என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் செங்குந்தபுரம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ சந்தான விநாயகர், ஸ்ரீ சப்த கன்னியர்கள், சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு, 14-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  விழாவை முன்னிட்டு 14ம் தேதி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  

    நேற்று காலை ஏரிக்கரையில் இருந்து பால்குடம் பால்காவடி அக்னி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து செங்குந்தபுரம் சமயபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மன்மாரியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றன.  

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    அரியலூரில் அ.தி.மு.க. கட்சி பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    அரியலூர்:


    அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர் பதவிகளுக்கு அமைப்பு தேர்தலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

    முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை எம்எல்ஏ தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:

    கடந்த 2010 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு தான் திருப்புமுனையாக அமைந்து, 2011&ல் அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. தொடர்ந்து பத்தாண்டு காலம் அ.தி.மு.க.வை யாரலும் வெல்ல முடியவில்லை.

    ஆனால், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெறும் 3 சதவீதம் வாக்குகள் மட்டுமே கூடுதல் பெற்று தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இது நிலையான வெற்றிக் கிடையாது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவரது வழியில் ஒருங்கிணைப்பாளர்களும் செயல்பட்டனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒராண்டுக்குள்ளாகவே, அ.தி.மு.க.வினர் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகின்றனர். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் தி.மு.க.வின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

    தற்போது தி.மு.க.வினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து உழைத்தால் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் நமக்கு பெரிய அளவில் வெற்றிக் கிடைக்கும். 2024&ல் அ.தி.மு.க. தான் ஆளும் கட்சியாக இருக்கும் என்றார் அவர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிகையில், திராவிட மாடல் ஆட்சி என்பது அ.தி.மு.க ஆட்சியே. திராவிட மாடல் ஆட்சி எனக்கூறும் தி.மு.க.வின் ஆட்சியில் பல்வேறு தரப்பட்ட மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தி.மு.க.வை வெற்றி பெறச்செய்து, ஆட்சியில் அமர வைத்த மக்களுக்கு, பல்வேறு பரிசுகள் காத்திருக்கிறது.

    தற்போது தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மிக விரைவில் மின்சார கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்தி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.

    அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் தேர்வு எதிர்ப்பு தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்று பேசினார், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், தி.மு.க., தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

    நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மாநில மொழி பாடத்தில் படித்த மாணவர்கள் 97 சதவீத மருத்துவ இடத்தை பெற்றனர். மத்திய கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் 3 சதவீத இடங்களை மட்டுமே பெற்றனர். ஆனால், நீட் தேர்வுக்கு பிறகு மத்திய கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் சுமார் 65 சதவீத மருத்துவ இடத்தை பெற்றுள்ளனர்.

    இது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. மேலும், மத்திய கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நகரப் பகுதி மற்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

    இவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பை முடித்து கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்ய முன்வருவார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். நீட் தேர்வால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் யாரும் வராத நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மூட வேண்டிய நிலை ஏற்படும்.

    இதையடுத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவரும் மத்திய அரசு மருத்துவத்தையும் தனியாருக்கு விற்பனை செய்ய வாய்ப்புண்டு. அப்போது, மருத்துவமனைக்கு உள்ளே செல்வதற்கே கட்டணம் செலுத்தி செல்லவேண்டிய சூழல் ஏற்படும்.

    எனவே, நீட் தேர்வு தேவையில்லை என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி வலியுறுத்தி வருகிறார் என பேசினார்.

    சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    அரியலூர்:

    சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகா காளியம்மன், மாரியம்மன் மற்றும் சுப்ரமணியர், செட்டி ஏரிக்கரை விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  

    பால், தயிர், சந்தனம், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபதராணை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இது போல் திருமானூர், ஜயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பழமை வாய்ந்த ஒப்பில்லாத அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி பால்குடத் திருவிழா சனிக்கிழம்ஷ நடைபெற்றது. வஞ்சத்தான் ஓடையில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை சுமந்துக் கொண்டு முக்கிய வீதி வழியாக சென்று கோயிலை அடைந்தனர்.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபதாரணை காண்பிக்கப்பட்டது.

