என் மலர்tooltip icon

    அரியலூர்

    நடிகர் வடிவேலு சினிமா படக்காட்சி போல் ராஜவீதியை காணவில்லை என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன், பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி வழிபட்டார். அவர், மாளிகைமேட்டில் உள்ள அரண்மனையில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் கணக்க விநாயகர் கோவிலை கட்டி, முதலில் கணக்க விநாயகரை வழிபட்ட பின்னரே, ராஜவீதி வழியாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜவீதி நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரண்மனையில் இருந்து ராஜவீதி மற்றும் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது பாதையே இல்லாமல் உள்ளது. இதனால் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ராஜவீதி வழியாக சென்று கணக்க விநாயகரை வழிபடுவதற்கான வாய்ப்பு குறைந்தது.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேஷ் லக்கானி, அந்த பாதையை பார்வையிட்டு, அதனை மீண்டும் சீரமைப்பதற்கான பணி தொடங்கிய நேரத்தில், அவர் பணி மாறுதல் காரணமாக சென்று விட்டார். பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில், ராஜவீதியை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தருமாறு ேகாரிக்கை விடுத்தும் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் அரண்மனையில் இருந்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் ராஜவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ‘கிணற்றை காணவில்லை’ என நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த சினிமா படக்காட்சி போன்று, ராஜவீதியை காணவில்லை என்று பொதுமக்கள் மனு அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆண்டிமடம் அருகே நாய் குறுக்கே சென்றதால், மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வக்கீல் பரிதாபமாக இறந்தார்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் உள்ள பட்டித்தெருவை சேர்ந்தவர் திருமாவளவன் (வயது 33). வக்கீலான இவர் சம்பவத்தன்று சொந்த வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் ஆண்டிமடம் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அகரம் கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால், அதன் மீது மோதாமல் இருக்க திருமாவளவன் பிரேக் பிடித்தார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற விழுந்தார்.

    இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட நிலையில் அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆண்டிமடம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினார். இது குறித்து திருமாவளவனின் தாய் சரோஜா ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி கீழக்காவட்டாங்குறிச்சி கிராம மக்கள் ஒன்றிணைந்து திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 58 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு 1962-ம் ஆண்டு முதல் 46 ஆண்டுகளாக 6 ஆயிரம் சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த துணை சுகாதார நிலையம் கரைவெட்டி, மேலக்காவட்டாங்குறிச்சி, குந்தபுரம், கீழக்காவட்டாங்குறிச்சி, சேனாபதி, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் பிரசவத்திற்கு பெரிதும் பயன்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு முதல் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்க்கக்கூடாது என்ற சுகாதார துறை மற்றும் தமிழக அரசின் உத்தரவால், இப்பகுதி கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

    துணை சுகாதார நிலையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பிரசவங்கள் பார்க்க அனுமதிக்கப்படாததால் கர்ப்பிணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே கீழக்காவட்டாங்குறிச்சி துணை சுகாதார நிலையத்தில் முறையாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்து, துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்காவட்டாங்குறிச்சி கிராம மக்கள் ஒன்றிைணந்து திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ஜெயங்கொண்டம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வம்(வயது 73). இவர் தனது மருமகள் காயத்ரியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது மருமகள் காயத்ரியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் காயத்ரி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்து குத்துவிளக்கு, 2 கொலுசுகள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள், ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில், காயத்ரி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு பரப்புரை செய்ய வந்த உதயநிதி வாகனத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திமுக-வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் மாவட்டந்தோறும் பரப்புரை செய்து வருகிறார்.

