என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டி மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்புஷ்பராஜ் (வயது 31). எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும், சில தொழில்களும் செய்து வந்தார்.இவரது நண்பர் சாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார் (45).இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு மதுபான கடையில் காசாளராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊரான சாக்கோட்டைக்கு வந்திருந்தார்.

    சம்பவத்தன்று இருவரும் சென்னை சென்றுவிட்டு காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை சதீஷ் புஷ்பராஜ் ஓட்டினார். செந்தில்குமார் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சென்னை- கும்பகோணம் சாலையில் பாப்பாக்குடி அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக, கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதின. இதில் காரில் பயணம் செய்த சதீஷ்புஷ்பராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மீன்சுருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காருக்குள் சிக்கிய 2 பேரின் உடல்களை ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.

    விபத்து குறித்து மீன் சுருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

    எனவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி மோட்டார்களை கொண்டு நீர் உறிஞ்சியதாக, 18 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கவும், நீர் வழித்தடங்களில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக பராமரிக்கவும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறுகள், நீர் நிலையங்கள் ஆகியவைகளை சரியான முறையில் குளோரின் மற்றும் தூய்மை செய்யும் பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதையும், அனுமதியின்றி மின்மோட்டார் உபயோகப்படுத்துவதை கண்காணித்திடவும் வருவாய்த்துறையில் வட்டாட்சியர்கள் மற்றும் வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர்கள் கொண்டு 48 ஊராட்சியில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்கண்ட அலுவலர்களுக்கு 7 முதல் 10 ஊராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊராட்சியில் உள்ள குடிநீர் விநியோகம் குறித்து தினந்தேறும் நேரடி தணிக்கை செய்து, நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டபொழுது, செந்துறை வட்டம், பொன்பரப்பியில் அனுமதி இன்றி மோட்டார்களை கொண்டு நீர் உறிஞ்சியதாக, 18 மின்மோட்டார்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திலும் ஏற்கனவே அனுமதியின்றி நீர் உறிஞ்சிய 18 மின்மோட்டார்கள் என 36 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், மாவட்ட அளவில் குடிநீர் விநியோகம் குறித்து அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக கட்டுப்பாட்டு அறை மற்றும் குழுவினர்களுக்கு வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்துநிலையம் அருகில் தமிழக அரசின் சாதனை குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்துநிலையம் அருகில் தமிழக அரசின் சாதனை குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

    இப்புகைப்படக்கண் காட்சியில் தமிழக முதலமைச்சரின் விவசாயிகளுக்கு வழங்கப்படும். சிறு,குறு விவசாயி கூட்டுறவு கடன் தள்ளுபடி, நலத்திட்ட உதவிகள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பாக இ - பொது சேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

    மேலும், விலையில்லா கறவைப் பசுக்கள், விலையில்லா வெள்ளாடுகள், மற்றும் கால்நடைகளுக்கு குறைந்த விலையில் தீவனப்புல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சத்துணவுத் திட்டத்தின் மூலம் சத்துமாவு உருண்டை வழங்குதல், திருமண உதவி மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல், மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை 250-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
    அரியலூர் அருகே விழப்பள்ளம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மீத்தேன் திட்ட சோதனைக்குழாயில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஆழ்துளை சோதனை குழாய் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பூமிக்கடியில் பெட்ரோல் இருக்கிறதா? என ஆய்வு செய்வதற்காக விவசாயிகளின் நிலங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகை பேசி, கையகப்படுத்தி ஆழ்துளை கிணறு அமைத்தனர்.

    அதன் மூலம் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க இருந்தது விவசாயிகளுக்கு தெரிய வந்தது. இத்திட்டத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விழப்பள்ளம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மீத்தேன் திட்ட சோதனைக்குழாயில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் வாயு கசிவை சரி செய்தனர்.

    இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை நெடுவாசலில் பொதுமக்கள் நடத்தி வரும் நிலையில், வாயு கசிவு ஏற்பட்டதின் காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்களோ? என போலீசார் எண்ணினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக விழப்பள்ளத்தில் உள்ள ஆழ்துளை சோதனை குழாய் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
    அரியலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண் நிர்வாண நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ளது மரவனூர் கிராமம். திருச்சி-சென்னை ரெயில் தண்டவாள பகுதியை யொட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தின் வடபுறத்தில் ஊத்தங்கால் ஓடை உள்ளது.

