல், தாட்கோ திட்ட மேலாளர் கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் 10-ந்தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த தலித் பெண் நந்தினி வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
இதை கண்டித்து எஸ்.சி. பிரிவு சார்பில் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாநில துணைத் தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்குகிறார். மாவட்டத் தலைவர் ரத்தினம் முன்னிலை வகிக்கிறார். மாநில தலைவராகிய நான் கண்டன உரையாற்றுகிறேன்.
நந்தினி படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். தலித்துகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. மாநில அரசு அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்டதற்கு போலீசாரின் அலட்சியமே காரணம் ஆகும். மேலும் சிறுமி காணாமல் போன நிலையில் பெற்றோர் புகார் அளித்த போது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதை தடுத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஆதிதிராவிட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.தி.மு.க. சார்பில் யாரை சட்டமன்ற தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் தேர்வு செய்வது என்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம் ஆகும். இதில் நான் கருத்து கூற ஒன்றுமில்லை.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்த ஒட்டு மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லாத நிலையில் ஒருமித்த கருத்து எடுத்திருப்பதை வரவேற்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சென்னை செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“தமிழகத்திற்கு தற்போது உள்ள மிகப்பெரிய ஆபத்து சீமைக்கருவேல மரங்கள் தான். இவை எதிர்காலத்தில் வளங்களை குறைக்கக்கூடியது. ஜல்லிக்கட்டுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதுபோல், அந்தந்த ஊரில் மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகளுடன் இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றார்.
பின்னர் நிருபர்கள், சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடுக்கின்ற முடிவு. ஓ.பன்னீர்செல்வத்தை எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தபோது நான் எந்த கருத்தும் கூறவில்லை. இன்றும் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பூவந்திக்கொல்லை பகுதி யைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (வயது 57) இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில் முத்து ராமலிங்கத்திற்கும், முத்துச் செல்வன் மனைவி சாந்திக்கிடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாந்தி மற்றும் அவரது மகன் ராஜேஷ் இருவரும் முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரை கட்டையால் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து முத்துராமலிங்கம் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொப்பம்பட்டி அருகே வயிறிசெட்டிப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40) விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் துறையூருக்கு சென்றுள்ளார்.
உப்பிலியபுரம் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகன விளக்கின் வெளிச்சம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள புளியமரத்தில் மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சம்பவம் குறித்து அறிந்த உப்பிலியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






