என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே வழி தவறி வந்த மானை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்த வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பாப்பாக்குடி கிராம வயல்களில் ஒரு புள்ளிமான் சுற்றித்திறிவதாக மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடம் சென்று பார்த்தபோது வழி தவறி வந்த ஒரு புள்ளி மான் செய்வதறியாது திகைத்து நின்றது.  அதனை போலீசார் அவ்வூர் பொது மக்களின் உதவியுடன் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.    

    பின்னர் அரியலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வனக்காப்பாளர்கள் சந்திரசேகரன், சிவக்குமார் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் சென்று மானை பெற்று சென்றனர்.
    அரியலூர் அருகே நடந்து சென்ற 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து கைது செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தை சேர்ந்த சிறுமி திவ்யா(வயது 15, பெயர் மாற்றப் பட்டுள்ளது) . இவள் விளாங்குடி கிராமம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் திவ்யா அவரது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி (39) என்பவர் அந்த சிறுமியை வழி மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து திவ்யா, அவரது தாயிடம் கூறவே, அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கருணாநிதியை கைது செய்து அரியலூர் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி , கருணாநிதியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    அரியலூர் அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக டிராவல்ஸ் உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியன் கொல்லை மேலத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் டிரால்வஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

    இவருக்கும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அகரம் கிராமத்தை சேர்ந்த உஷா (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கண்டியன் கொல்லையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை தட்டி இருவரையும் அழைத்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே வெங்கடேசனும், உஷாவும் வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் 2 பேரும் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் வெங்கடேசன் தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் மீட்டு பார்த்தபோது கந்து வட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்ததாக எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    வெங்கடேசனின் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒரு வேன், கார், லோடு ஆட்டோ ஆகியவை இயங்கி வருகிறது. அந்த வாகனங்களை பைனான்ஸ் மூலம் வாங்கி இயக்கி வந்தார். இதற்காக மாதந்தோறும் தவணை செலுத்தி வந்தார். தவணையை செலுத்துவதற்காக சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

    10 பேரிடம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் கடன் வாங்கிய பணத்தை அவரது நண்பர்கள், உறவினர்களுக்கும் கடனாக கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அதிக வட்டி காரணமாக வெங்கடேசனால் அவர் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. மேலும் அவர் கடன் கொடுத்த நபர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களும் கொடுக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வெங்கடேசன் இது பற்றி அவரது மனைவியிடம் தெரிவித்ததோடு, தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். இதற்கு அவரது மனைவி உஷாவும் உடன்பட்டுள்ளார்.

    அதன்படி நேற்றிரவு இருவரும் வி‌ஷம் குடித்து வீட்டில் படுத்து விட்டனர். இன்று காலை அவர்கள் இறந்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கந்து வட்டி கொடுமை காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலா மணி. இவரது மகன் சிவானந்தம் (வயது 36). சென்னையில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரை சென்னையில் இருந்து வேப்பங்குளத்திற்கு காரில் அழைத்து வந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

    அப்போது அவரது உறவினரான திருவாரூர் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி மோகன் (39), ஒரத்தநாடு வட சேரி கீழத்தெருவைச் சேர்ந்த அருண் மகன் கோகுலகிருஷ்ணன் (14) ஆகிய 2 பேரையும் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்றார்.

    அவர்களது கார் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீன் சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி நிலை தடுமாறி சாலை ஒரம் உள்ள புளிய மரத்தில் மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த சிவானந்தம், பாரதிமோகன், கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்கள். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழகத்தில் பெரும் பரபரப்பான சூழலே காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிர்கட்சியினரை வெளியேற்றிவிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆதரவாளர்கள், எதிர்கட்சியினர் மற்றும் வாக்காளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கத்தின் மனைவி தேன்மொழிக்கு போன் மூலம் மிரட்டல் வந்ததாகவும் தேன்மொழி போலீசில் புகார் அளித்துள்ளார். தற்பொழுது சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தபின் மீண்டும் எம்.எல்.ஏ. வீடு திரும்புவார் எனவும், அதற்காக எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் வீடு மற்றும் அலுவலகத்துக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாவும் தெரிகிறது.
    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் 1500 குடும்பங்களுக்கும்மேல் வசித்துவருகின்றனர். இக்கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டுவந்து இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு பின்னர் ஒவ்வொரு தெருவிலும் உள்ள சிறிய சின்டிகேட்ஸ் டேங்கிற்கும், தெரு பொதுபைப்பிற்கும் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்துள்ளதாக தெரிகிறது.

    ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு முழுமையாக குடிநீர் ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறிய சின்ட்டெக்ஸ் டேங்கிற்கும், தெரு பொதுபைப்பிற்கும் குறைந்த அளவே குடிநீர் வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த சூரக்குழி கிராம பொதுமக்கள் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் மரியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பி.டி.ஓ ஸ்ரீதேவி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று சம்மந்தப்பட்ட துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ஆண்டிமடம் அருகே பைக் விபத்தில் கார் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் புண்ணியகோடி(வயது 60). இவர் தனியார் வாகன ஓட்டுனராக உள்ளார்.

