என் மலர்
செய்திகள்

அரியலூரில் தீபா-சசிகலா ஆதரவாளர்கள் மோதல்: தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்
அரியலூர்:
தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என சசிகலா மீது செய்தியாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரியலூர் ராஜராஜ நகர் அருகே உள்ள ஜெ.தீபா பேரவை மாவட்ட அலுவலகத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கையில் சசி கலா உருவ பொம்மையுடன் அரியலூர் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு அவர்கள் வைத்திருந்த சசிகலாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இது குறித்து அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்டோர்கள் கையில் உருட்டு கட்டையுடன் வந்தனர். பின்னர் அவர்கள் ஜெ. தீபா பேரவையை சேர்ந்தவர்களை பலமாக தாக்கினர்.
இதில் முன்னாள் எம். எல்.ஏ. இளவழகன், தாய் ராஜா, மணிசந்திரன், வெங்கடேஷன் உள்பட பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. அந்த இடமே சிறிது நேரம் போர்க்களமாக மாறியது. சம்பவம் குறித்து அறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக அரியலூர் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் கண்கானித்து வருகின்றனர்.