    இந்த பகுதியில் தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி மரவனூர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி கலைக்கோவன் அரியலூர் போலீ சில் புகார் அளித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்த பெண்ணின் அருகே அவரது உடைகள் கிடந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பெண் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா? அல்லது அந்த பெண் வெளியூரை சேர்ந்தவரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தென்வீக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள தேவாமங்கலம், குருவாலப்பர் கோவில், புதுக்குடி, பூவாயிக்குளம் ஆகிய இடங்களில் மீத்தேன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆய்வுக்காக ஆழ்குழாய் கிணறு அமைத்து, பரிசோதனை செய்யப்பட உள்ளது. புதுக்குடி கிராம மக்கள் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தி விட்டனர்.

    இதற்காக தேர்வு செய்யப்பட்ட மற்ற 5 இடங்களில் ஒன்றான விழப்பள்ளத்தில் தென்வீக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது நிலத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எரிவாயு பரிசோதனை ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து கடந்த 2 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு திருநாவுக்கரசு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு போலீசார் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து அந்நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு வந்து வாயு கசிவு ஏற்படுவதை தடுக்க அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் வாயு கசிவது சரி செய்யப்பட்டது. அதன் பிறகே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் மீத்தேன் திட்ட ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திரு மழபாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை விநாயகர், சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி சிலைகளை மலர்களால் அலங்கரித்து கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தின் முன்பு வைத்தனர்.

    தொடர்ந்து, கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், விபூதி, களபம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நாணல் புல் மற்றும் மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, நாதஸ்வர இசையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், ‘ஓம் நமசிவாய... சிவாய நம...’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். இதில் திருமானூர், கீழப்பழுவூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. இதில் உலக உயிர்கள் மேன்மையடையவும், அனைத்து உயிர்களும் எல்லா நன்மைகளும் பெற்று பசி, பஞ்சம் இன்றி உலகம் தழைத்தோங்கவும், நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் இந்த மாசிமக பெரு விழா நடைபெறுவதாக கூறப்பட்டது.

    தொடர்ந்து இரவு மஞ்சத்தில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலு வலர் அனிதா மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். வருகிற 8-ந்தேதி சுவாமிகள் திருக்கல்யாணமும், 10-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டமும் நடைபெறுகிறது.
    ஜெயங்கொண்டம் அருகே குழந்தையின்மையால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமம் புத்தர் புதுதெருவை சோர்ந்தவர் பாலுசாமி மகன் பாஸ்கர் (வயது 32). கூலிதொழிலாளி. இவருக்கும் மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இலையூரில் வசித்து வந்தனர்.

    இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வெகு நாட்களாக பாஸ்கர் மன உளைச்சலில் இருந்துள்ளார். மன ஆறுதலுக்காக கடந்த 15 நாட்களாக பாஸ்கரும் அவரது மனைவி கஸ்தூரியும் சலுப்பையிலுள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் பாஸ்கர் மட்டும் இலையூர் வந்து வீட்டில் இருந்தவர் மனமுடைந்து வி‌ஷமருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    மயங்கி கிடந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் இறந்து விட்டதாக கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் வருகிற 3-ந் தேதி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் வருகிற 3-ந் தேதி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

    உடையார்பாளையம் வட்டத்தில் குண்டவெளி (மே), இடையார், கோடாலிகருப்பூர் கிராமங்களிலும், அரியலூர் வட்டத்தில் அன்னிமங்கலம், ஏலாக்குறிச்சி கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறை கிராமத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.

    பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள ஒட்டக்கோவில் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகள் பூமிஅரசி (வயது 16) 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் பூமிஅரசி அரியலூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துவேல் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் பூமி தேவியை கள்ளக்குடி அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (21) என்பவர் கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிஅரசி மற்றும் விஜயனை தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் சுயதொழில் செய்வதற்கு கடனாக ரூ.1.2 கோடி நலத்திட்ட உதவிகளை வருவாய் அலுவலர் பத்மஜாதேவி வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட வருவாய் அலுவலர் பத்மஜாதேவி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 2015-16ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றமைக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளை பாராட்டி, காசோலையை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 35 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுயதொழில் செய்வதற்கு கடனாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் வங்கிகள் மூலம் நேரடி காசோலைகள் வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஸ்வரி, துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) திருமதி.மங்கலம், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் முத்துவேல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், வீரர், வீராங்கனைகள், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×