    இவர் கடந்த 19-ம் தேதியன்று தனது உறவினரின் பைக்கை வாங்கிக்கொண்டு பொன்பரப்பியில் நடந்த உறவினர் கருமகாரியத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ஆண்டிமடம் அருகில் உள்ள கருக்கை பஸ்ஸ்டாப் அருகே இருந்த பேரிகார்டு (இரும்புசாலை தடுப்பு)-ல் பைக் மோதியது,

    இதில் புண்ணியகோடி பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-17-ம் ஆண்டிற்கு பயிர் மகசூலை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் கிராமத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-17-ம் ஆண்டிற்கு பயிர் மகசூலை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.

    அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது பயிர் அறுவடை சோதனைகள் உதவி வேளாண்மை அலுவலர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள், புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் இந்திய வேளாண் பயிர்காப்பீட்டுக் கழக பிரதிநிதிகள் முன்னிலையில் செய்யப்பட்டு வருகிறது. திருமானூர் வட்டாரத்தில், வாரணவாசி கிராமத்தில் வேலு என்ற விவசாயியின் வயலில் நெற்பயிரில் பயிர் அறுவடை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், உலர் எடையை உறுதி செய்ய வேண்டி 2 கிலோ அறுவடை செய்யப்பட்ட நெல் தானியங்களும் சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது என்று கூறினார். ஆய்வின்போது கலெக்டருடன், வேளாண்மை இணை இயக்குனர் சதானந்தம், வேளாண்மை துணை இயக்குனர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
    தம்பியை கொன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இளமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியின் மகன் பிரபாகரன் (வயது26). இவர் கடந்த 11.7.2016 அன்று தனது நண்பர்களுடன் அப்பகுதியிலுள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அவருடன் செல்வராஜின் 2-வது மனைவியின் மகனான ராஜேஷ்குமாரும் (18) விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது தம்பியான ராஜேஷ்குமாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராஜேஷ்குமாரின் தாய் செல்லப்பாங்கி அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் பிரபாகரனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    அரியலூரில் உங்களோடு நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வருகை தந்து மாவட்டத்திலுள்ள அனைத்து தொண்டர்களுடனும் குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டனர்,
    அரியலூர்:

    அரியலூர் பி.என்.எம். திருமகள் திருமண மண்டபத்தில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உங்களோடு நான் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேருராட்சி, ஊராட்சி, வார்டு கிளை கழக தொண்டர்களும், மகளிரணியினரும் அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்சியில் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், துணை செயலாளர்கள் உமாநாத், ஜாகிர், மாநில கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ், மாவட்ட செயலாளர் இராமஜெயவேல், மாவட்ட துணை செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், கவியரசன், தெய்வா, தலைமை செயற்குழு உறுப்பினர் எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னபாண்டு, ஜேக்கப், ரகுபதி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராணி ஜோசப், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஆனந்த், பாண்டியன், வேல்முருகன், முனியசாமி, மாவட்ட தொண்டரணி நல்லதம்பி, மதி, ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், ராஜேந்திரன், குமாரதேவன், செல்வராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கஜெயபாலன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரவி உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
    ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதிக்குள் போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேற வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் எச்சரித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஜெ. தீபா பேரவை செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதிக்குள் போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேற வேண்டும். போயஸ் கார்டனை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு விடவேண்டும். தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க அனுமதிக்க மாட்டோம்.

    தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கிய சசிகலா குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சருக்கே இந்த கதியென்றால் சசிகலா கையில் ஆட்சியை கொடுத்தால் தமிழக மக்களின் கதி என்னாவது?

    தமிழக மக்களை காப்பாற்ற ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்களை காப்பாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பிப்ரவரி 24-ந் தேதி நல்ல முடிவெடுப்பார். பொறுத்திருந்து பாருங்கள், ஒற்றுமையுடன் செயல்படுவோம். வெற்றி நமதே என பேசினார்.

    அரியலூரில் சிறுமி நந்தினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தின் அவமானமாக கருத வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (வயது 17) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் நந்தினி குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நந்தினியைப் போன்று பல பெண்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். இன்றைக்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்ற நிலையை அரசு உருவாக்கி விட்டது.

    நந்தினி கொல்லப்பட்ட சம்பவம் ஜாதி, மதத்தை தாண்டி சமூக அவல நிலையைக் காட்டுவதாக உள்ளது. இச்சம்பவத்தை தேசத்தின் அவமானமாக கருத வேண்டும். மேலும் கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தமிழக அரசியல் நிலை குறித்து சீமான் கூறியபோது,

    தனக்கு முழு ஆதரவு உண்டு என்று கூறும் அ.தி.மு.க. பொறுப்பு பொதுச்செயலாளர் சசிகலா, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை சொகுசு பஸ்களில் வைத்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இது தான் ஜனநாயகமா? இந்த நிலை மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×