search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    மத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2020-2021-ம் நிதியாண்டு துவக்கத்தில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பஞ்சு தற்போது ஒரு லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 162 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

    சென்ற ஆண்டு இறுதியில், ஜவுளித்தொழில் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளுக்கு காரணங்களாக ஆயத்த ஆடைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட இருப்பதையும் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 சதவீத வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டன.

    இந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் அறிக்கைகள் விடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன். இதனையடுத்து, ஆடைகள் மீதான 12 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு மட்டுமல்லாமல், பஞ்சுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அண்மையில் நீக்கியது.

    இதனைத் தொடர்ந்து பஞ்சு விலை குறையும் என்று அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் எதிர்பார்த்தனர். ஆனால், நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.

    இந்த சூழ்நிலையில், நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருவதாகவும், தொடர்ந்து உற்பத்தி செய்ய இயலாத நிலையில், நூல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

    மத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. வாணிகம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சினை பதுக்கி வைத்து, பற்றாக்குறை ஏற்படுத்தி, விலை ஏற்றத்திற்கு யாராவது காரணமாக இருக்கிறார்களா என்பதையும், விலை உயர்விற்கு என்ன காரணம் என்பதையும் கண்டறிய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது.

    எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து, நூல் விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×