    சென்னை,கடலூர்,புதுக்கோட்டை, தஞ்சாவூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அம்மாளை தரிசனம் செய்தனர்.
    அஸ்தினாபுரம் முருகன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.
    அரியலூர்

    அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்திலுள்ள முருகன் கோயிலில் தேரோட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    இக்கிராமத்தில் 23 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று தேர்ரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நிகழாண்டு கோயில் திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று காலை நடைபெற்றது. முன்னதாக வள்ள, தெய்வாணை சமேத முருகன் மற்றும் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் , திரவியப் பொடி,

    தேன் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தனர்.

    தேர் அஸ்தினாபுரம் கிராமத்தை சுற்றி நிலையை அடைந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு தேர்ந்தடுக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    அரியலூர்:

    அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆண்டிமடம் ஒன்றியம் சிலுவைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 

    பட்டணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் நிகழாண்டு சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளிகளுக்கு கேடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் வழங்கினார். கேடயங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர். 

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி, அரியலூர் வட்டார கல்வி அலுவலர்கள் நீலமேகம், கலியபெருமாள், 

    ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் விளாங்குடி பள்ளி தலைமையாசிரியர் நளினா நன்றி கூறினார்.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக 550 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
    அரியலூர்:

    வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாய பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நடப்பு 2021-22ம் ஆண்டு ராபி பருவத்தில் மீண்டும் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் பெரம்பலூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக உளுந்து 550 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உளுந்து விளைப்பொருள்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து நன்கு உலர வைத்து அயல் பொருள்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோவுக்கு ரூ.63 வீதம் கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மாவட்டத்தில் உளுந்து விளை பொருள் மே 15ந் தேதி வரை கொள்முதல் செய்யப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள் ஆகிய ஆவணங்களுடன் ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து விளைப்பொருளை விற்பனை செய்து பயனடையலாம்.

    இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    தேவாலயங்களில் புனித வெள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளி திருவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பங்குதந்தை அதிபர் சுவைக்கின் தலைமை-யேற்று நடத்திவைத்தார் உதவி பங்குதந்தை இன்பன்-ராஜ் முன்னிலைவகித்தார் நிகழ்சிக்கு ஏராலமான கிருஸ்தவ மற்றும் மாற்று-மதமக்களும் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி ஏற்றுக் கொன்டு ஏசுகிருஸ்து பாதங்களில் முத்தமிட்டு பிராத்தனை செய்து-கொன்டனர்.
    -

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அரியலூர் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    அரியலூர்:

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட சிவன் கோயில்களிலுள்ள குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள், பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டன.  

    இதே போல் அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர், தா.பழூர், பொன்பரப்பி, கீழப்பழுவூர் உள்ளிட்ட பகுதி சிவன் ஆலயங்களிலுள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    தமிழ் புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு தரிசனம் நடைபெற்றன.  அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷ்ணு கனி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
    அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    அரியலூர்:

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடிட முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர்  ரமண சரஸ்வதி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    சமத்துவ நாள் உறுதிமொழியான சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,  

    ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,  

    சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என மாவட்ட  கலெக்டர் ரமண சரஸ்வதி உறுதிமொழியினை வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, வட்டாட்சியர்கள் அமுதா, முத்துலெட்சுமி, சந்திரசேகர், குமரையா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    அரியலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூரில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல்,

    தா. பழூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையிலும், நாம் தமிழர் கட்சி குமார் தலைமையிலும்,

    சமத்துவ மக்கள் கட்சி ராஜீவ்காந்தி தலைமையிலும், கம்யூனிஸ்ட் கட்சி துரைசாமி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தண்டபாணி தலைமையிலும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ராஜாக்கொல்லை தெரு, சின்னவளையம், பெரியவளையம் பகுதிகளிலும் திடீர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். 

    அப்போது அந்தந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45), ஜெயங்கொண்டம் ராஜாக்கொலைத் தெருவைச் சேர்ந்த கலிராஜ் (64) என்பதும், மேலும் அவர்கள் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பதும் தெரிய வந்தது.  

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    ×