search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப தமிழக அரசு தீவிரம் - முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு

    நிவாரண பொருட்களை டெல்லி வழியாக இலங்கைக்கு அனுப்புவதா? அல்லது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இங்கிருந்து அனுப்புவதா? என்பது பற்றி இன்று முடிவு செய்யப்படுகிறது.
    சென்னை:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் எல்லா பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.

    பெட்ரோல், டீசல் கிடைக்காததால் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்எண்ணெய் வாங்க பொதுமக்கள் 6 மணி நேரம் காத்திருக்கின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

    நிலக்கரி தட்டுப்பாட்டால் இலங்கையில் 8 மணி நேரத்திற்கும் மேல் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் செயல்பட முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

    அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்ட காரணத்தால் மக்கள் வீதிகளுக்கு வந்து போராடி வருகின்றனர்.

    இதனால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றன.

    கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி உதவியை இந்தியா வழங்கியது.

    அதுமட்டுமின்றி 4 லட்சம் டன் எரி பொருளையும் வழங்கியது. 1 பில்லியன் கடன் வசதியின் கீழ் 40 ஆயிரம் டன் அரிசியும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு வசதியாக குறுகிய கால கடனாக இந்தியா 500 மில்லியன் டாலர்களையும் வழங்கி உள்ளது. 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களையும், 760 கிலோ அளவில் 107 வகையான மருத்துவ உபகரணங்களையும் இந்தியா வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்க கோரி சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

    அதில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க உரிய அனுமதியை வழங்க வேண்டு என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ரூ. 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ. 15 கோடி மதிப்பில் குழநதைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

    இலங்கைக்கு உதவ அனைத்து கட்சி தலைவர்களும் இதே போல் ஆதரவு தெரிவித்தனர். சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் அன்றைய தினமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த கடிதம் கிடைத்ததும் தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விரிவான கடிதம் எழுதி இருந்தார்.

    அதில் இலங்கை அரசுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வதில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படலாம் என அதில் தெரிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து மத்திய அரசு வழியாக இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    40 ஆயிரம் டன் அரிசி, 50 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பிலான 137 உயிர் காக்கும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த பொருட்களை டெல்லி வழியாக இலங்கைக்கு அனுப்புவதா? அல்லது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இங்கிருந்து அனுப்புவதா? என்பது பற்றி இன்று (திங்கட்கிழமை) முடிவு செய்யப்படுகிறது.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் இன்று மாலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவெடுக்க உள்ளார். அதன் பிறகு இலங்கைக்கு உதவி பொருட்கள் விரைந்து அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழக அரசு செய்யும் இந்த மனிதாபிமானமிக்க உதவிக்காக இலங்கையில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×