    இன்று  கண்டிராதீர்த்தம் கிராமத்தில் பரப்புரையை முடித்த உதயநிதி ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு பரப்புரை செய்ய வாகனத்தில் வந்தார். அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சி கொடியுடன் உதயநிதி காரை வழி மறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருமானூரில் பரப்புரைக்காக ஜி.கே. மூப்பனார் அரங்கம் முன் மேடை அமைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அரங்கத்தில் இருந்த ஜி.கே. மூப்பனார் பெயரை அழித்ததாக கூறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உதயநிதி வாகனத்தை மறித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கூறுகையில் ‘‘ஜி.கே. மூப்பனாரின் பெயரை அழித்து தி.மு.க. பிரசாரம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?. உதயநிதி உள்பட, திமுக நிர்வாகிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து திமுக மாவட்டச் செயலாளர் கூறுகையில் ‘‘இது திட்டமிட்ட செயல் அல்ல. அரங்கம் சீரமைக்கும்போது, அல்லது வர்ணம் பூசும்போது பெயர் அழிந்திருக்கலாம்’’ என்றார்.
    விக்கிரமங்கலம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது செட்டித்திருக்கோணம் காலனி தெருவைச் சேர்்ந்த பன்னீர்செல்வம் (வயது 45) என்பவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மதுவிற்றதாக கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். ஆனால், கடந்த 6 மாதங்களாக ஊதியம் குறிப்பிட்ட நாளில் வழங்கப்படுவதில்லை. நவம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. 

    மேலும் ஊதியத்தில் பிடிக்கப்பட்ட பிராவிடண்ட் பண்ட் பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைகண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி, வருவாய் துறை மற்றும் போலீசார் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். 
    அதனை ஏற்று தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி நேற்றைய தேதி வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக சம்பளம் மற்றும் இதர ெதாகைகளை வழங்கக்கோரியும் நேற்று காலை 6 மணியிலிருந்து நகராட்சி அலுவலக நுழைவு வாயி்ல் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    மாலை 6 மணி வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், நிர்வாகத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் இன்று(வியாழக்கிழமை) முதல் நிரந்தரப் பணியாளர்கள் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
    ஆண்டிமடம்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நேற்று அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பஸ்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், இந்து கோவில்கள் போன்ற இடங்களுக்கு வருபவர்கள் முககவசம் அணிந்து உள்ளார்களா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா, கிருமி நாசினி திரவம் பயன்படுத்துகிறார்களா என சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது முககவசம் அணியாத 9 பேருக்கு தலா ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒரு கடைக்கு ரூ.500-ம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ், இந்திய செஞ்சிலுவை சங்க ஆசிரியர் வேல்மணி, போலீஸ்காரர் ஆகியோர் ஈடுபட்டனர்.
    தா.பழூரில் இடிந்து விழும் அபாய நிலையில் குடும்பநல மைய கட்டிடம் உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் இந்த சுகாதார நிலையம் முதலில் குடும்பநல மையமாக செயல்பட்டது.

    இதற்கான கட்டிடம், குடும்ப நல மையத்திற்கு முதன் முதலில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் அருகே புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில் அலுவல் பணிகளுக்கு, மட்டும் பழைய கட்டிடத்தை பயன்படுத்தி வந்தனர்.

    பின்னர் அந்த கட்டிடத்தின் அனைத்து சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்து கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்ட பிறகு அலுவல் பணிகளை வேறு கட்டிடங்களுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் சேதமடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்படாமல் உள்ளது. சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் போன்றோர், பாழடைந்த அந்த கட்டிடத்தின் முகப்பில் உள்ள திண்ணையில் அமர்ந்து ஓய்வு எடுக்கிறார்கள்.

    எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில், நோயாளிகள் அமர்ந்து ஓய்வு எடுப்பது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிபவர்கள், அந்த கட்டிடத்தில் ஓய்வெடுப்பவர்களை பார்க்கும்போது, அங்கே அமராதீர்கள், பாதுகாப்பு இல்லை, என்று அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அங்கு வருபவர்கள் அந்த கட்டிடத்தில் அமரும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி, சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடும்ப நல மைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூரில் பயணிகள் நிழற்குடை, மைதானங்களில் அமர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் நகரில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 13 துறைகளில் சுமார் 3 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரி மூடப்பட்டது. பின்னர் அரசு அறிவித்தபடி கடந்த 7-ந் தேதி கல்லூரி திறக்கப்பட்டு, இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    மேலும், அரசு சார்பில் கடந்த 10 நாட்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பருவத்தேர்வு(செமஸ்டர்) அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் முதல் தேர்வுகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் அரியலூர் அரசு கல்லூரியில் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை, திருமானூர், கூத்தூர், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் காலை அரியலூருக்கு வந்து, சாலையோரங்களிலும், தெருக்களிலும், பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடைகளிலும், சில விளையாட்டு மைதானங்களிலும் அமர்ந்து, தேர்வுகளை எழுதுகிறார்கள். முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்திற்குள் தேர்வுகள் எழுத கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில் “இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதி, மதியம் 3 மணிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் வீட்டில் இருந்து தேர்வை எழுதினால் மதியம் 3 மணிக்கு எங்கள் விடைத்தாள்களை கல்லூரியில் சமர்ப்பிக்க முடியாது. எனவே நாங்கள் கல்லூரிக்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு தேர்வு எழுத இடம் கொடுக்கவில்லை. கல்லூரி வளாகத்திற்குள் செல்லவும் அனுமதியில்லை. எனவே கல்லூரிக்கு வெளியே, கிடைத்த இடத்தில் அமர்ந்து நாங்கள் தேர்வு எழுதுகிறோம். இதனால் எங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக கழிவறை போன்ற வசதியின்றி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழை பெய்தால் மேலும் சிரமம் ஏற்படும். எனவே நாங்கள் கல்லூரியில் தேர்வு எழுத அரசும், கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

    இது பற்றி அரசு கலைக்கல்லூரி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டபோது, ஒரு அதிகாரி கூறுகையில், "நாங்கள் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே தேர்வை எழுத அறிவுறுத்தினோம். அவர்கள் விடைத்தாள்களை பதிவு தபால் மூலமாகவும் அனுப்பலாம். இருப்பினும் அவர்கள் இங்கு வருகிறார்கள்", என்றார். ஆனால் விடைத்தாள்களை மதியம் 3 மணிக்குள் கல்லூரியில் நேரடியாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், தபால் முறை பற்றி கூறப்படவில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனை கல்லூரி நிர்வாகம் மறுத்தது.
    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பொதுமக்கள் மனுக்களை அலுவலகத்தின் வெளியே உள்ள பெட்டியில் போட்டு வந்தனர்.

    அதன்பின் கடந்த ஒரு மாதமாக காணொலிக் காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. நேற்று காணொலி காட்சி மூலம் குறைகளை தெரிவிப்பதற்காக ஏராளமான மக்கள் வந்து இருந்தனர்.

    அப்போது, அவர்கள் குறைகளை தெரிவிப்பதற்காக கணினி முன்பு சமூக இடைவெளியின்றி வரிசையாக காத்து இருந்தனர்.

    மேலும் பலர் முகவசம் அணியவில்லை. தற்போது, இங்கிலாந்து நாட்டில் புதுவிதமான கொரோனா நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் வருவதற்கு வருகிற 31-ந்் தேதி வரை தற்காலிகமாக தடை விதித்துள்ளது இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் குறைதீர்க்கும் கூட்டங்களில் பொதுமக்களை ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து அதன் பின் அவர்களது குறைகளை கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் இறந்து உள்ளனர்.

    சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மீன்சுருட்டி அருகே மொபட்- மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆசிரியர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு ராஜவீதியை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 49). இவர் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை தனது மகன் கலைக்கோவனுடன் ஜெயங்கொண்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

    கங்கை கொண்டசோழபுரம் கிராமம் அருகே வந்தபோது, எதிரே அந்த கிராமத்தை சேர்ந்த பிரகதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் பாண்டுரெங்கன் ஓட்டி வந்தார். அப்போது மொபட்டுக்கு பின்னால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் சந்தைதோப்பு பேரரசி தெருவை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ், லெனின் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியதில் எதிரே வந்த சின்னதுரையின் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியது. 

    இதில் 3 வாகனங்களில் வந்தவர்களில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சின்னதுரை, கலைக்கோவன், பாண்டுரெங்கன், ராகுல்ராஜ், லெனின் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இதுகுறித்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், விபத்தை ஏற்படுத்தியதாக ஸ்ரீராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×