என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொபட் மீது லாரி மோதல்: வாலிபர் பலி- மனைவி, 2 குழந்தைகள் உயிர் தப்பினர்
    X

    மொபட் மீது லாரி மோதல்: வாலிபர் பலி- மனைவி, 2 குழந்தைகள் உயிர் தப்பினர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மொபட் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது 35). பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி உஷா(32). இவர்களுக்கு தேவா (11), வெற்றி (3), அனுஷ்கா(2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் விஜய் தனது மனைவி மற்றும் வெற்றி, அனுஷ்கா ஆகியோரை மொபட்டில் அழைத்து கொண்டு ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். ஜெயங்கொண்டம் கருவாட்டு ஓடை பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றோரு வாகனம் வந்ததால் விஜய், மொபட்டை ஓரமாக நிறுத்தினார். அப்போது உஷாவும், அவரது குழந்தைகளும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது கும்பகோணத்தில் இருந்து கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக விஜயின் மொபட் மீது மோதியது. இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் லாரி மோதியதில் உஷாவும், குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அப்போது தனது கணவரது உடலை பார்த்து உஷா கதறி துடித்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கருவாட்டு ஓடை பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்திற்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்து விஜயின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் வர்கூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(35) என்பவரை கைது செய்தனர். 
    Next Story
    ×