என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே விபத்து: 2 பேர் பலி
ஜெயங்கொண்டம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டி மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்புஷ்பராஜ் (வயது 31). எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும், சில தொழில்களும் செய்து வந்தார்.இவரது நண்பர் சாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார் (45).இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு மதுபான கடையில் காசாளராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊரான சாக்கோட்டைக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று இருவரும் சென்னை சென்றுவிட்டு காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை சதீஷ் புஷ்பராஜ் ஓட்டினார். செந்தில்குமார் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சென்னை- கும்பகோணம் சாலையில் பாப்பாக்குடி அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக, கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதின. இதில் காரில் பயணம் செய்த சதீஷ்புஷ்பராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாகினர்.
பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மீன்சுருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காருக்குள் சிக்கிய 2 பேரின் உடல்களை ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.
விபத்து குறித்து மீன் சுருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






